இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Saturday, 13 November 2010

தமிழ்த்தூது - பாரதி வழி

[பாரதியின் கிளிக்கண்ணியின் வடிவமைப்பில் கிளிக்குப் பதில் தமிழை விளியாகக் கொண்டவை - தமிழ்க்கண்ணிகள். காதலியிடம் தூது செல்ல தமிழை வேண்டியது!]

காதலியின் அடையாளம் மற்றும் ஊரை உரைத்தல்

எட்டியிருந் தும்மன
    ஏட்டில் நிறைபவள்
சுட்டும் சுடர்விழியாள் – தமிழே!
    தூயமென் நன்மொழியாள்!                                ௧

கன்னலின் தேனிநல்
    கனியின் இனியவள்
என்னவ ளைக்காண்பாய் – தமிழே!
    என்னிலை எடுத்துரைப்பாய்!                                ௨

பொன்னேறு மலர்களில்
    புதுமது வண்டுணும்
பொன்னேரி ஊராள் – தமிழே!
    புறப்படு நீதூதே!                                                        ௩

தண்மலர் இதழினைத்
    தானுணும் வண்டென
கண்கள வையிருக்கும் – தமிழே!
    காதலி யின்முகத்தில்!                                         ௪

திங்களின் கீற்றென
    திருநுதல் ஒளிருமே
மங்கைய வளிடமென் – தமிழே!
    வாட்டத்தை உரைத்திடுநீ!                                ௫

மென்னகைக் கணைகளை
    விடுத்துயிர் பறிப்பவள்
என்னகம் இருப்பவளே – தமிழே!
    எந்துயர் போக்கசொல்லே!                                ௬


தமிழே, உன்னை அன்றி வேறெதையும் நாடேன்...

அன்னமும் மேகமும்
    அணிமயில் தென்றலும்
என்றெதை யும்நாடேன் – தமிழே!
    இரக்கிறேன் உன்னருளே!    ௭

வள்ளியைக் குறிஞ்சியின்
    மாண்புடைக் குறத்தியைக்
கள்ளச் சிறுகுமரன் – தமிழே!
    கைக்கொள உதவினையே!                                ௮


தூது செல்ல கையூட்டு தருவேன்...

பாட்டினில் உனைவைத்துப்
    பலப்பல புகழ்மொழி
நாட்டுவேன் நன்றியோடே – தமிழே!
    நயந்துநீ செல்கதூதே!                                ௯

பிறமொழி நூல்களைப்
    பெயர்த்துநான் தருகுவன்
திறமொழி உன்னுருவில் – தமிழே!
    தெரிந்துநீ செல்கதூதே!                                ௧0


அவளும் உன்னைப் போன்றவளே, எனவே தயங்காது செல்க தூது...
[தமிழுக்கும் காதலிக்கும் இரட்டுற மொழியப்பட்டவை]

இன்மொழி படைத்ததால்
    இசையொடு இசைதலால்
உன்னைதான் நிகர்த்தவளே – தமிழே!
    உயிரெனக் கிருவருமே!                                ௧௧

மனத்துயர் துடைப்பதில்
    வந்துளம் நிறைவதில்
உனையவள் நிகர்த்தவளே – தமிழே!
    உயிரெனக் கிருவருமே!                                ௧௨

மதுரையில் வளர்ந்ததில்
    வளகவி அருள்வதில்
மதுவுனை நிகர்த்தவளே – தமிழே!
    உயிரெனக் கிருவருமே!                                ௧௩

சிலம்பதை அணிவதில்
    சிறப்புகள் அடைவதில்
நிலவுனை நிகர்த்தவளே – தமிழே!
    நீங்களெ னக்குயிரே!                                ௧௪


தமிழின் சிறப்பும் அவளின் சிறப்பும்...

[சங்கவிலக்கியம்]
கபிலரின் குறிஞ்சியில்
    கள்ளென நிறைதிநீ
அபிதநல் அமுதவளைத் – தமிழே!
    அடைந்திட தூதுசொல்லே!                          ௧௫
[அபிதம் – பருகப்படாதது]

[சங்கமருவிய கால இலக்கியம்]
சீரெழு குறளினில்
    திருவொடு திகழ்திநீ
சீரெழும் என்னவளைத் – தமிழே!
    சீக்கிரம் எனக்கருளே!                                ௧௬

சேரமான் தம்பியின்
    சிலம்பினில் வாழ்திநீ
ஈரமான் விழியினாளைத் – தமிழே!
    இக்கணம் எனக்கருளே!                                ௧௭
   
[சமய இலக்கியம்]
சம்பந்தன் துதிகளில்
    தவமெனச் சேர்திநீ
வம்புசெய் விழியினாளைத் – தமிழே!
    வந்திட தூதுசொல்லே!                                ௧௮

கம்பனின் பாட்டினில்
    கவினுற வாழ்திநீ
அம்புறை விழியினாளைத் – தமிழே!
    அடைந்திட தூதுசொல்லே!                        ௧௯

[புதுக்கவிதை]
புதுப்புதுக் கவிகளில்
    பொலிவொடு வளர்திநீ
மதுபொழி விழியினாளைத் - தமிழே!
    வந்திட தூதுசொல்லே!                                ௨0

அவளை என்னிடம் சேர்த்து விடு...

அன்னையும் தோழியும்
    ஆருயி ரும்எனக்[கு]
உன்னைப் போலவளும் – தமிழே!
    உதவிடு தூதுசென்றே!                                ௨௧

No comments:

Post a Comment