இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Saturday 13 November, 2010

தமிழ்த்தூது - பாரதி வழி

[பாரதியின் கிளிக்கண்ணியின் வடிவமைப்பில் கிளிக்குப் பதில் தமிழை விளியாகக் கொண்டவை - தமிழ்க்கண்ணிகள். காதலியிடம் தூது செல்ல தமிழை வேண்டியது!]

காதலியின் அடையாளம் மற்றும் ஊரை உரைத்தல்

எட்டியிருந் தும்மன
    ஏட்டில் நிறைபவள்
சுட்டும் சுடர்விழியாள் – தமிழே!
    தூயமென் நன்மொழியாள்!                                ௧

கன்னலின் தேனிநல்
    கனியின் இனியவள்
என்னவ ளைக்காண்பாய் – தமிழே!
    என்னிலை எடுத்துரைப்பாய்!                                ௨

பொன்னேறு மலர்களில்
    புதுமது வண்டுணும்
பொன்னேரி ஊராள் – தமிழே!
    புறப்படு நீதூதே!                                                        ௩

தண்மலர் இதழினைத்
    தானுணும் வண்டென
கண்கள வையிருக்கும் – தமிழே!
    காதலி யின்முகத்தில்!                                         ௪

திங்களின் கீற்றென
    திருநுதல் ஒளிருமே
மங்கைய வளிடமென் – தமிழே!
    வாட்டத்தை உரைத்திடுநீ!                                ௫

மென்னகைக் கணைகளை
    விடுத்துயிர் பறிப்பவள்
என்னகம் இருப்பவளே – தமிழே!
    எந்துயர் போக்கசொல்லே!                                ௬


தமிழே, உன்னை அன்றி வேறெதையும் நாடேன்...

அன்னமும் மேகமும்
    அணிமயில் தென்றலும்
என்றெதை யும்நாடேன் – தமிழே!
    இரக்கிறேன் உன்னருளே!    ௭

வள்ளியைக் குறிஞ்சியின்
    மாண்புடைக் குறத்தியைக்
கள்ளச் சிறுகுமரன் – தமிழே!
    கைக்கொள உதவினையே!                                ௮


தூது செல்ல கையூட்டு தருவேன்...

பாட்டினில் உனைவைத்துப்
    பலப்பல புகழ்மொழி
நாட்டுவேன் நன்றியோடே – தமிழே!
    நயந்துநீ செல்கதூதே!                                ௯

பிறமொழி நூல்களைப்
    பெயர்த்துநான் தருகுவன்
திறமொழி உன்னுருவில் – தமிழே!
    தெரிந்துநீ செல்கதூதே!                                ௧0


அவளும் உன்னைப் போன்றவளே, எனவே தயங்காது செல்க தூது...
[தமிழுக்கும் காதலிக்கும் இரட்டுற மொழியப்பட்டவை]

இன்மொழி படைத்ததால்
    இசையொடு இசைதலால்
உன்னைதான் நிகர்த்தவளே – தமிழே!
    உயிரெனக் கிருவருமே!                                ௧௧

மனத்துயர் துடைப்பதில்
    வந்துளம் நிறைவதில்
உனையவள் நிகர்த்தவளே – தமிழே!
    உயிரெனக் கிருவருமே!                                ௧௨

மதுரையில் வளர்ந்ததில்
    வளகவி அருள்வதில்
மதுவுனை நிகர்த்தவளே – தமிழே!
    உயிரெனக் கிருவருமே!                                ௧௩

சிலம்பதை அணிவதில்
    சிறப்புகள் அடைவதில்
நிலவுனை நிகர்த்தவளே – தமிழே!
    நீங்களெ னக்குயிரே!                                ௧௪


தமிழின் சிறப்பும் அவளின் சிறப்பும்...

[சங்கவிலக்கியம்]
கபிலரின் குறிஞ்சியில்
    கள்ளென நிறைதிநீ
அபிதநல் அமுதவளைத் – தமிழே!
    அடைந்திட தூதுசொல்லே!                          ௧௫
[அபிதம் – பருகப்படாதது]

[சங்கமருவிய கால இலக்கியம்]
சீரெழு குறளினில்
    திருவொடு திகழ்திநீ
சீரெழும் என்னவளைத் – தமிழே!
    சீக்கிரம் எனக்கருளே!                                ௧௬

சேரமான் தம்பியின்
    சிலம்பினில் வாழ்திநீ
ஈரமான் விழியினாளைத் – தமிழே!
    இக்கணம் எனக்கருளே!                                ௧௭
   
[சமய இலக்கியம்]
சம்பந்தன் துதிகளில்
    தவமெனச் சேர்திநீ
வம்புசெய் விழியினாளைத் – தமிழே!
    வந்திட தூதுசொல்லே!                                ௧௮

கம்பனின் பாட்டினில்
    கவினுற வாழ்திநீ
அம்புறை விழியினாளைத் – தமிழே!
    அடைந்திட தூதுசொல்லே!                        ௧௯

[புதுக்கவிதை]
புதுப்புதுக் கவிகளில்
    பொலிவொடு வளர்திநீ
மதுபொழி விழியினாளைத் - தமிழே!
    வந்திட தூதுசொல்லே!                                ௨0

அவளை என்னிடம் சேர்த்து விடு...

அன்னையும் தோழியும்
    ஆருயி ரும்எனக்[கு]
உன்னைப் போலவளும் – தமிழே!
    உதவிடு தூதுசென்றே!                                ௨௧

Sunday 7 November, 2010

இயற்பியலாளனும் கவிஞனும் புலவனும்...

[இயற்பியலாளனின் காதல், கவிஞனின் வெளிப்பாடுகள், புலவனின் யாப்புப்பெயர்ப்புகள்!]
உன்
இருத்தலின் ஈர்ப்புவிசையில்
என்
நொடிக்கூறும் நாட்களாகிறது
கணங்களின் கனத்தில்
கனமிழக்கிறது மனது!
[இன்னிசை வெண்பா]
உந்தன் இருத்தலின் ஈர்ப்பு விசையில்
எனது நொடிக்கூறும் நாட்களாய் ஆக
கனக்கும் கணங்களில் தானும் இழக்கிறது
தன்கனத் தைஎன் மனது.


விழியென்னும்
கருப்புக் குழி
விழுங்கி விடுகிறது
என்
பார்வை ஃபோட்டான்களை!

[குறள் வெண்பா]
விழுங்குது என்பார்வை ஃபோட்டான் களைத்தான்
விழியின் கருப்புக் குழி!


நினைவின் அழுத்தமும்
நீதரும் வெப்பமும்
நிகழ்த்திவிடுகின்றன மனதுள்
அணுக்கரு வினைகளை...
பெருகும் வினைகள்
தருகின்ற ஆற்றலில்
பிறக்கின்றது மனது
புதியதொரு விண்மீனாய்!

[இன்னிசை வெண்பா]
நினைவின் அழுத்தமும் நீதரும் வெப்பமும்
என்னுள் நிகழ்த்தும் அணுக்கரு கூட்டு
வினையால் புதியதோர் விண்மீனாய் என்மனம்
அன்பே பிறக்குது இன்று!


நீ கதிரானால் தான் கோளாய்
நீ கருவானால் தான் மின்னாய்
சுற்றிக் கொண்டே இருக்கும்
உன்னையே என் மனம்!

[இன்னிசைச் சிந்தியல் வெண்பா]
கதிரானால் கோளாய் கருவானால் மின்னாய்
எதுவானா லுமதற்(கு) ஏற்பவே தானுமென்றும்
உன்னையே சுற்றும் மனது!

நீர் ஆவியாகும்
வெப்பத்தில் என்பது
இயற்பியல்,
என்
ஆவி நீராகிறதே
உன்
பார்வை வெப்பத்தில்
இது என்ன
முரணியலா?

[இன்னிசைச் சிந்தியல் வெண்பா]
நீராவி ஆகும் நெருப்பில் இயற்பியல்
நீபார்க்க என்னாவி நீரா கிறதே
முரணியலா என்ன இது?

உன்
காந்தக் கருவிழியில்
மூழ்கும் என்
கண் கடத்திகளில்
பிறக்கிறது
காதல் மின்சாரம்!

[குறள் வெண்பா]
காந்தக் கருவிழியில் கண்கடத்தி மூழ்கிட
பாய்ந்து பரவுது மின்.

உன்னை
உயிர் என்பதா?
அதுவும் ஒருநாள்
பிரிந்திடுமே...
என்றும் பிரியாதவளே
உன்னைத்
’தமிழ்’ என்பேன் நிலைத்து!

[நேரிசை வெண்பா]
உன்னை உயிரெனவோ ஓர்நாள் அதுவும்தான்
என்னைப் பிரியும் இனியவளே – என்றென்றும்
என்னைப் பிரியா(து) இருப்பவளே இன்னமுதே
உன்னைத் தமிழென்பேன் நான்!

Wednesday 3 November, 2010

நீயும் கவிதைகளும்...

வெறுமையும்
கரையாத காலமும்
வெள்ளைத்தாளும் பேனாவும்
வைத்துக் காத்திருக்கும் பொழுதெல்லாம்
வராத கவிதைகள்
கண்முதல் கருத்துவரை
உன்னை உள்வாங்கிக் கொண்டிருக்கையில்
வருகின்றனவே – ஏனோ?

ஒவ்வொரு சந்திப்பிற்கும்
ஒன்றுதானா தருவாய்?
உணர்த்திவிடேன் ஒட்டுமொத்தமாய்
உன்னோடியைந்த கவிதைகளை,
இப்பொழுதே எழுதி வைத்துவிட்டு,
இடைஞ்சலின்றிக் காதலிப்பேன்...

என்
’பென்’ மையின்
கவிதைகளும் கிறுக்கல்களாகின்றன
உன்
கண் மையின்
கிறுக்கல்களும் கவிதைகளாவதால்!

Saturday 30 October, 2010

மழையில் நனைந்த கவி...

[நேற்றைக்குப் பொழிந்த மழை தந்த பரிசுகள் இரண்டு - இந்தக் கவிதைகள் & ஜலதோஷம் :-) முன்னதை மட்டும் தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்!]

இருண்ட முற்பகலின்
மெல்லிய தூறலில் நனைந்த
குளிர்ந்த காற்று
சன்னலைத் திறக்கையிலெல்லாம்
திறக்கிறது
என் மனதையும்...

துவங்கிய மழையைக் கண்ட
எல்லாப் பறவைகளும்
ஒதுங்க இடம் தேடத்
தான் மட்டும் தன்
சிறகுகளை விரித்துக்கொண்டு கிளம்புகிறது
என் மனது...



வாழ்க்கைக் கூத்திற்குப் போட்ட
அத்தனை வேஷங்களையும்
கரைத்துக் கழுவி
என்னை ‘நான்’ ஆக்குகிறது
என்னை நனைத்த மழை!

மழையைக் கண்டவுடன்
நனைவதற்காக
எனக்கு முன் ஓடுகிறான்
எனக்குள் இருக்கும் சிறுவன்...
அக்கறையான அம்மாவைப் போல்
அவன் கையைப் பிடித்துத் தடுக்கிறது
வளர்ந்துவிட்டதன் தயக்கம்!

நின்ற மழையோடு
நின்று விட்டன கவிதைகளும்
மழையில் கழுவப்பட்ட
மரங்களின் பச்சையாய்
மிச்சமிருக்கிறது மனதில்
மிளிரும் மகிழ்ச்சி...

Saturday 23 October, 2010

தமிழ்த்தேனிக்கு வாழ்த்து

அண்ணா நகர் தமிழ்ப்பேரவை
சென்னை.
09-10-2010

திருக்குறள் பரப்புனர், தமிழ்த்தேனி


புலவர். சா. அந்தோணி சாமி
அவர்களுக்கு

வாழ்த்துப்பாக்கள்

    ”திருக்குறள் பரப்புனர்” என்ற அடைமொழியுடன் ஒரு மனிதரைச் சந்தித்ததில் நான் பெரிதும் மகிழ்ந்தேன். அவர் மக்கள் திரளாகக் கூடும் பேருந்து நிறுத்தம் போன்ற இடங்களுக்கு விடுமுறை நாட்களில் எல்லாம் சென்று கையில் ஒலிபெருக்கியுடன் திருக்குறளின் அருமை பெருமைகளைச் சொல்லி, ’திருக்குறளைப் படியுங்கள்!’ என்று அறிவுறுத்தும் பணியைச் செய்து வருகிறார் எனத் தெரிந்து கொள்ளும் பொழுதில் எந்த உணர்வுடைய தமிழனால்தான் அவரைப் பாராட்டாமல் இருக்க இயலும்?


    அவரைப் பாராட்டுவதோடு நின்று விடாமல், அவரது உயர்பணிக்கு நாமும் நம்மால் ஆன உதவியைச் செய்து, திருக்குறளைக் கற்று–கற்பித்து வாழ்வில் சிறப்போம் என திருவள்ளுவனாரின் பொற்பாதங்களைத் துணையாகப் பற்றி வேண்டுகிறேன். நன்றி! [திருக்குறள் பரப்புனர் புலவர். சா. அந்தோனி சாமி அவர்களின் கைப்பேசி எண் : 90432 18568]
   

இயற்கும்மி

முப்பாலில் நம்வாழ்வைச் சீராக்கவே – திரு
வள்ளுவனார் தந்தார் குறளெனவே
எப்போழ்தும் இன்னூலின் மாண்புணர்ந்தே – அதை
எல்லோரும் கற்கென கும்மியடி!           

என்றென்றும் குன்றாத சீர்கொண்டதே – குறள்
எம்மக்கள் இன்றோ அதைமறந்தார்
இன்றந்த மாயையைப் போக்கிடவே – தமிழ்த்
தேனியும் வந்ததே; கும்மியடி!           

வாழ்வுறு மேயினி வாழ்வுறுமே – குறள்
கற்றென் இனமது வாழ்வுறுமே
தாழ்விலை யேயினி தாழ்விலையே – தமிழ்த்
தாய்க்கிவ் வுலகினில்; கும்மியடி!       


சமனிலைச் சிந்து

பாரினில் உயர்மொழி தமிழே – இதைப்
    பாவமென் மக்களுணர்ந் திலரே,
சீர்மிகும் சிறப்பினுக் கெல்லை – புகழ்
    திருக்குறள் நூல்பெற்றது அன்றோ?
”யாரிதை இன்னாளில் கற்பர்?” – எனல்
    யாவர்க்கும் மடமையே என்பேன்!
வேரினை அறுத்தெறிந் திட்டே – செடி
    மண்ணில் நிலைபெறல் உண்டோ?       


இருளொடு சேர்ந்ததெம் அறிவு – அதை
    இகல்வெல்ல இருப்பதோர் நூலே,
திருக்குறள் என்பதவ் வொளியே – புவி
    திகழ்ந்திட திறம்தரும் கதிரே!
மருள்மறைந் தென்னினம் ஓங்க – புகழ்
    முழுமையும் அடைந்துயாம் வாழ
ஒருதமிழ்த் தேனியும் உண்டே – அதன்
    உயர்பணி குறள்பரப் புதலே!           


வாழ்கவத் தேனியும் வாழ்க – அதன்
    வாழ்வுயர்த் தும்பணி வாழ்க!
வாழ்கநல் குறளதும் வாழ்க – புவி
    வாழநல் புகழொடு வாழ்க!
வாழ்கநம் தாய்த்தமிழ் வாழ்க – அவள்
    மலரடி வாழ்த்திட வாழ்க!
வாழ்கவென் இனத்தவர் எல்லாம் – இனி
    வீழ்விலை உயர்வதே! வாழ்க!!           

அன்புடனும் பணிவுடனும்,
கா. விஜயநரசிம்மன்

Tuesday 12 October, 2010

காதல் தேர்தலுக்கான பிரசாரம்

(என்னவள் என் காதலை ஏற்றுக் கொள்ளாத நிலையில், அவள் அதை ஏற்க வேண்டி பாடப்பட்டது)

வாக்களிப்பீர்! வாக்களிப்பீர்!
கன்னி மனதின் காரணங்களே! என்
காதல் கனிந்திட வாக்களிப்பீர்!

வாக்குறுதி பல தந்து
வாக்கு வாங்கும் விளையாட்டல்ல
காதல் என்ற போதும்
களத்தில் இறங்கிவிட்டேன்
களைத்து நான் போகமாட்டேன்!

போட்டியென்று யாருமில்லை!
அன்னபோஸ்டில் வெற்றி யில்லை!
கன்னியவள் கரைய வில்லை, எனக்கோ
காதல் ஓட்டு போடவில்லை!

தேர்தல் இவள் நடத்தவில்லை, என்னை
தேர்ந்தேடுக்க சொல்லுங்கள்,
என் காதல் வாக்குமூலம்தனை
கேட்டுவிட்டு செல்லுங்கள்!

காதலிதன் நெஞ்சமே நீ என்
கனவுதனை அறியாயோ!
காத்திருப்பேன் காத்திருப்பேன், எனக்காய்
கரைந்து வாக்கை இடுவாயோ?

இதயமென்னும் தொகுதியே என்
இனிய ஆட்சி வேண்டாயோ? என்மேல்
இரக்கமின்றி இருக்கின்றாள்,
இவள் சிந்தை மாற செய்வாயோ?

கண்களெனும் மீன்களே, என் பார்வை
கடலில் நீந்தித் திளைத்தீரே!
காதல் தேர்தல் களம் நிற்கின்றேன்
கனிந்து உங்கள் ஓட்டை தாரீரோ!

இதழென்னும் பூவேயுன்
சுவையறியும் இதம் பற்றி
ஐந்தாண்டு திட்டமொன்றும்
அதற்கு மேலும் திட்டம் போட்டேன்,

இறுகி இருந்து கொள்ளாதே,
இவளைப் போல் நீயுமெனை கொல்லாதே!
இன்னும் என்ன நான் கேட்க!
இளகி எனக்கு வாக்கிடுவாய்!

நீங்களெல்லாம் நியாயம் அலசி, வாக்கிட்டு
நான் வெற்றிப் பெற்று ஆட்சியமைக்க
நாட்கள் பல ஆகுமென்றால்,
நேரடியாய் கேட்டுக் கொள்கிறேன்
என் ஆளுனர் என்னவளிடம்...

உன்னைப் பார்த்தவன்று என்னுள்
பரவித்திரிந்த பட்டாம் பூச்சிகளை நீகேள்,
அன்று முதல் இன்றுவரை வளர்ந்த
காதலின் கதையை அவை சொல்லும்!

பொழுது போகவல்ல, எனக்கு
வாழ்ந்து போக வேண்டும் நீ!
கண் நிறைத்துப் போனவள் அல்ல, என்
கருத்தில் நிறைந்து நின்றவள் நீ!

கொஞ்சம் என் தாயாய்,
கொஞ்சம் என் தோழியாய்,
நிறைய என் காதலாய்
நெஞ்சில், வாழ்வில் நிறைய வேண்டும் நீ!

காதல் எனக்கு இல்லையென்று,
கல்யாணம் வீண் தொல்லையென்று
காத்திருப்பவன் கலக்கமுற, நின்
கருத்துரைத்துப் போனாய் நீ...

பகல் உணர்த்தும் இரவாய்,
இரவை உணர்த்தும் பகலாய்,
குளிர் உணர்த்தும் தணலாய்,
தணலை உணர்த்தும் குளிராய்,

என்னை உணர்த்த நீயென்று
உண்மை உணர்ந்து கொள்வாயோ?
காதல் என்னும் கருவி கொண்டு
உன்னை என்னால் உணர்வாயோ!

கணவனாய் இருந்து உனக்கு
காதலை எவ்வாறு தருவேன் என்று
கணக்கிட்டே நான் பட்டியல் தந்தால்
காதல் தேர்தல் ஆகிவிடும்!

ஆனதுதான் ஆகியது,
அதையும் தான் தருகின்றேன்,
கேட்டுவிட்டே என்னவளே, உன்
காதல் ஓட்டை எனக்கேயிடு!

எதை சொல்லி தொடங்க என்
காதல் வாக்கு உறுதிகளை!
இறுதிவரை என்றே நம்பி
இலட்சம் கோடி ஆசைகள் வைத்தேன்!

காலை தொடங்கி மாலை வரை
நித்தம் நூறு பூக்கள் தரவும்,
சத்தம் மின்றி பின்னால் வந்து
முத்தம் நூறா யிரம் தரவும்
திட்டம் போட்ட சின்ன சில்மிஷங்களின்
சட்டம் போட்டே செய்வேன் ஆட்சி!

உன்னோடு கடல் கரை நடக்க,
கண்ணோடு கையும்கோர்த்து மழை நனைய,
கருத்தின்றி பேசியே காலம் கழிக்க,
காதலிக்கிறேன் உன்னை யென்று
காதில் சொல்ல கற்பனை பல வளர்த்தேன்,
கவிதையாய் வாழ, கவிதையோடு வாழ!

குலோத்துங்க சோழன் குலம் ஆராய,
பல்லவன் படையெடுப்பின் பலம் அலச
பாண்டியன் பற்றி யென்று புத்தகம் பல
பார்த்து வைத்துள்ளேன் உன்னோடு சேர்ந்து படிக்க!

பழந்தமிழர் புகழ் படிக்கும் ஆவலொரு
பக்கமென்றால், காதலி உன்னோடிதை
பகிர்வதில் சுகமெனக்கு, உண்மையிதை
பகிர்ந்துவிட்டேன், பொறுத்தருள்வாள் தமிழென்னை!

எனக்கென்றே நான் எண்ணுவதாய்
எண்ணாதே! உறாவாடும் உயிரேயுன்
இலட்சியங்கள் நானறிவேன், அவையாவும்
ஈடேற இடர்களைந்து உடன் நிற்பேன்!

இயன்ற வரை இயம்பிவிட்டேன்,
இன்னும் இன்னும் இருக்கிறது!
கேட்டவரை, கருத்தில் என்
காதல் உனக்கு புரிந்தால்
எனக்கே உன் வாக்கிடு, எனக்காய்
இதய வாசல்தனை திறந்திடு!

இலட்சம் கோடி பேர் இல்லை,
உன் ஒருத்தி ஓட்டு தான் இங்கு,
வெற்றி தோல்வி என்றில்லை,
போட்டி நிற்க ஆளில்லை!

வாக்களிப்பாய் வாழ்க்கைக்கு
இதயத் தொகுதி தேர்தலில்
ஆட்சி எனது
ஆளுமை உனது!

Sunday 12 September, 2010

செந்தமிழில் ஷேக்சுபியர் - 1

என் மொழிபெயர்ப்பு பணிகளைப் பார்த்து ஆங்கிலப்பாக்களைத் தமிழுக்குத் தரவேண்டுமென சில நண்பர்கள் கேட்டுக் கொண்டனர், அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் துவங்கப்பெற்றதே இம்முயற்சி... ஷேக்சுபியரின் சானட்டுகளைத் (Sonnets) தமிழில் கலிப்பாக்காளாக மொழிபெயர்க்கத் துவங்கியுள்ளேன், இதோ முதலாவது பா தங்களின் விமர்சனத்திற்காக.

(மூலப்பாக்களை மேலே தரப்பட்டுள்ள இணைப்பில் கண்டு பொருள் அறிந்து கொள்ளவும். மொழிபெயர்பிற்கு பொருள் அறிய அருஞ்சொற்பொருள் அளித்துள்ளேன், மூலபாடலின் பொருள் தெரிந்திருப்பின் இதற்கு பொருள் கொள்வது எளிதாகும், எனினும் ஐயமிருப்பின் என்னைத் தொடர்புகொள்ளவும்.)

தன் நண்பனான அழகிய இளைஞனை அவனது அழகை சிதையவிடாது சந்ததிகளுக்கு அளிக்குமாறு அறிவுறுத்துவதாய் இந்தப்பாடல் அமைந்துள்ளது.


[பாடலின் யாப்பு : பிரிந்திசைச்துள்ளலோசையான் வந்த பதினான்கடி வெண்கலிப்பா]
உயர்ந்த உயிரினின்றும் உயர்வதேநம் விருப்பமன்றோ
அழகின் மலரென்றும் அழியா திருந்திடவே
எனினும் பழுத்தவன்தான் இறப்பனே காலஞ்செல்ல
இனிதாய் அவநினைவை இளையவர் ஏந்துவரே

நீயோ பிறழ்கின்றாய் நின்னொண்கண் இயல்பதற்கே
தீயோ வளர்கிறது தன்னையே தாந்தின்று
வளமை மிகுந்திருக்க வளர்க்கிறாயே வறுமையைநீ
இளமைக்குக் கொடிதாய் எதிரானாய் உனக்கேநீ

அவனியின் புத்தம்புது அணியாவாய் நீயின்று
உவர்வேனில் வருகைதனை உரைப்பவனும் நீயேதான்
புதைக்கிறாய் உன்சொந்த முகைக்குள்ளே உன்னழகைச்
சிதைக்கிறாய் இளவெழிலைச் சிறுகஞ்சத் தனமதிலே

இரங்குநீ இவ்வுலகிற்கு இல்லையிப் பசிகொள்ளும்
உன்னையும் மரணத்தில் உண்டு.
(மூலத்தின் அடிஎண்ணிக்கையை மொழிபெயர்ப்பிலும் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியால் இறுதியில் சொல்லுக்குச்சொல் என்ற வகையில் அன்றி பொருள் முடிபை மட்டுமே தர இயன்றது. மற்றபடி அடிக்கு அடி பொருள் முடிபைத் தர முயன்றுள்ளேன், அஃதாவது மூல பாடலின் அமைப்பையும் மொழிபெயர்ப்பில் தர முயன்றுள்ளேன். இனி என் முயற்சியின் வெற்றி தோல்விகள் தங்கள் விமர்சனத்தில் முடிவாகும்)

மறவாமல் கருத்துரை இட்டுச் செல்லுங்கள்... நன்றி!

Sunday 29 August, 2010

வீரனுக்கு மரணமில்லை - சே குவேரா

கடந்த மாதம் காஸ்ட்ரோ பற்றிய நூலைப் படித்துவிட்டு எனக்குத் தோன்றிய கவிதையை இடுகை இட்டிருந்தேன், அதற்கு வெகு நாள்களுக்கு முன்னரே நான் படித்த நூல் “சே குவேரா - வேண்டும் விடுதலை” ஆகும். கிழக்குப் பதிபகத்தையும், மருதனையும் எனக்கு அறிமுகப் படுத்திய நூல் இதுவே, சே-வின் வாழ்வைக் கற்கும் ஆவலில் வாங்கிய நூல் மிகச் சிறந்த ஒரு பதிபகத்தையும் ஆசிரியரையும் எனக்கு அறிமுகப்படுத்தியது ஒருவித “போனஸ்” என்றே மகிழ்ந்தேன்...












சே-வின் வாழ்வை படித்ததும் தோன்றிய வரிகளே கீழே உள்ளவை... படித்துத் தங்கள் கருத்தினையும் இடுங்கள்... நன்றி...

அர்ஜென்டீனனாய் பிறந்தாய்
அகிலனாய் தான் வாழ்ந்தாய்,

லத்தீன்-அமெரிக்க விடுதலை என்னும்
லட்சியம் கொண்டே செயல்பட்டாய்,

ஆன்மாவை மட்டுமல்ல நீ
ஆஸ்துமாவையும் வென்றாய்,

புரட்சியென்னும் ஆயுதம் கொண்டு
புரட்டிப் போட்டாய் ஏகாதிபத்தியத்தை,

காஸ்ட்ரோ காட்டிய பாதை சென்று
கம்யூனிசம் நிறுவினாய் க்யூபாவில்,

அண்டைவீடு அமெரிக்காவின்
அடிவயிற்றில் புளிகரைத்தாய்,

சீ.ஐ.ஏ-வை சீண்டி விளையாடினாய்
சீறும் அப்பாம்பின் நாவறுத்தாய்,

சோவியத்துடன் கை கோர்த்து
சோசியலிசம் தனை விதைத்தாய்,

கல்வி, ஆலை, புரட்சி தந்து
கட்டமைத்தாய் க்யூபாவை,

நின்றதா நின் கனவு அத்தோடு?
நீண்டதேயது காங்கோ, பொலிவியா என்று!

வீணரால் கொல்லப்பட்டு இறக்கவில்லை நீயே
வீரனுக்கு என்றும் மரணமில்லையே, சே!




நூல்விவரம் :
பெயர் : சே குவேரா - வேண்டும் விடுதலை
ஆசிரியர் : மருதன்
வெளியீடு : கிழக்கு

Thursday 26 August, 2010

குழப்பம்

'அய்! நிலா!’ என ஒரு
குழந்தை சொன்னதும்,
விண்ணைப் பார்க்கிறாய் நீ
உன்னைப் பார்க்கிறேன் நான்!


Sunday 1 August, 2010

ஆர்வக்கோளாறு

நான் கிராமங்களையும், வயல்களையும், தோட்டங்களையும் எப்போதோ நண்பர், உறவினர் வீட்டுக்கு போகும் பொழுது மட்டுமே பார்த்தவன், ஒரு ஆர்வத்தில் மட்டுமே இந்த பாடல்களை எழுதி இருக்கிறேன், ஏதேனும் ”டெக்னிக்கல்” தவறு இருந்தால் அசல் கிராமவாசிகள் மன்னிப்பார்களாக...

(சந்தம் : தானா தானத்தன்னா தானத்தன்னா தானத்தன்ன)

காக்கா கொஞ்சிவாழும் காவலில்லாத் தோட்டதுல
காந்தள் கையால களை புடுங்கிப் போடும் பெண்ணே
காந்தள் கையால களை புடுங்கிப் போடையில் என்
காதல் மனசதையும் நீ புடிங்கிப் போவதென்ன... (1)

குயிலுக குடியிருக்கும் குண்டுமல்லித் தோட்டதுல
குறும்புக் கையால குச்சி நட்டு வைக்கும் பெண்ணே
குறும்புக் கையால குச்சி நட்டு வைக்கையில் உன்
குறுக்கு அசைவுல என் நெஞ்சைக் குத்திப் போவதென்ன... (2)

பாசி படிஞ்சிருக்கும் பசலைக்கீரைத் தோட்டதுல
பாகுக் கையால பாத்தி கட்டிப் பார்க்கும் பெண்ணே
பாகுக் கையால பாத்தி கட்டிப் பார்க்கையில் உன்
பார்வை கயிறால் என் நெஞ்சைக் கட்டிப் போவதென்ன... (3)

சேறு சேர்ந்திருக்கும் செழுங்கழனி வயலுக்குள்ள
சேம்புக் கையால செந்நெல்லு விதைக்கும் பெண்ணே
சேம்புக் கையால செந்நெல்லு விதைக்கையில் உன்
சேலை மடிப்பில் என்னைச் சேர்த்து விதைச்சு போவதென்ன... (4)

வாளை வாழும் வயல் வெளஞ்ச நெல்ல வெய்யிலுல
வாழைக் கையால வாரிப் போட்டு வாட்டும் பெண்ணே
வாழைக் கையால வாரிப் போட்டு வாட்டையில் உன்
வாய்ச்சொல் பேசாமல் என்னை வாட்டிப் போவதென்ன... (5)

நிழலா பின் தொடர்ந்து உன்னோட நானும் வர
நின்னு பார்க்காம நெடுநடையாப் போற பெண்ணே
நின்னு பார்க்காம நெடுநடையாப் போனாலும்
நிற்கக் கெஞ்சும் உந்தன் மனசின் காதல் புரியுமடி...
  - எனக்குப் புரியுமடி
நிலவே உந்தன் காதல் எனக்கு நல்லா புரியுமடி... (6)

Thursday 15 July, 2010

உண்மை...


ஏன் தொலைகிறது
அந்நியத்தோடு செர்ந்து
ஆர்வமும்?

கனி இதழும்
கசக்கிறது அவள்
பேசத் துவங்கியதும்!

பேசியும் கொல்கின்றன
பேசாமலும் கொல்கின்றன - அன்று
பேசவைத்த இதழ்கள்!

கருவண்டு விழிகள்
கலங்க வைக்கின்றன இன்று
கேள்விகளோடு நோக்கையில்!

வானவில் புருவங்கள்
வயிற்றைக் கலக்குகின்றன
அவள் மௌனத்தில் உயர்ந்து!

செல்லமான அடிகள்
சீறிப் பாய்கின்றன
இன்று!

கொலுசிற்கும் வளையலுக்குமான சண்டையில்
கொலையுண்டு கிடக்கிறது
குற்றமற்ற என் பேனா!

காதலைத்
துரத்திவிட்டதா
காலத்தின் மாற்றம்?

அவளைப் பற்றி எழுதும்
அவளுக்கான கவிதையை
அவளே கெடுக்கிறாள்!

எல்லா தவறுகளும்
என் பொறுப்பிலேயே
ஏன் வந்து சேர்கின்றன?

கடவுளே... இந்தக்
கவிதைகளை என்
காதலி படித்துவிடக் கூடாது!

இதுதான் காதல் என்றாலும்
இன்னும் ஆயிரம் ஆண்டு
இதில் இன்பமாய் வாழ்வேன்...

வேண்டும் ஓர் காஸ்ட்ரோ!

கடந்த மாதம் படிக்கத் துவங்கி, பின் பாதியில் நிறுத்தி, இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் படிக்கத் துவங்கிய கிழக்கு பதிப்பகத்தின் “சிம்ம சொப்பனம் : ஃபிடல் காஸ்ட்ரோ” நூலை நேற்றுதான் படித்து முடித்தேன், ஃபிடலைப் படித்தவுடன் இன்றைய இந்தியாவின் நிலை ஏறத்தாழ அன்றைய க்யூபாவின் நிலையிலிருந்து சற்றும் வேறானதல்ல என்ற ஒரு கருத்து தோன்றியது, அதன் விளைவு இந்தக் கவிதை (என்று நான் நினைக்கும் சொற்கோவை!) படித்துப் பாருங்கள், தோன்றுவதை தோன்றிய வண்ணம் சொல்லிவிட்டு போங்கள்...

ர்வாதிகாரம் இல்லை
ஆனால்
சர்வத்திற்கும் அதிகாரம் உண்டு,

பொருளாதாரத் தடை இல்லை
எந்தப்
பொருளையும் வாங்கப் பொருளில்லை,

அந்நிய செலாவனிக்கு குறைவில்லை
பலருக்கு
அன்றாட உணவுக்கே வழியில்லை,

கல்வி சாலைகளில் குறைவில்லை
கிடைக்கும்
கல்வி அதனில் தரமில்லை,

உடலைப் பேண மருந்தில்லை
ஏழை
உயிருக்கு இங்கே மதிப்பில்லை,

உழைப்பவருக்கு உயர்வில்லை
வளரும்
ஊழல் அதற்குத் தடையில்லை,

காலனி ஆதிக்கம் இன்றில்லை
நடக்கும்
களவானி ஆட்சிக்கு முடிவில்லை,

முதலாளித்துவம் இங்கில்லை
எனநம்பும்
முட்டாள்களுக்கும் குறைவில்லை,

நடக்குது ஒர் மக்களாட்சி
மக்களை
கொண்டல்ல அவரைக் கொன்று,

இது க்யூபா அல்ல
இருந்தும்
இங்கும் வேண்டுமோர் காஸ்ட்ரோ!


முட்டாள்தனம் - ஹைக்கூ

ஃபிடலைப் படித்துவிட்டு
பேனாவைத் தேடுகிறேன்
போர்வாளை விட்டுவிட்டு!


நூலைப் படித்துப் பாருங்கள்...
ஆசிரியர் : மருதன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

Saturday 19 June, 2010

இராவணன் (அல்லது) மணிரத்ன இராமாயணம்

இராமாயணம் இந்திய மக்களிடையே மிகவும் ஊறிப்போன ஒரு கதை, அதானால்தான் அது ஏறத்தாழ எல்லா இந்திய மொழிகளிலும் வழங்கப்படுகிறது சில சமயம் ஒரே மொழியில் பல இராமாயணங்களும் இருக்கின்றன... ஒரு கம்ப இராமாயணப் பதிப்பின் முன்னுரையில்.
ஆம், நான் இராமாயணக் கதையைதான் சொல்லப் போகிறேன்என்று திரு. மணிரத்னம் தன் படத்தின் தலைப்பிலேயே ஒத்துக் கொண்டுவிட்டதால் வான்மீகியோ கம்பனோ (அல்லது அவர்கள் சார்பில் வேலைவெட்டி இல்லாத ஒருவனோ) அவர் மீது எந்த வழக்கும் போட இயலாது என்பது மகிழ்சியான விஷயம்தான்!

இராமன் தான் காக்க வேண்டிய குடிகளையே துன்புறுத்துகிறான், தன்னை எந்தத் தொந்திரவும் செய்யாத சூர்ப்பனகையை இம்சிக்கிறான், சமாதானம் பேச வரும் விபீடணனைக் கொல்கிறான்...

இராவணன் தன்னை அண்டியவர்களைக் காக்கிறான், அண்டாதவரை அழிக்கிறான், அனுமனுக்கு மதுவோடு (சாராயம்) விருந்து அளித்து பேசுகிறான் (ஆனால், கை கால்களை கட்டி வைத்துதான்), ‘இன்று போய் நாளை வாஎன்று நிராயுதபாணியான இராமனுக்கு உயிர் பிச்சை அளிக்கிறான்...

சீதை இராமனின் நிழல் நிஜத்தை உணர்கிறாள், இராவணனின் உள்ளுயிரை ஊடிக் காண்கிறாள், இராமனைவிட இராவணனின் மீது கரிசனம் கொள்கிறாள், மனப்போராட்டங்களில் ஊசல் ஆடுகிறாள்...

இராமனின் இருட்டுப் பக்கத்தையும், இராவணனின் வெள்ளைப் பக்கத்தையும், சீதையின் ஊள்ளப் போராட்டத்தையும் கையாண்ட விதம் அருமை -  இருபத்தியோராம் நூற்றாண்டில் இராமாயணம் ஒரு புதிய பரிணாமத்தை அடைந்துவிட்டது! வான்மீகியின் பாதையிலேயே ஓடி அவரை வென்ற கம்பனைப் போல், இருவருக்கும் எதிர் திசையில் ஓடி தனியாய் ஒரு வெற்றியைப் பெற்றுவிட்டார் மணிரத்னம்! ஆனால்,

இராவணன் என்று பெயர் வைத்ததோடு மூல இராமயாணத்தை மறந்திருக்கலாம் தளபதியின் கர்னன் கதையைப் போல மிக ஆழமாக உணர்த்தும் (Deep Suggestion) முறையைக் கையாண்டிருக்கலாம் அதில்லாமல் ஏறத்தாழ மூல இராமயணத்தின் அனைத்து முக்கிய பாத்திரங்களையும், நிகழ்வுகளையும் பொருத்திக்காட்ட (Imitate) முயன்றிருப்பது மணிரத்னம் போன்றோருக்கு அழகல்ல என்பது இந்த கடைரசிகனின் தாழ்மையான கருத்து (அது கதையின் போக்கை கவனிக்கவிடாது செய்வதுடன், படத்தை ஒரு இராமாயண-spoof போல ஆக்குகிறது!)

இராமன் (தேவ்/பிருத்திவி ராஜ்), சீதை (ராகிணி/ஐஸ்), இராவணன் (வீரா/விகரம்), இலக்குமனன் (ஹேமந்த்/ஜான் விஜய்), கும்பகருணன் (சிங்கராசன்/பிரபு), விபீடணன் (சக்கரை/முன்னா), சூர்ப்பனகை (வெண்ணிலா/பிரியாமணி), அனுமன் (ஞானபிரகாசம்/கார்த்திக்) என்று எல்லாரையும் உள்ளடக்கி இருப்பதும்,

ஞானப்பிரகாசம் (அனுமன்) குரங்குவேலைகள் செய்வது, வீராவின் இடத்திற்கு (அசோக வனம்?) போய் ராகினியை (சீதையை) சந்திப்பது, பின் வீராவுடன் (இராவணன்) சமாதானம் பேசுவது, அது கேட்டு சக்கரை (விபீடணன்) வீராவிற்க்கு அறிவுரை சொல்வது...

வெண்ணிலாவின் (சூர்பனகை) மூக்கைப் பிடித்துக் கொண்டு ஹேமந்த் (இலக்குமனன்) ‘அறுத்து விடுவேன்என்பது, சண்டையில் (யுத்த களம்)  ஹேமந்தை (இலக்குவனனை) ஞானபிரகாசம் (அனுமன்) காப்பாற்றுவது...

இப்படி வரிக்கு வரி இராமாயணத்தை நினைவூட்டுவது தேவைதானா? (என் திரைவிமர்சனமே இராமாயணம் இராவனன் திரைப்படம் : ஒரு ஒப்பிலக்கிய ஆய்வு என்ற அளவுக்கு போகிறது பாருங்கள்!)

மணிரத்னத்தைத் தாண்டி படத்தில் பின்னணியில் மின்னுபவர்கள் ஒளிப்பதிவாளரும் வசனகர்த்தாவும் இசையமைப்பாளரும்;  அவர்களுக்கு என் தனிப்பட்ட நன்றி - இயற்கை அழகை இன்னும் அழகாய் படம் பிடித்தமைக்கும், திருநெல்வேலித் தமிழுடன், சற்றே மலைத்தமிழ் கலந்த இயல்பான வசனங்களுக்கும், படத்தோடு ஒன்றி காதையும், கருத்தையும் தனியாய் உருத்தாத இசைக்கும்! மணிரத்னம் படத்தில் நடிகர்களின் நடுப்பிற்க்குத் தனியாய் பாராட்ட வேண்டுமா என்ன? இருந்து என்னை குறிப்பிடத் தூண்டுகிறது விக்ரமின் வசனம் பேசும் திறமை!

நெடுஞ்சாலையில் விரையும் வண்டிகளுக்கு இரையாகி நாய்களும், பசுக்களும், ஆடுகளும் சதை கூழாக, தரையோடு தரையாக் கிடப்பதை பார்க்கையில் எல்லாம் என் மனது வலிக்கும், நாம் நமக்காக போட்ட சாலைவிதிகள் அவைகளுக்கு எப்படி புரியும்? ஏன் புரிய வேண்டும்? அது புரியவில்லை என்பதற்காக இந்த கோர தண்டனையை அவைகளுக்குத் தருவது எந்த வகையில் நியாயம்? என்ற கேள்விகள் என் மனதில் சீறி எழும்... இதே நிலையில்தான், தன்னை பிறரைவிட உயர்ந்தவன், “பண்பட்டவன் என்று தானே சொல்லிக் கொண்டு, தான் இயற்றிய தனக்கான விதிகளைப் புரிந்துகொள்ளாத, பின்பற்றாத பிறரை ஒருவன் (அல்லது ஒரு சமுதாயாம்) அடக்குவதும், அழிப்பதும் மனித இனத்திலும் இருக்கின்றன அயோதிக்கு இராமன் உத்தமன் என்றால் இலங்கைக்கு இராவணந்தான் உத்தமன், கிஷ்கிந்தைக்கு வாலியே உத்தமன், இராவணனையும் வாலியையும் (படத்தில் வாலி பாத்திரத்தையும் புகுத்தாதது ஒரு சின்ன ஆறுதல், அதற்கு பதில் இராமன் வாலிக்கு செய்த துரோகத்தை இதில் விபீடணனுக்குச் செய்து விடுகிறான் முதுகில் சுட்டு!) அழிக்க இராமனுக்கு யார் அதிகாரம் தந்தார்கள்? இந்தக் கோள்வியை சீதைக்கு உணர்த்தும் வாயிலாக நமக்கும் உணர்த்த மணிரத்னம் முயன்றுள்ளார் எனின், அம்முயற்சி தோற்றது என்பதே உண்மை காரணம் ஒரு பெட்டியைவிட்டு வெளியில் வந்தால் இன்னொரு பெட்டிக்குள் சிக்கிக்கொள்ளும் மனித சிந்தனையின் பலவீனமே!

இராவணன் புரிந்தவர்களுக்கு காப்பியம், புரியாதவர்களுக்கு புதுக்கவிதை!

(விமர்சனத்தைப் பொறுமையுடன் படித்தமைக்கு நன்றி. நூற்றியிருபது உருபாய் கொடுத்து படம் பார்த்தவன் என்ற முறையிலும், சுதந்திர இந்தியக் குடிமகன் என்ற உரிமையிலும், என் மனதில் தோன்றியதை என் தனிப்பட்ட கருத்தாக மட்டுமே இங்கே வெளியிட்டுள்ளேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொண்டு, என் விமர்சனம் பிடிக்காதவர்கள் அல்லது மாற்று கருத்து உள்ளவர்கள் பொறுத்தருளுமாறும் கேட்டுக் கொண்டு, எது எப்படியாகிலும் இதைப் பற்றிய தங்களின் மேலான கருத்துக்களை இட்டுச் செல்லுமாறும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி...)

Thursday 17 June, 2010

தோழிக்குத் திருமண வாழ்த்து

மு.கு: காதல் கவிதை என்று கிறுக்கியதற்கு அடுத்த படினிலையாய் அமைந்தது இதுதான். இதை எழுத தேவைப்பட்ட துணிவைவிட எழுதியபின் பரிசாக இதையே தர நிறைய துணிவு தேவைப்பட்டது என்பதை இங்கே ஒத்துக்கொள்கிறேன். நான் அறிந்த வரையில் என் முதல் மரபு கவிதையும் இதில் உள்ள கடவுள், மொழி வாழ்த்துப் பாக்கள்தான் [விருத்தங்கள்]

கடவுள் வாழ்த்து

நம்பிக்கை யான்நலம் காக்கும் களிற்நாயகன்
தம்பிக்கும் தன்தயைக் கூர்ந்த எழின்நாயகன்
தும்பிக்கை யால்புவி காத்துப் பொலிர்நாயகன்
எம்பிறப்பும் நம்மைக் காப்பான் நல்விநாயகன்.

மொழி வாழ்த்து

பொதிகையிடை பிறந்து குறுமுனி
தாலெனும் தொட்டிலிலே தவழ்ந்தாள்
சதியொரு பாகம் பெற்றான்
மற்றவன் குமரனொடும் வளர்ந்தாள்
நதியுரும் நாவலர் நாட்டில்
நற்செங் கோலது வீச்சுவாள்
கதிதரும் தாயவள் நமக்கே
தமிழன்னை நற்றாள் போற்றி!

மணவாழ்த்து

கல்யாணப் பந்தல் புகும்
கனிவான என் தோழி,
கற்பகக் கோடியாண்டு நின்
செம் மஞ்சள் வாழி!

கன்னியெனும் ஆடை மாற்றி
கணவன் கொள்ளும் தோழி,
காலமெல்லாம் அவன் காதல்போற்ற
நின் சீற்கற்பு வாழி!

மன்னவன்தன் குலமேற்று குடியேற்று
விளக்கேற்ற  செல்லும் தோழி,
கொண்டவன்பால் கொண்ட அன்பால்
உயிரேற்றும் நின்அன்பு வாழி!

புரிதல் என்பது இருவழிப்பாதை
புரிந்துக் கொள்வாய் தோழி,
கொடுத்து வாங்கும் கொள்கை
கொண்டே சீறாய்நீ வாழி!

பெற்றார் உற்றார் சுற்றார்
வாழ்த்தப் பெறும் தோழி,
கற்றார் கடந்தார் போற்றும் நற்றாள்
நாதனும் வாழ்த்தநீ வாழி!

(படித்தமைக்கு நன்றி, மறக்காமல் தங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், அதற்கும் முன்னரே நன்றி...)

Thursday 3 June, 2010

சுத்தம் (சிறுகதை)

(முன்குறிப்பு: என் முதல் சிறுகதையைதான் இங்கே இட்டிருக்க வேண்டும், அதை இன்னும் என் அலமாறியில் தேடிக் கொண்டிருக்கிறேன், கிடைத்தவுடன் இட்டுவிடுகிறேன் - அதுவரை இது - ‘நான் விஜய்’இல் கவிதைகள் மட்டுமே இடம்பெறுவதில்லை எனச் சொல்லும்!)

"ரைட்! ரைட்!" - இந்த நிறுத்தத்திலும் பயனிகள் யாரும் ஏறாத ஏமாற்றத்தினால் சற்று கடுமையுடனே சொல்லிவிட்டு தனக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டான் நடத்துனர் ஜீவா.

ஜீவாவின் குரலில் இருந்த கடுமையை உணர்ந்து புன்னகைத்தவாறே வண்டியை முதல் கியருக்கு மாற்றி நகர்த்தினார் ஓட்டுனர் செல்வம், ஜீவா வேலைக்கு புதுசு, வந்து ஒரு மாதமேயான சுறுசுறுப்பு இன்னும் குறையவில்லை அவனிடம், அதனால்தான் தினமும் கூட்டம் முட்டிநெறிக்கும் வண்டியில் இன்று பேருக்கு ஏழெட்டு ஆள் அமர்ந்திருப்பது அவனுக்கு எரிச்சலை தருகிறது என்பதை செல்வம் நன்கு புரிந்து கொண்டிருந்தார். கூட்டத்தின் குறைவு அவருக்கு உண்டுபண்ணும் நிம்மதியை ஜீவாவும் அனுபவிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று சிந்தித்தவாறே அடுத்தடுத்த கியர்களுக்கு மாற்றி வேகமெடுத்தார்.

இதுவரை தந்த பயனசீட்டுகளை சரிபார்த்து 'ஸ்டேஜ் கிளியர்' செய்து வைத்துக் கொண்டு அடுத்த நிறுத்தத்தை எதிர்பார்த்து அமர்ந்திருந்தான் ஜீவா. வந்த நிறுத்தத்தில் இருவர் வண்டியில் ஏறினர், அழுக்கு துணி, பரட்டைத் தலை, பலநாள் தாடி சகிதம் ஒருவன் ('பிச்சைக்காரன்' என்பது ஜீவாவின் கணிப்பு, அவனும் அதற்கு இலக்கணம் போலதானே இருக்கிறான்!) பின்வாயிலிலும், கோதுமையின் செழுமையால் பளிங்கு சிற்பம் போல, கண்ணையும் மனதையும் கவரும் பகட்டான உடையில் காட்சியளித்த இளந்தாய் ஒருத்தி தன் கைக்குழந்தையுடன் முன்வாயிலிலும் ஏறினர்.

இப்படியும் ஒருவன், அப்படியும் ஒருத்தி, எப்படியெல்லாம் வேறுபட்ட மக்கள் ஒரே இடத்தில் வாழ்கின்றனர் என்று வியந்தவாரே, அந்தப்பெண் ஏறி வசதியாய் அமர்ந்துவிட்டாள் என்பதை உறுதி செய்துகொண்டபின் "ரைட்! ரைட்!" தந்தான் ஜீவா. வண்டி மீண்டும் கிளம்பி கியர் மாறி வேகமெடுத்தது, ஜீவாவின் அனுமானங்களும், எரிச்சலும் தான்!

ஏறி அமர்ந்த இருவரும் ஜீவாவை நோக்கினர், கையில் காசுடன். அந்த 'பிச்சைகாரன்'-ஐ கண்ட ஜீவாவிற்கு எரிச்சல் அதிகமாகியது, 'இவனுக்கு நான் எழுந்து போய் டிக்கெட் தரனுமா? ஏன் துரை அவரே வந்து வாங்க மாட்டாராமா?' என்று மனதிற்குள் - தன் 'அரசாங்க உத்தியோக'த்தையும் சேர்த்து - திட்டிக்கொண்டான். அந்த 'நாகரீக இளந்தாய்'க்கு சீட்டு தர வேண்டியிருந்ததால் தன் இருக்கையை விட்டு எழுந்தான் ஜீவா. 'பிச்சைக்கார'னின் அருகில் போகவே பிடிக்கவில்லை அவனுக்கு அவன் ஏறியதால் தனது பேருந்து அசுத்தப்பட்டுவிட்டதாய் எண்ணினான்!

'அந்தப் பொண்ணையும் பாரு இவனையும் பாரு! அவ எத்தன 'டீசென்ட்டா' இருக்கா? இவனுக்கு அந்த வார்த்தைக்கு அர்த்தமாவது தெரியுமா? தலையெழுத்து... இவனுக்கெல்லாம் வேலை செய்ய வேண்டியிருக்கு...என்று நொந்தவாறே அவனருகில் சென்றான், 'ஸ்ஸ்டெர்லிங்ங் ரொடூ' என்றவாறே ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை நீட்டினான் அந்த 'பிச்சைக்காரன்', பட்டும்படாமலுமாய் அதை வாங்கிக்கொண்ட ஜீவா சீட்டை அளித்தான். அதை வாங்கிக்கொண்டு தன் கையில் இருந்த வாழை பழத்தை தோலுரிக்கத் துவங்கினான் அவன், 'பழத்த சாப்ட்டுட்டு தோல வண்டிக்குள்ளயே போடுவான்' என நினைத்த ஜீவா, அவன் அப்படி செய்தால் தன் மொத்த எரிச்சலையும் அவன்மேல் காட்டி அவனை  திட்டிதீர்த்துவிட தயாரானான். ஆனால் அவனோ தோலை மிக சகஜமாக தன் அழுக்கு சட்டையின் அழுக்குப் பைக்குள்ளேயே போட்டுக்கொண்டான், 'ஐயைய...என அருவருப்புடன் அங்கிருந்து நகர்ந்தான் ஜீவா, அந்த இளந்தாய்க்கு சீட்டு தர.

அவள் அந்தப் பேருந்தில் ஏறியது அதற்கும் தனக்கும் கிடைத்த பெறிய மரியாதை என்பதைப் போல அவளிடம் போய் நின்றான் ஜீவா. தன் குழந்தையின் 'டைஃபர்ஸ்'ஐ கழட்டி ஜன்னல் வழியே  வீசிவிட்டு, அதன் மூக்கையும் சிந்திவிட்டு கையை வெளியில் உதறிவிட்டு, பின் தன்கையை முன்னிருக்கையில் துடைத்துக்கொண்டு, மற்றொரு கையால் ஒரு ஐம்பது ரூபாய் தாளை நீட்டி, "பெஸன்ட் நகர், ப்ளீஸ்" என்றாள். தன் எண்ணங்களின் மணல் மேட்டில் சறுக்கியவாறே அவளுக்கு சீட்டை தந்துவிட்டு தன் இருக்கைக்கு வந்தான் ஜீவா. வருகையில் அந்த 'பிச்சைக்காரரை' பார்த்தான், அவன் சட்டைப் பையை குப்பையாக்கிய அந்த பழத்தோல் பேருந்தை சுத்தமாக வைத்திருந்தது!

Saturday 29 May, 2010

வல்லின எதுகை கவிதை

ற்றைக் கருங்குழல்
ற்றைக் கயல்விழி
ற்றைப் பிறைநுதல்
பெற்றைப் பெண்ணிவள் - அழகாமே!

ப்பிக்க இயலாது
ப்பியக் கரிவிழிக்கண்
ப்புவித்தேன் எனை
ப்பொழுது நீதரு - வாயுன்னை!

த்தைக் கனியிதழ்
முத்தைச் சுவைசெய
த்தைத் தவமிருப்பேன்
த்தைப் போல்நெஞ்சை - கடைவோளே!

வெட்டிடும் கூர்விழி
கொட்டிடும் பார்வையில்
ட்டதும் பாழ்மனம்
ட்டியே கொள்ளுதே - பொழுதெல்லாம்!

ச்சைக் கிளியுந்தன்
கொச்சை மொழிவாயின்
ச்சில் சுவைவேண்டும்
ச்சை எனதாமே - தருவாயோ!

க்கணம் எனைவிட்டால்
க்களம் ஏகியுமே
க்கரை பாவையுன்
க்கரை எனதாய் - நானாக்குவேன்!

மதுரையை மீட்ட சுந்தர ”பல்லவன்”

முன்குறிப்பு : என் காதலி பாண்டிய நாட்டவள் (மதுரை), நான் தொண்டை நாட்டவன் (சென்னை) - அவள் தன் ஊருக்கு போயிருந்த சமயம், வந்த பாடல் இது! மழைத்துளிகளைச் சேகரிக்கும் சிறுவன் போல எங்கிருந்தோ பொழிந்த சொற்களை பேனா மூலம் ஒரு வெள்ளைத் தாளில் சேகரித்த பணி மட்டுமே என்னுடையது!

    "Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquility”

 -என்று வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் சொன்னதன் உண்மையை புரிந்த நொடி அது!


மதுரைக்குச் சென்றாயே பெண்ணே

மதுவிறைக்கும் நின்தாமரைக் கண்ணே!

தொண்டைநாடன் எனைவிட்டாய் தனியே

பாண்டி-

கெண்டைவிழி என்றுகாண்பேன் இனியே?


மீனாட்சி கோவுறையும் பதியில்

மீன்ஆட்சிக் கோலுறைந்த கதியில்

தானாட்சி புரிந்திடுமோ கண்கள்

என்னை-

ஏனாட்சி செய்கிறதுன் பெண்-கள்!


சேமறையும் வேளைவரும் கூடல்நிலா

தாமரையும் தானும்சேர்ந்து போகுமுலா

மல்லிகைதன் மணம்பரவும் மாநகரில்

உந்தன்-

அல்லிகைபற்றி அலையும்சுகம் நிகரில்!


பாவையுன் விழிபார்த்து நாணும்

பாண்டியன்தன் கொடிவாழும் மீனும்!

சொல்லாத சுகமெல்லாம் ஈணும்

நிந்தன்-

சொல்லாலே சொக்கிநின்றேன் நானும்!


சொக்கனுக்கு சொந்தமான வானும்

சொர்க்கமுன்மேல் மழைதூவ வேணும்,

கூடல்நகர் கூடிநின்று காணும்

இந்தக்-

கூரழகை கைக்கொள்வேன் நானும்!


முத்தெடுத்த பாண்டியமா கோவும்

நின்பல்லழகை பார்த்ததில்லை பாவம்!

கல்வடித்த பல்லவன்நான் மேவும்

உற்ற-

நல்லழகே மனமுன்பால் தாவும்!


முப்படையால் உலகம்கொண்டான் சோழன்

முத்தமிடும் இதழ்படைக்கு நானே தோழன்,

வில்கொண்டான் படைகொடியில் சேரன்

அவன்-

கல்லாத கலையிடையில் கற்பேன் பாரேன்!


தமிழென்பாள் நான்கொண்ட அன்னை

தவறாமலெனக் கருள்வாள் அவள் உன்னை

நீயின்றி நானில்லை என்னை?

எந்தன்-

உயிரே நீ ஏற்பாயோ என்னை!


(பாடலின் யாப்பைப் பற்றிய விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்! நன்றி! )

Wednesday 24 March, 2010

பாரதி வழியில் - புதிய தமிழனுக்கு!

(”ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா” மெட்டைச் சுட்டு அதில் போட்ட பாடல். பாரதியிடமிருந்து சுடுவது பெருமையே எனக்கு!)

தமிழனென்னத்      தயங்குவாய்     போ! போ! போ!
தன்பெருமை          அறிந்திலாய்     போ! போ! போ!
தாழ்மையை           விரும்புவாய்    போ! போ! போ!
தாய்மொழி              கற்கிலாய்          போ! போ! போ!
மானமென்ப           தறிகிலாய்          போ! போ! போ!
ஈனச்செயல்கள்    புரிகுவாய்           போ! போ! போ!
மேற்கைக்கண்டு  மயங்குவாய்     போ! போ! போ!
மேன்மைமீட்க      முயன்றிலாய்   போ! போ! போ!

தமிழினை                  விரும்புவாய்        வா! வா! வா!
திராவிடம்                  உயர்த்துவாய்      வா! வா! வா!
இலக்கியங்கள்        போற்றுவாய்       வா! வா! வா!
இலக்கணங்கள்       தேறினாய்             வா! வா! வா!
வள்ளுவத்தின்         நெறிகளை -          நன்  றா   க
கற்றுநின்று               வாழ்குவாய்          வா! வா! வா!
கம்பன்சேரன்            யாத்தளித்த -        மா  நூல் கள்
கலக்கமின்றி            கற்றுநீ                    வா! வா! வா!
உள்ளவுயர்                வனைத்தையும் - தா ழா   து
உலகெலாம்              சாற்றிட                  வா! வா! வா!
உயிரும்வாழ்வும்    தமிழென்றே         வா! வா! வா!
ஒன்றுகூடி                 உயருவோம்        வா! வா! வா!

வாழ்க தமிழ்...
வளர்க ஞாலம்...

Friday 12 February, 2010

என் முதல் கவிதைகள்...

என்ன இருந்தாலும் “முதல்” முதல்தானே...
என் முதல் கவிதைகளும் அப்படித்தான் எனக்கு - வாழ்க்கை முதல் வார்த்தைவரை வேறு கோணத்தில் பார்க்க வைத்த என் முதல் காதலை நினைவுபடுத்தும் கால ஆடிகள் என் முதல் கவிதைகள்!

கி.பி.2001-இல் ஒரு விடலைப் பையனின் ஹார்மோன் குளறுபடிகள் உருவாக்கிய கிறுக்கல் கோலங்களைக் காணத் தயாரா?... இதோ...

பெண்ணே,
துப்பட்டா சிறகு விரித்த
உன்னைப் பார்த்துப்
பட்டாம்பூச்சிகள் பொறாமைப்படலாம்...
தேவதைகள் கூடவா?!

நீ உச்சரித்தப் பிறகுதான்
என் பெயரே எனக்குப் பிடித்தது,
நீ உச்சரிக்காமலே
உன் பெயர் பிடிக்கிறதே, எப்படி?!

நான் எவ்வளவுதான் காத்திருப்பது?
இறக்கைகளை மட்டும் அசைக்கின்றன
ஆனால்
பறக்கவே மாட்டேன்கிறதே
உன் விழிப்பட்டாம்பூச்சிகள்!

நான் எவ்வளவுதான் முயன்றாலும்
என் கவிதைகளுக்கு
உன் பெயரைத் தவிர வேறு நல்ல
‘தலைப்பு’க் கிடைக்கவில்லை!

 யார் வரைந்த ஓவியமோ
என
நான் கண்ணிமைக்காமல்
உனைப் பார்த்துக்கொண்டிருக்கையில்
நீ கண்ணிமைத்து
உணர்த்திவிட்டாய் நீ ஓவியமல்ல என்று!

நான்
இயற்பியல் மாணவனாக இருந்தும்,
உன்னைப்
பார்க்கும்பொழுது என்னுள்
வேதியல் மாற்றங்கள்,
நீ என் உயிரியல் என்பதாலா?!

தாய் மடியில் குழந்தையாய்
தூங்கிக் கொண்டிருக்கும்
என் கவிதைகளில்
உன் காதல்...

அன்புடன்,
விஜய், SSLC :-)

Monday 8 February, 2010

தம்பி உடையான்

பிறந்தவுடன் பிரித்துக் கொண்டாய்
அம்மா அப்பா பாசத்தை

வளர வளர வரித்துக் கொண்டாய்
வருவோர் போவோர் கவனத்தை

எனக்கு மட்டுமே இருந்தவைகளில்
உனக்கும் ஒரு பங்கு உண்டானது

விளையாட நான் செல்லும்பொழுதெல்லாம்
விடாமல் வந்து இம்சித்தாய் நீ

உன்னைப் பார்த்துக்கொள்வதில் பலநாள்
என்னைவிட்டு சென்றது என் சுதந்திரம்

என்ன இருந்தாலும் எனக்கு நீ
அண்ணன் என்ற பதவி தந்தவன்

அன்பும் இருக்கிறது உன்னிடம்
அடிக்கடி அது வெளிப்படும்

உன்னைப் பார்த்துக்கொள்வதில் நானும்
வளர்த்துக்கொண்டேன் என் பொறுப்புணர்ச்சியை

விளையாட்டில் என்னோடு ஜோடிசேர
சளைக்காமல் இருந்தாய் நீ என்றும்

என் இரகசியங்களை போட்டுவைக்க
உன் காதுகள் இருந்தன எனக்கு

எத்துனை செய்துள்ளோம் சேர்ந்து நாம்
அத்துனையும் தெரியாதே இன்னும் அம்மாவிற்கு

அடித்தாலும் புடித்தாலும் உன்னை
பிடிக்காமல் போனதில்லை எனக்கு

சண்டையின் நாட்களுக்கு இடையில்
சந்தோஷத்தின் நிமிடங்களும் உண்டே

நீ என் தம்பியே இல்லை!” என்று திட்டியதையும்
நீக்கிவிடுகிறோம் நினைவிலிருந்து எளிதாய்

சண்டை நூல்களில் குறும்பு இழைகள் ஊடிய
நினைவுத் துணியை நெய்து உடுத்தியவர் நாம்

ஆர அமர இருந்து
ஆளுக்கொன்றாய் பகிர்ந்து

பலமுறை உன்னையும் பிடிக்காது எனக்கு
சிலமுறை நிரம்ப பிடிக்கும் உன்னை!” என்று

கூச்சத்தில் நெளிந்து பாசத்தில் நெகிழ்ந்து
தடுக்கும் ஆணவத்தை தவிர்த்துவிட்டு சொல்வாய்

புன்னகையில் ஒத்துக்கொள்வேன் நானும்
என் தம்பியாய் நீ கிடைத்தது தவம்தான் என்று!

பி.கு: இந்தக் கவிதைக்கு மட்டுமின்றி என் வாழ்க்கைக்கும் ஒரு கருப்பொருளாய் இருக்கும் என் தம்பி திரு.விக்ரம்-கு இது உரித்து!

Wednesday 3 February, 2010

காதலில் நான் - ஹைக்கூ (வகையில்)

ரவில் சூரியன்
பகலில் நிலா
காதலில் நான்!

தூக்கத்தில் விழிப்பு
விழிப்பில் கனவு
காதலில் நான்!

திங்களில் வீட்டிலிருந்தேன்
ஞாயிறில் வேலைக்குச்சென்றேன்
காதலில் நான்!

னிமையில் பேச்சு
கூட்டத்தில் அமைதி
காதலில் நான்!

ட்டாம்பூச்சி தேவதையாய்
தேவதைகள் பட்டாம்பூச்சியாய்
காதலில் நான்!

சோகத்தில் சிரிப்பு
மகிழ்சியில் அழுகை
காதலில் நான்!

விரலால் எழுதுகிறேன்
பேனாவால் கிறுக்குகிறேன்
காதலில் நான்!

காற்றை காண்கிறேன்
காட்சியை தவறுகிறேன்
காதலில் நான்!

வெயிலில் நனைகிறேன்
மழையில் காய்கிறேன்
காதலில் நான்!

பூமியில் உடல்
ப்ளூட்டோவில் மனம்
காதலில் நான்!

டிகாரம் ஓடுகிறது
காலமோ நிற்கிறது
காதலில் நான்!

'இன்றி'ல் இருந்துகொண்டு
'நேற்றி'ல் வாழ்கிறேன்
காதலில் நான்!

ற்பனை இல்லாதே
கவிதைகள் கருவாகும்
காதலில் நான்!

யாருக்கும் சொல்லாமல்
எல்லோர்க்கும் சொல்கிறேன்
காதலில் நான்!

ண்ணில் அவள்
காட்சியில் அவள்
காதலில் நான்!

பட்டாம்பூச்சி நண்பன்

எப்பொழுதோ சிலமுறை கைநீட்டுகையில்
எங்கிருந்தோ வந்தமரும் பட்டாம்பூச்சி ஒன்று
என்னவொரு அழகு என்று நான் மலைத்து
என்னென்ன நிறமென்று எண்ணிமுடிப்பதற்குள்
எட்டாமல் பறந்து கண்ணைவிட்டு மறைந்துவிடும்...

கண்ணில்பட்டு கவனத்தைக் கவரும் நூலொன்று
கருத்துள்ளது என்று என்னைக் கருதிட வைக்கும்
கட்டாயம் வாங்கிப் படித்திட நினைக்கையில்
கைக்குக் கிட்டாமல் காணாது போகும்...

எங்கோ எப்பொழுதோ கேட்டிருப்போம்
என்றும் நீங்காமல் ஒலித்துக்கொண்டிருக்கும்
மறந்துவிடுமா அத்தனை எளிதில்
மனதிற்கு பிடித்துவிட்டப் பாடல் என்றால்...

நொடியில் பிரிந்த பட்டாம்பூச்சியாய்
நானின்னும் படிக்காத நல்ல நூலாய்
நண்பா நீ சிலநாட்களில் பிரிந்துவிட்டாலும்
நினைவில் நிலைக்கும் இனிய பாடலாய்
நீங்காது நிற்பாய் என் மனதில்...

எங்கும் போய்விட முடியாது
என் நினைவைவிட்டு நீ
வரும் பல நாட்கள் நாம் மீண்டும் சந்திக்க
வருவேன் அப்பொழுதெல்லாம் நானும்
காத்திருக்கையில் கிறுக்கிய
கவிதைக் கையுறைகளுடன்!

Saturday 30 January, 2010

குறளில் ஒரு ஐயம்!

உன்னைப் பார்த்தது முதலாய்
ஒரு ஐயம்...
'சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்'
என்று வள்ளுவர் சொன்னது
செவிக்கு உணவில்லாத பொழுதா?
அல்லது கண்களுக்கா?

Friday 29 January, 2010

காலம்

ஓடாத கடிகாரத்திற்குத்
தெரியுமா
நேரம் ஓடிக்கொண்டிருப்பது?     1

”கால வெள்ளம்” என்கிறோம்,
நனைக்கவில்லையே எதையும்
என்றேன்;
திரும்பிப் பார்க்கையில்
தெரிந்து கொண்டேன்
கண்கள் நனைந்ததை!                  2

ஏனோத் தெரியவில்லை
காத்திருக்கும் பொழுதெல்லாம்
காலம் நீண்டுவிடுகின்றன
கடைசி சில நிமிடங்கள்!             3

(கா) விஜயநரசிம்மன், ஜனவரி 2010

Wednesday 27 January, 2010

வெள்ளைச் சட்டை

வெளியில் இருந்து வந்தவுடன்
வெள்ளைச் சட்டையை கழட்டி
கொடியில் மாட்டினேன்,
வெள்ளைச் சட்டை வெள்ளையாகவே இருந்தது
வெளிச்சத்தில் பார்த்ததில் நன்றாய் தெரிந்தது,
அழுக்காக்கி வந்தால்
அதட்ட ஆளில்லை
அழுக்காக்க காரணமுமில்லை
மைகசியும் பேனா இல்லை
கையை துடைக்க நன்பன் இல்லை
தூசி படிந்த இருக்கைகள் இல்லை
வீசிவிட்டு ஆட வெட்டவெளி இல்லை
ஓடி வேர்க்கும் விளையாட்டில்லை
ஆடி களைக்கும் பாடல் இல்லை
வெள்ளைச் சட்டையும் கறைபடவில்லை
வெள்ளைச் சட்டை வெள்ளயாகவே இருப்பது
வெறுமை ஒன்றை உணர்த்துகிறது
அவையெல்லாம் இருந்திருக்கலாம்
என் சட்டையும் கறைபட்டிருக்கலாம்...!