இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Tuesday 31 December, 2019

மார்கழி வெண்பா - 15 - கூட சதுர்த்தம்

#மார்கழி 15

பாருழற்றும் வித்தைப் பருத்தலற வற்றச்செய்
தாரிருவர் பாதத் தவவலியால் - சேரின்றெம்
பத்தும் பிணிநெஞ்சே பந்தமறு வந்தரந்து
பாவிருவர் பாதம் பணிந்து!

(பலவிகற்ப நேரிசை வெண்பா; கூடசதுர்த்தம்)

பதம் பிரித்து:

பார் உழற்றும் வித்தை பருத்தல் அற வற்ற செய்தார்
இருவர் பாத தவ வலியால் - சேர் இன்று எம்
பத்தும் பிணி நெஞ்சே பந்தம் அறு அந்தரத்து
பாவு இருவர் பாதம் பணிந்து.

பொருள்:
இவ்வுலக வாழ்வில் (பார்) [மீண்டும் மீண்டும் பிறந்து] துன்புற (உழற்றும்) [காரணமாக இருக்கும்] விதை போன்ற (வித்தை; வித்து = விதை) [வினையை] வளர்தல் இன்றி (பருத்தல் அற) தமது திருவடிகளின் (பாத) தவவலிமையால் (தவ வலியால்) தீரும்படி செய்தார் (வற்றச் செய்தார்) மாணிக்கவாசகரும் ஆண்டாளும் (இருவர்);
பாசத்திற்கு ஆட்பட்ட (பத்தும்; பத்து = பற்று = பாசம்) என் துன்பமிகு நெஞ்சே (பிணி நெஞ்சே; ;பிணி = துன்பம்), பற்று (பந்தம்) விட்டதாகிய (அறு) முத்தியில் (அந்தரம்) பொருந்தியிருக்கும் (பாவு) இருவரின் திருப்பாதங்களை (பாதம்) வணங்கி (பணிந்து) இன்றே (இன்று) அடை (சேர்).


கருத்து:
பிறவிக் கடலில் மீண்டுமீண்டும் சேர்க்கும் விதை போன்றதான வினையை வற்றச் செய்த இருவரை, அவர் பாதம் பணிந்து இன்றே அடை, என் நெஞ்சமே எ-று.

கூட சதுர்த்தம்:
கூடம் = மறை (இரகசியம்), சதுர்த்தம் = நான்காமானது (இங்கே நான்காமடியான ஈற்றடியைக் குறிக்கும்).
பாடலின் ஈற்றடியிலுள்ள எழுத்துகள் மற்ற மூன்றடிகளில் பொதியுமாறு அமைத்தல் ‘கூட சதுர்த்தம்’ ஆகும்.
இப்பாவின் ஈற்றடி எழுத்துகள் மொழிமுதலாவன சீர்முதலிலும் ஆகாதான இடையிலும் கடையிலும் சீருக்கொன்றாய் ஏனைய மூவடிகளிலும் அமைந்துள்ளதைக் கண்டுகொள்க. (படத்தில் அவை வேறு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளன).

இனிய காலை வணக்கம்...

நன்றி.

(C)2019, Vennkotran.

Monday 30 December, 2019

மார்கழி வெண்பா - 14 - ஏகநாகபந்தம்

#மார்கழி 14

பண்ணாரும் வேதம் பகர்கவரும் வேளும்மாய்க்
கண்ணாரை வவ்வமெய்க் கண்ணாரை - வீரர்தேடு*
தேவின் விரைவீதார் சூடுந் திருப்பாவைத்
தாளதாக திர்ப்பாவை மண்ணு!

(இன்னிசை வெண்பா; ஏகநாகபந்தம்)

பதம்பிரித்து:

பண் ஆரும் வேதம் பகர், கவரும் வேளும் மாய்
கண்ணாரை வவ்வ மெய்க்கு அண்ணாரை - வீரர் தேடு
தேவின் விரை வீ தார் சூடும் திருப்பாவைத்
தாள் அது ஆ, கதிர் பாவை மண்ணு.

பொருள்:
இசையோடு பொருந்திய (பண்ணாரும்) தமிழ் மறையை (வேதம்) உரைத்த (பகர்),
[பாசத்திற்கு] ஈர்க்கின்ற (கவரும்) மன்மதன் (வேளும்) இறக்கும்படி (மாய்) [தீய்க்கின்ற] கண்ணை உடையவரை (கண்ணாரை) பற்றுவதான (வவ்வ) உண்மைப் பொருளுக்கு (மெய்க்கு) தலையாய வழியானவரின் (அண்ணாரை = மாணிக்கவாசகரை),
[தவமாகிய] வீரம் உடையவர்கள் (வீரர்) காண விழையும் (தேடு) இறைவனின் (தேவின்) நறுமணமிக்க (விரை) மலர் (வீ) மாலையை (தார்) சூடுகின்ற தெய்வப்பெண்ணின் (திருப்பாவை = ஆண்டாள்)
திருவடிகளில் சேர்ந்திருக்க (தாளது ஆ[க]) [அவர்கள் அருளிய] ஒளிமிக்க (கதிர்) பாடல்களில் (பாவை) மூழ்கு (மண்ணு).


பொழிப்பு: மன்மதனை எரித்த கண்ணரான சிவனைப் பற்றுவதான உண்மைக்கு தலைமையானவரும், இசை பொருந்திய தமிழ் மறைகளைப் உரைத்தவருமான மாணிக்கவாசகரையும், தவமுடையோர் தேடும் இறைவனான திருமாலின் மாலையைச் சூடிய தெய்வப்பெண்ணான ஆண்டாளையும் திருவடி சரணம் எய்த அவர்கள் அருளிச் சென்ற ஒளிமிக்க பாக்களில் மூழ்குக எ-று.

இவர்கள் அருளிய தமிழ்மறைகளான திருமுறையும் திவ்வியபிரபந்தமும் இசைப்பாக்களானமையால் ‘பண்ணாரும் வேதம்’ எனப்பட்டன.
‘பண்ணாரும் வேதம் பகர்’ என்பதும், ‘தாளதா’ என்பதும் இருவருக்குமே நிற்கும்.

தவமுடையாரை ’வீரர்’ என்றது அத்தவத்தின் அருமை கருதியாம். திருக்குறளின் ‘தவம்’ என்ற அதிகாரத்தைக் காண்க!

*வீரர்தேடு - இது பூச்சீராகாதோ எனின் ஆகாது. வல்லினமுன் நின்ற ரகரவொற்றைக் கழித்தலகிட இது காய்ச்சீராகும், அல்லது, தளைசிதையுமிடத்து குற்றுகரம் அலகிடப்படாது என்னும் விதிப்படிக் கொளினும் இது காய்ச்சீராகவே நின்று தளைசிதையாது.

ஏகநாகபந்தம்: ஒரு பாம்பின் உடலில் தலைமுதல் வால்வரை பொருந்த அமைப்பது. உடல் தன்மீது தானே குறுக்கிடும் இடங்களில் அமையும் எழுத்துகள் பொதுவாக நிற்க வேண்டும். இப்பா ஏகநாகபந்தமாய் அமைவதைப் படத்தில் காண்க!

இனிய காலை வணக்கம்...

நன்றி!

(C)2019, Vennkotran.

Sunday 29 December, 2019

மார்கழி வெண்பா - 13 - நான்காரைச் சக்கரபந்தம்

#மார்கழி 13

வாதமார் தேவைப் பணிந்தேசார் வாவாவார்
சாதேய்க்கும் போதடி கண்வாண் கடிதடையார்
போதமா வாழிதா வாதாழி வாமாறி
லேதமிது தேர்மாத வா!

(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா; நான்காரைச்சக்கர பந்தம்)

பதம் பிரித்து:
வாதம் ஆர் தேவை பணிந்தே சார் வா; ஆவார்
சா தேய்க்கும் போது அடிகள் வாண் கடிது அடையார்,
போதம் மா ஆழி தாவாது ஆழி; வா மாறு இல்
ஏதம் இது தேர் மாது அவா!

பொருள்:
வாதவூரின் (வாதம் ஆர்) இறைவனை (தேவை = மாணிக்கவாசகர்) பணிந்து, சரணடைய (சார்) வா,
அவ்வாறு சேராதவர் (ஆவார் - ’ஆகார்’ என்பதன் திரிபு) எமன் (சா) வந்து விரட்டும் (தேய்க்கும்) பொழுதில் (போது) திருவடிகளான (அடிகள்) வீடுபேற்றை (வாண்) விரைந்து (கடிது) அடைய இயலாதவர் ( அடையார் ஆவார்);
ஞானமாகிய (போதம்) பெரிய (மா) கடலை (ஆழி) தாண்ட இயலாது (தாவாது) அதனுள் ஆழ்வர் (ஆழி),
வேறு பதிலி இல்லாத (மாறு இல்) துணை (ஏதம்) இதுவே என்று தெளி (தேர்), இத்தெய்வப் பெண்ணை (மாது = ஆண்டாள்) விரும்பிச் [சரண்டைய] (அவா) வா (வா).


பொழிப்பு:
வாதவூரின் இறைவனான மாணிக்கவாசகரையும், தெய்வப்பெண்ணான ஆண்டாளையும் பணிந்து சேர விருப்பொடு வருக, வீடுபேறாம் துணைக்கு இவர்களைவிட்டால் வேறு வழியில்லை; இவர்களை இப்போதே சேராதவர் எமன் வந்து நெறிக்கும் போது விரைந்து சேர இயன்றாலும் இயலாமல் இவ்வுலக ஞானம் என்ற கடலில் மூழ்கி அதனை தாண்ட இயலாது அதனுள்ளேயே ஆழ்வர் எ-று.

விளக்கம்:
வாதம் - வாதவூர்;
சா - எமன் (ஆகுபெயர்);
அடிகள் வாண் - உருவகம் - அடிகளாகிய வாண், வாண் - வீடுபேறு / உய்வு (ஆகுபெயர்);
போதம் - ஞானம், இவ்வுலக ஞானமாகிய விஞ்ஞானம், இது மாயையையும் பாசத்தையும் சுட்டுகிறது;
ஆழி - கடல்.

நான்காரைச் சக்கர பந்தம்:
இப்பா நான்கு ஆரங்கள் (forks) கொண்ட சக்கரத்தில் அமையுமாற்றைப் படத்தில் காண்க.
சக்கரத்தின் நடுவில் உள்ள குமிழில் (வா) தொடங்கி, ‘1’ என்ற எழுத்திட்ட அம்புக்குறி திசையில் (இடமிருந்து வலமாக) ஆரத்தில் படித்துப் பின் சக்கரவட்டத்தில் கீழிறங்கிப் பிறகு மேல்நோக்கி ஆரத்தில் ‘வா’-வரை படித்துப் பின் வந்த வழியே மீண்டும் ஆரத்தில் (மேலிருந்து கீழாகப்) படித்து... இவ்வாறே முழுச் சக்கரத்தையும் படித்தால் தொடங்கிய இடத்திற்கே வந்து பாடல் சரியாகி முடிந்து சக்கரமாக அமையும்!

சக்கரத்தின் உள்வட்டத்தில் ‘மார்கழி’ என்ற சொல் அமைதலையும் கண்டுணர்ந்து மகிழ்க!

இனிய காலை வணக்கம்...

நன்றி!

(C)2019, Vennkotran.

Saturday 28 December, 2019

மார்கழி வெண்பா - 12 - இதழகற்பா

#மார்கழி 12

அணிந்தளித்த நல்லணங்கை ஆண்டாளைக் காதல்
கனிந்தளித்தக் கன்னலைக் கள்ளைத் - தணிந்தநதி
ஆடலைச் செய்தற்கன் றாதியா னானைநல்
ஏடியற்றச் செய்தானை ஏல்!

(நேரிசை வெண்பா; இதழகற்பா - நிரோட்டகம்)

பதம் பிரித்து:
அணிந்து அளித்த நல் அணங்கை, ஆண்டாளை காதல்
கனிந்து அளித்த கன்னலை கள்ளை - தணிந்த நதி
ஆடலை செய்தற்கு அன்று ஆதி ஆனானை நல்
ஏடு இயற்ற செய்தானை ஏல்.

பொருள்:
[திருமாலுக்கு மாலையை] தான் சூடிக் கொடுத்த தெய்வப்பெண்ணை (அணங்கு), ஆண்டாளை, [இறைவனுக்குத்] தன் காதலைக் கனிந்து அளித்த கரும்பு போன்ற இனியவளை (கன்னல் = கரும்பு), தேன் போன்றவளை (கள்) (ஏல் - ஏற்றுப் போற்று);
வைகை (நதி) [ஆற்றில் வெள்ளம் வரச் செய்து பின் அது] அமைதியுறுவதான (தணிந்த) திருவிளையாடலை (ஆடலை) [சிவனார்] செய்வதற்கு முன்பு (அன்று) காரணமாய் (ஆதி) இருப்பவனை (ஆனானை = மாணிக்கவாசகனை) [இறைவனையே] நல்ல கோவை என்ற நூலை ஏட்டில் எழுத வைத்தவனை (ஏடு இயற்றச் செய்தானை) ஏற்றுப் போற்று (ஏல்).
(’ஏல்’ என்ற ஏவல் வினை இருபுடையும் நின்றது. இதுவும் நெஞ்சுக்குச் சொன்னது! முன்னிலையும் ஆம்!)



விளக்கம்:
கன்னல், கள் - ஆகியன உவமை ஆகுபெயர்.
பரி நரியான வழக்கில் மாணிக்கவாசகரை பாண்டியன் சிறையிலிட, அவரை மீட்கும் பொருட்டே இறைவன் வைகையில் வெள்ளம் வந்து வடிவதான திருவிளையாடலைச் செய்தருளினான், எனவே அவ்வாடலுக்கு இவரே ஆதி (காரணம்) எனப்பட்டார்!
’பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக’ என்று பொன்னம்பல நாதனே மாணிக்கவாசகரைக் கேட்டு, அவர் பாடியதைத் தன் கைப்படவே ஏட்டில் எழுதி ‘திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து’ என்று கையொப்பமும் போட்டருளினார் என்பது வரலாறு. நூலினது நன்மை ஏட்டின் மேல் ஏற்றி ‘நல் ஏடு’ என்று மொழியப்பட்டது!

இதழகற்பா / நிரோட்டகம்:
‘இதழ்+அகல்+பா’
‘நிர்+ஓட்டகம்’ (’நிர்’ - இன்மை; ’ஓஷ்டம்’ என்பதன் தற்பவம்; ஓஷ்டம் - இதழ் / உதடு)

உதடுகளைக் குவியச் செய்யும் உயிர்களான உ, ஊ, ஒ, ஓ, ஔ ஆகியனவும், உதட்டின் (அல்லது உதடு+பல்லின்) அசைவால் பிறக்கும் மெய்யெழுத்துகளான ப், ம், வ் ஆகியனவும் வராமல் யாக்கப்படும் பா ‘இதழகற்பா’ அல்லது ‘நிரோட்டகம்’ எனப்படும்.
இப்பாவை உரக்கச் சொல்லிப் பார்த்தால் உதடுகள் அசையாமலே இதனைச் சொல்ல இயல்வதை உணரலாம்!

இனிய காலை வணக்கம்...

நன்றி.

(C) 2019, Vennkotran.

Friday 27 December, 2019

மார்கழி வெண்பா - 11 - மெல்லினப்பா

#மார்கழி 11

ஞானமே நண்ணி நமனண்ணி னானைநன்
நாமமே நண்ணி மணமொண்ணும் - மானைநான்
நண்ணினேன் மேன்மை நனிமன்ன மண்ணாணி
விண்ணினை நண்ணமன மே!

(நேரிசை வெண்பா; மெல்லினப்பா)

பதம் பிரித்து:
ஞானமே நண்ணி நமன் நண்ணினானை,
நன்நாமமே நண்ணி மணம் ஒண்ணும் மானை நான்
நண்ணினேன், மேன்மை நனி மண்ண, மண் நாணி
விண்ணினை நண்ண மனமே.

பொருள்:
ஞான மார்கத்தை (ஞானமே) விரும்பி (நண்ணி) குருவாய் சிவனை (நமன்) பொருந்திய மாணிக்கவாசகனையும் (நண்ணினானை),
திருமாலின் நல்ல நாமத்தை (நன் நாமம்) விரும்பி (நண்ணி) அவனையே திருமணம் (மணம்) செய்துகொண்டவளான (ஒண்ணும்) மான் போன்ற ஆண்டாளையும் (மானை)
நான் விரும்பிப் பொருந்தினேன் (நண்ணினேன்), இவ்வுலக வாழ்வை ஒதுக்கி (மண் நாணி) உயர்வான குணங்களை அடையவும் (மேன்மை நனி மன்ன), முத்தி அடையவும் (விண்ணினை நண்ண), என் நெஞ்சே (மனமே).


பொழிப்பு: மனமே, நான் இவ்வுலக வாழ்வை ஒதுக்கி, மேன்மை பெற்று, முத்தி பெற விழைந்து, நால்வகை மார்கத்துள் ஞான மார்கத்தைப் பொருந்தித், தனது குருவாய் சிவனை அடைந்த மாணிக்காவாசகரையும், நாமத்தைத் துதித்துத் திருமாலை கணவனாய் அடைந்த ஆண்டாளையும் பொருந்தி வழிபடுகிறேன் (எ-று).

நண்ணுதல் - பொருந்துதல், விரும்புதல்.
நமன் - ’நம்மவன்’, ‘நம் தலைவன்’ என்ற பொருளில் சிவனைக் குறித்தது (’நமர்’ என்று பன்மையில் சொல்வதைப் போல, ஒருமையில் ‘நமன்’ எனப்பட்டது!)
நாமம் - பெயர். அது புகழையும் (வைபவம்) குறிக்கும்.
மான் - உவமையாகுபெயர்.
மேன்மை - பண்பாகுபெயர் (மேன்மையான குணங்கள் ‘மேன்மை’ எனப்பட்டன).
மண் - இடவாகுபெயர் (உலகில் வாழ்வதாகிய வாழ்வை ‘உலகு’ என்ற பொருள்தரும் சொல்லால் குறித்தனம்).
விண் - இதுவுமது.

’ங், ஞ், ண், ந், ம், ன்’ ஆகிய மெல்லின எழுத்துகளும், அவற்றின் வரிசையான உயிர்மெய்களும் மட்டுமே பயின்று வருவதால் இது மெல்லினப்பா ஆயிற்று. (இப்பாவில் ‘ங்’ இடம்பெறவில்லை!)

நன்றி.

(C) 2019, Vennkotran. 

Thursday 26 December, 2019

மார்கழி வெண்பா - 10 - இடையினப்பா

#மார்கழி 10

வாவியுள வீவிரவு வாளை விரவியே
யாவியலை யாளை யியைவாரை - வீயைவளை
வேளையெரி வேவவிழி யேவு வரையரை
யாளுவழி யாரைவிழை வாய்! 

(நேரிசை வெண்பா; இடையினப்பா)

பதம்பிரித்து:

வாவி உள வீ விரவுவாளை விரவியே
ஆவி அலையாளை இயைவாரை - வீ ஐ வளை
வேளை எரி வேவ விழி ஏவு வரையரை
ஆளு வழியாரை விழைவாய்.

குளத்தில் (வாவி) உள்ள மலரில் (வீ) நிறைந்திருக்கும் சரசுவதியை (விரவுவாளை; விரவுதல் - கலத்தல்) சேர்ந்து [வணங்கி] (விரவியே)
அலைமகளா இலக்குமியை (அலையாளை) உயிரில் (ஆவி) சேர்க்கும் திருமாலையும் (இயைவாரை),
ஐந்து (ஐ) மலர்களால் (வீ) ஆன கணைதொடுக்க வில்லை வளைக்கும் (வளை) மன்மதனை (வேளை; வேள் - மன்மதன்) தீயில் (எரி) வெந்துபோகும்படி (வேவ; ‘வேக’ என்பது பேச்சுவழக்காய் ‘வேவ’ என்று நின்றது) தன் கண்ணின் (தீயை) (விழி) விடுத்த (ஏவு) இமயமலையில் வாழும் சிவனையும் (வரையர்; வரை - மலை, எனவே சிவன் ‘வரையர்’ எனப்பட்டார்)
[தம் பாக்களால்] ஆள்கின்ற (ஆளு) [நமக்கு வீடுபேறாகிய] வழியைத் தருவாரை (வழியாரை) [நெஞ்சே] நீ விரும்பு (விழைவாய்).

பொழிப்பு: குளத்தில் மலர்ந்திருக்கும் மலரில் உறையும் சரசுவதியை வேண்டி, தனது உயிராக இலக்குமியைக் கலக்கும் திருமாலை ஆளும் ஆண்டாளையும், ஐந்துமலர்க்கணைகளைத் தொடுக்க வில்லை வளைக்கும் மன்மதன் தீயில் வெந்துபோகும்படி தனது விழியின் சுடரை விடுக்கும் இமயத் தலைவரான சிவனை ஆளும் மாணிக்கவாசகரையும் மனமே, நீ கதியாக எண்ணி விரும்பி வணங்குக எ-று.

இடையின மெய்களான ய், ர், ல், வ், ழ், ள் ஆகியனவும் அவற்றின் வரிசையான உயிர்மெய்களும் மட்டுமே பயின்று வருவதால் இது ‘இடையினப்பா’ ஆயிற்று.

நன்றி!

(C) 2019, Vennkotran.

மார்கழி வெண்பா - 9 - வல்லினப்பா

#மார்கழி 9

சித்தத் துறைதபச் சத்தைக் கொடுத்திதப்
பத்தைச் சிதைத்திடப் பத்தைக் கொடுதுதித்
திட்டைப் படிகடை தித்திப் புறப்படைத்
திட்டச் சகத்தடி செப்பு!

(இன்னிசை வெண்பா; வல்லினப்பா; சந்தப்பாவும் ஆம்!)

பதம் பிரித்து:

சித்தத்து உறை தப சத்தை கொடுத்து இத
பத்தை சிதைத்திட பத்தை* கொடு துதித்து
இட்டை படி கடை தித்திப்பு உற படைத்திட்ட
சகத்து அடி செப்பு

*சிவனுக்கு: ‘சிதைத்து இட(ப்)பத்தைக் கொடு’ என்றும்
திருமாலுக்கு: ‘சிதைத்திடப் பத்தைக் கொடு’ என்றும் நிற்கும்.

‘இடபத்தைக் கொடு’ - காளையூர்தி கொண்டு (இடபம் = ‘ரிஷபம்’ என்பதன் தற்பவம், ‘கொண்டு’ என்பது ‘கொடு’ என்று நின்றது குறுக்கல் விகாரம்)
’பத்தைக் கொடு’ - பத்து அவதாரங்களைக் கொண்டு... என்று பொருள் கொள்க. இது சிவனுக்கும் திருமாலுக்கும் இரட்டுற மொழியப்பட்டது!

ஆழ்மனத்தில் (சித்தம் - சித்தத்து) உறைகின்ற [இறைவன்], தவஞ்செய்வதற்கான தெம்பை (சத்து) கொடுத்து,
[இவ்வுலக வாழ்வின் மீதான] இன்பமிகு (இத) பத்தை (பற்றை) சிதைத்திட |(சிவன்:) இடப வாகனம் மீதேறியும் / (திருமால்:) பத்து அவதாரங்கள் கொண்டும்| (வரும்படியும்)
துதித்து (வணங்கி நிற்கும் யான்; ‘துதித்த’ என்பது ‘துதித்து’ என்று மருவி நின்றது!) விரும்பியபடி (இட்டைப்படி; ‘இஷ்டம்’ - இட்டை என்று நின்றது தற்பவம்) வீடுபேற்றை (கடை) இனிதாக (தித்திப்பு) அடையும்படியும் (உற) பாக்கள் படைத்தருளிய (படைத்திட்ட)
(எனக்கு) உலகம் போன்றோரது (சகம் - சகத்து)  திருவடிகளை (அடி) போற்று (செப்பு) எ-று.

பொழிப்பு: ‘இனிது’ என்று எண்ணி மயங்கும் இவ்வுலக வாழ்வின் பற்றைச் சிதைக்கவும், தபத்திற்கான வலிமையை அருளவும் என் உளத்தில் வாழும் இறைவன் விடையேறியும், பத்து அவதாரங்கள் கொண்டும் வந்து எனக்கருளி, நான் விரும்பியபடி வீடு பேற்றை இனிதாய் அருளும்படிக்கு உதவுகின்ற பாக்களைப் படைத்தளித்த, எனக்கு உலகம் போன்றவர்களான மாணிக்கவாசகர் & ஆண்டாள் ஆகியோரின் திருவடிகளைப் போற்றுக!

‘மாணிக்கவாசகர் & ஆண்டாளின் பாக்களைப் படிப்பதன் மூலம் தவவலிமையும், பாச நாசமும், வீடுபேறும் எளிதில் கிட்டும்’ என்பது கருத்து. இதை ‘நெஞ்சுக்கு உரைத்தது’ என்றும் கொள்ளலாம்! (’செப்பு’ என்ற முன்னிலை ஏவல் நெஞ்சை நோக்கியது! எதிர் நிற்கும் அன்பரை நோக்கி ஆற்றுப்படுத்தியதாகவும் கொள்ளலாம்!)

’வல்லினப்பா’ என்பது வல்லெழுத்துகளான க், ச், ட், த், ப், ற் ஆகிய மெய்களையும் அவற்றின் உயிர்மெய் வரிசை எழுத்துகளை மட்டுமே கொண்டு அமைவது. பாவில் சந்தக்குழிப்பு அமைந்ததை வாய்விட்டுச் சொல்லி அறிக!

நன்றி!

மார்கழி வெண்பா - 8 - நாற்கூற்றிருக்கை

#மார்கழி 8

ஓரொருவன் ஈர்த்தாளொன் றோரிருப்பே மூளச்செய்
வாரிருவர் கூறொருபா மாண்புரைக்கின் - சேரொரு
மாவிருக்கு முன்னாம் மறைநான்கும் மூவிரண்டாய்ப்
பாவுறுப்பும் ஒன்றுவன பார்!

(நேரிசை வெண்பா; நாற்கூற்றிருக்கை)

பதம் பிரித்து:

ஓர்(1) ஒருவன்(1) ஈர்(2) தாள் ஒன்று(1) ஓர்(1) இரு(2)ப்பே மூ(3)ளச் செய்வார்
இரு(2)வர் கூறு ஒரு(1) பா மாண்பு உரைக்கின் - சேர் ஒரு(1)
மா இரு(2)க்கு முன்(3) ஆம் மறை நான்கு(4)ம் மூ(3) இரண்டாய்(2)
பாவு உறுப்பும் ஒன்று(1)வன பார்

எப்போதும் சிந்திக்கும் (ஓர்) இறைவனது (ஒருவன்) பிறவியை அறுக்கும் (ஈர்) திருவடிகளை (தாள்) சேரும் (ஒன்று) ஒரு நிலையாகிய தன்மையை (ஓர் இருப்பு) பெருகி உண்டாகும்படி (மூள செய்) செய்யும் இருவர் (மாணிக்கவாசகர் & ஆண்டாள்) பாடிய தனித்துவமான பாக்களின் (கூறு ஒரு பா; ஒரு - தனித்தன்மை) பெருமையை (மாண்பு) சொல்வதானால் (உரைக்கின்) ஒரு பெரிய இருக்கு (ரிக் வேதம்) முதலாகிய (முன் ஆம்) தொகுதியாக (சேர்) நான்கு மறைகளும் (ரிக், யசுர், சாம, அதர்வன வேதங்கள்) அவற்றின் அங்கமாக இருக்கும் (பாவு உறுப்பு) ஆறும் (மூ-இரண்டாய்; வேதங்களின் அங்கம் ஆறு, அவை: சிட்சை, வியாகரணம், சந்தசு, நிருக்தம், சோதிடம், கற்பம் என்பன) மட்டுமே நிகரானவை (ஒன்றுவன) என்று அறிக (பார்!).

பொழிப்பு: நாம் எப்போதும் எண்ணும் இணையற்ற இறைவனின் பிறவியை அறுக்கும் தாளைக் கூடுவதான இருப்பை தர வல்ல அந்த இருவரின் பாக்களின் பெருமையைப் பேசுவதானால் அவை இருக்கு முதலாகிய நான்கு வேதங்களும் அவற்றின் அங்கங்களும் மட்டுமே ஈடாக இருக்க வல்லவை என்று அறிக! (மாணிக்கவாசகர் & ஆண்டாளின் பாக்கள் தமிழ் வேதம் ஆகும் என்றவாறு!)


நாற்கூற்றிருக்கை: ஒன்றில் தொடங்கி ஒன்றுவரை ஒவ்வொன்றாய் நான்குவரை எண்ணிக்கை வளர்ந்தும் தேய்ந்தும் வருமாறு சொற்களை அமைத்தல் நாற்கூற்றிருக்கை ஆகும். எண்களைச் சுட்டும் சொற்கள் எண்ணுப் பொருளிலோ அல்லது வேறொரு பொருளைக் குறித்தோ வரலாம்.
எ-டு: ‘ஓர்’ என்பது ஒன்று என்பதைக் குறிக்கும் சொல்லாயினும் இது முதலடி முதல்சீரில் ‘ஓர்தல்’ (எண்ணுதல்) என்ற பொருளில் வந்தது, இதுவே பின்னர் மூன்றாம் சீரில் ‘ஒன்று’ என்ற எண்ணுப் பொருளிலேயே வந்தது. இவ்வாறே ’ஈர் (பிள/2)’‘மூ(ள) (பெருகி உண்டாக்க/3)’, ‘இரு(ப்பு) /2’ எனப் பிறவும் வந்தன. (நாற்கூற்றிருக்கை அமையுமாறு படத்திலும் காட்டப்பட்டுள்ளது!)

திருஞான சம்பந்தர் முதலாய், திருமங்கை ஆழ்வார், நக்கீர தேவ நாயனார் (11ம் திருமுறை), அருணகிரிநாதர் ஆகியோரு ‘திருவெழுகூற்றிருக்கை’ அருளியுள்ளனர். இது ஒன்றில் தொடங்கி ஒவ்வொன்றாய் வளர்ந்து தேய்ந்து ஏழுவரை செல்லும் அமைப்புடையது, இவை பெரும்பான்மை நீண்ட ஆசிரியப்பாக்களால் அமையும். பாம்பன் திருகுமரகுருதாச சுவாமிகள் விருத்தப்பாவில் நாற்கூற்றிருக்கை அருளியுள்ளார்.

நன்றி.

(C) 2019, Vennkotran.

மார்கழி வெண்பா - 7 - இரதபந்தம்

#மார்கழி 7

சுவைமேவு கற்பார்க்கச் சோதி அணித்தாம்
நிலைமேவ மாற்று நிறைபாக் - கிறையார்வத்
தாசிசேர்த்தீர் சேர்ந்திலங்கு தஞ்சருளும் யோகமார்ச்சர்
வாசகஞ்சேர் மாணிக்க மே!

(நேரிசை வெண்பா; தேர்க்கட்டு / இரதபந்தம்; இரட்டுறமொழிதலுமாம்.)

கற்பவர்க்கு இனிய சுவை தருவதாயும் (சுவைமேவு),
அந்தச் சோதியாகிய இறைவனின் அருகில் இருக்கும் (அணித்தாம் - அணித்து+ஆகும்) நிலை பொருந்தவும் (நிலைமேவு) செய்யும் (மாற்று - நிலையை மாற்று)
நிறைவான பாக்களுக்கு (நிறை பாக்கு)
இறைவனே ஆர்வத்தால் ஆசி சேர்க்கும் தன்மையீர் (இறை ஆர்வத்து ஆசி சேர்த்தீர்);
உய்வை அருளும் (தஞ்சருளும்) இணையாக விளங்கும் (சேர்ந்திலங்கு) (திருவடிகளை உடைய)
யோகிகளான (யோகம்) பூசைக்குரியவரே (ஆர்ச்சர் - ‘அர்ச்சனை’ என்பதிலிருந்து ஆர்ச்சர் என்று ஆனது, அர்ச்சனைக்குரியவர்)...

வாசகஞ்சேர் மாணிக்கமே:

1. திருவாசகம் சேர்த்த மாணிக்கவாசகரே
2. வாசு அகம் சேர் மாணிக்கமே (வாசுதேவனின் உளத்தில் நிறைந்த மாணிக்கம் போன்ற ஆண்டாளே!)



(இப்பா இரதபந்தமாவதைப் படத்தில் கண்டறிக! மாணிக்கவாசகர் - ஆண்டாள் இருவருக்குமே தனித்தனியே இப்பா பொருந்துவதால் இது இரட்டுறமொழிதலும் ஆயிற்று!)

இனிய காலை வணக்கம்...

நன்றி.

(C) 2019, Vennkotran.

மார்கழி வெண்பா - 6 - மடக்கு

#மார்கழி 6

வல்லகுரு தேடவா மாணிக்க வாசகனே
வில்லியூர் மாணிக்க வாசகனே - அல்லலறத்
தார்சூடித் தந்ததவத் தன்மையினால் ஆண்டாளே
ஓர்குருத்தின் கண்டாண்டா ளே!

(மடக்கு - இறுதிமடக்கு)

(1-4ம் அடிகள் மாணிக்கவாசகருக்கும்,
2-3ம் அடிகள் ஆண்டாளுக்கும் ஆகும்! ‘அல்லலற’ என்ற தனிச்சொல் இருபுடையும் நிற்கும்!)


துன்பம் நீங்க (வீட்டை அருள) வல்ல குருவை விரும்பித் தேடிய மாணிக்கவாசகனே
(அத்தகைய குருவை) ஒரு குருத்த மரத்தின் (கீழே) ஆண் (சிவன்) தாளைக் கண்டாய் (கண்டு)!

வில்லிபுத்தூரின் பெருமை மிகு ஆண்டாளுக்கு விருப்பம் துன்பம் நீங்க குற்றம் அகல,
(அதனை) மாலையைச் சூடிக்கொடுத்த தவத்தின் தன்மையினால் பெற்றாள்!

மடக்கு விளக்கம்:
1: மாணிக்கவாசகனே - (வெளிப்படை)
2: மாணிக்கவாசகனே - மாணிக்கு அவா ஆசு அகனே (அகல் - அகன் என்று நின்றது போலி)
(மாணி - ஆண்டாளைக் குறிக்கும்; ‘வில்லியூர் மாணி’ என்று கூட்டுக!)

3: ஆண்டாளே - (வெளிப்படை)
4: (கண்டு)ஆண்டாளே - ஆண் தாளே (சிவனது தாளையே).

நன்றி...

(C) 2019, Vennkotran

Saturday 21 December, 2019

மார்கழி வெண்பா - 5 - மாலைமாற்று

#மார்கழி 5

வாதைகோ பாடுபாவை நாடுமாத வாநீடு
சோதியாடு தேவைபாய தூயாவா - மாவாயா
தூயபாவை தேடுயாதி  சோடுநீ வாதமாடு
நாவைபாடு பாகோதை வா!

(மாலைமாற்று - பின்பி [palindrome])

(பின்பிருந்து முன்பாகப் படித்தாலும் அப்பாவே வருதல் ‘மாலைமாற்று’ எனப்படும்)



வாதை கோ - வாதவூர் தலைவரான மாணிக்கவாசகர்
பாடுபாவை - பாடும் பாடலை (பாவை - திருவெம்பாவை எனினும் பொருந்தும்)
நாடு - விரும்பி நாடுகின்ற
மாதவா - பெருந்தவத்தோனே (சிவனைக் குறிக்கும்)
நீடு - நீள்கின்ற
சோதி - தீப்பிழம்பாய் / ஒளியாய்
ஆடு தே - ஆடுகின்ற இறைவன் (தே - இறை)
வை - வைகை (கடைக்குறையாய் ‘வை’ என்று நின்றது)
பாய - (உனக்காகப்) பாயச் செய்தான்
தூயா - தூய்மையானவனே
வா - எனக்கருள வா (இதுவரை மாணிக்கவாசகருக்கு, இனி  ஆண்டாளுக்கு)



மாவாயா - (உலகையெல்லாம் அடக்கிக் காட்டிய) பெரிய வாயுடைய கண்ணா,
தூய பாவை - தூய்மையான பெண்ணான ஆண்டாள்
தேடுயாதி - தேடு உய் (ஆதி) - உய்வதற்காகத் தேடும்
(ஆதி) சோடு - முன்பே உண்டான துணைவன் (’சோடி’ என்பது ‘சோடு’ என்று விகாரப்பட்டு நின்றது)
நீ - நீயே,
வாதமாடு - வாதம் செய்கின்ற
நாவை - திருவாயினை (நாவு என்பது ஆகுபெயராய் வாயைக் குறித்தது)
பாடு - போற்றிப் பாடும் (’கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ’ என்ற பாடலைக் குறிக்கிறது இது)
பா கோதை - பாடலை உடைய கோதையாகிய ஆண்டாளே
வா - எனக்கருள வா!


பொழிப்பு: மாணிக்கவாசகா, வாதவூரின் கோவே, உன் பாடலை விரும்பும் மாதவனான சிவபெருமான் உனக்காக வைகையைப் பொங்கச் செய்தான், தூயவனே நீ எனக்கருள வா!
திருமாலின் வாதஞ்செய்கின்ற வாயைப் போற்றிப் பாடும் பாடலை உடைய, அவனையே முழுமுதல் துணைவனாக உணர்ந்து அடைந்து உய்யத் தேடிய தூய பெண்ணே, கோதையே, நீ எனக்கருள வா!

நன்றி!

Friday 20 December, 2019

மார்கழி வெண்பா - 4 - வினாவுத்திரம்

#மார்கழி 4

நரிபரி ஆக்கிய நாடகம் எற்றுக்(கு)
அரிபரி வட்டம் அணிந்து - கரிக்குழாம்
ஓதிய வண்ணம் உடன்வந்த(து) ஏனாம்சொல்?
வாதைகோ தைக்கவிக்(கு) ஆம்!

(நேரிசை வெண்பா; வினாவுத்திரம்)

பாவில் கேள்வி (வினா) எழுப்பி அதற்கு விடை (உத்திரம்) தருதல் ‘வினாவுத்திரம்’ ஆகும்.

நரியைப் பரி (குதிரை) ஆக்கிய நாடகம் (திருவிளையாடல்) எதற்காக நடந்தது?


திருமால் (அரி) பரிவட்டம் அணிந்து (திருமணக்கோலத்தைக் குறிக்கும்) கரி (யானை = வாரணம்) குழாம் (கூட்டம்) சூழ வந்தது ஏன்?


(இரண்டு கேள்விகளுக்கும்) விடை:
வாதைகோதைக் கவிக்கு ஆம்’ என்பதே!

முதல் வினாவின் விடை: ’வாதை கோ தைக் கவிக்கு உவந்து’
‘வாதவூரின் (வாதை) தலைவரான* மாணிக்கவாசகரின் (கோ) உளத்தைத் தைக்கும் (தை) கவிதைக்கு (கவி) ஆக (ஆம்)’ என்றும்,
(அருளாளர்களை அவர்கள் பிறந்த ஊரின் தலைவர் / கோ என்று அழைத்தல் மரபு!)

இரண்டாம் வினாவின் விடை: ‘வாதை கோதைக் கவிக்கு உவந்து’
‘(திருமாலைச் சேராத) துன்பத்தை உடைய (வாதை = துன்பம்) ஆண்டாளின் (கோதை) கவிதைக்கு (கவி) ஆக (ஆம்)’ என்றும் நிற்கும்.

’ஓதிய வண்ணம் உடன்வந்தது’ என்பது
‘வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து,
நாரண நம்பி நடக்கின்றான்... கனாக் கண்டேன்...’ என்று ஆண்டாள் பாடியதற்கு ஏற்ப திருமால் கரிக்குழாம் (யானைக் கூட்டம்) உடன் வர வந்தார் என்றது.

Thursday 19 December, 2019

மார்கழி வெண்பா - 3 - இரட்டுறமொழிதல் (சிலேடை)

#மார்கழி 3

கொழுந்தனாய்க் கண்டு குறைவில்லாப் பாவை
பொழிந்தாரை, வேதப் பொருளை - மொழிந்தாரை
மாறனோ டொப்பாரை மாரனை ஏய்த்தாரை
மாறிலா தென்றும் வணங்கு!


(நேரிசை வெண்பா; மாணிக்கவாசகர் - ஆண்டாள் சிலேடை)

மாணிக்கவாசகர்: 

கொழுந்தனாய் கண்டு - சிவனை தழல் வடிவாய்க் கண்டு (கொழுந்து - நெருப்பு, தழல்; கொழுந்தன் - தழல்வடிவானவன்);
குறைவில்லாப் பாவை பொழிந்தாரை - குற்றமில்லாத திருவெம்பாவை பாடினவரை;
வேதப் பொருளை மொழிந்தாரை - வேதத்தின் நாயகனான சிவனைத் தன் பாக்களில் பாடியவரை;
மாறன் - பாண்டிய மன்னன்
மாறனோடு ஒப்பாரை - பாண்டியனோடு மாறுபட்டாரை (குதிரை வாங்கக் கொடுத்த காசைக் கோயில் கட்ட செலவிட்டார்);
மாரனை ஏய்தாரை - காமத்தை வென்றவரை (மாரன் - மன்மதன், ஆகுபெயராய்க் காமத்தைக் குறித்தது);

ஆண்டாள்:

கொழுந்தனாய்க் கண்டு - திருமாலைத் தன் கணவனாகக் கண்டு (கொழுந்தன் - கணவன்);
குறைவில்லாப் பாவை பொழிந்தாரை - சிறந்த திருப்பாவை பாடினவரை;
வேதப் பொருளை மொழிந்தாரை - ஆழ்வார் பாக்கள் ‘தமிழ் வேதம்’ எனப்படுவன, அவற்றில் ஒன்றான நாச்சியார் திருமொழியைப் பாடியவரை
(திருமால் - வேதப் பொருள், அவனைப் பாடியவர் என்றும் பொருள் கொள்ளலாம்!);
மாறனோடு ஒப்பாரை - நம்மாழ்வாருக்கு இணையாக ’ஆழ்வாரா’க இருப்பவரை (மாறன் - சடகோபராகிய நம்மாழ்வார்);
மாரனை ஏய்த்தாரை - மன்மதனை வேண்டினாரை (ஏய்த்தல் - இணங்கச் செய்தல்; தனது நாச்சியார் திருமொழியில் ’தையொரு திங்கள்’ என்ற முதல் பத்திலேயே ஆண்டாள் திருமாலையே தனக்குக் கணவனாக ஆக்குமாறு மன்மதனை வேண்டிப் பாடுகிறார்!)

மாறு இலாது என்றும் வணங்கு - இவ்விருவரையும் என்றும் மாறாது வணங்கு!


[நான் முதல்நாள் வெண்பாவைப் பகிர்ந்தபோது ‘சைவத்தை முன்வைத்து வைணவத்தைப் பின்வைத்தார்’ என்று ஒரு நண்பன் விளையாட்டாகச் சொன்னான், சரியென்று நான் நேற்று (’தாரணி...’ என்னும் 2ம் பாடலில்) கோதையை முன்வைத்து வாதவூர்க் கோவைப் பின்வைத்தேன்... எதற்கு இந்த முன்பின் வம்பு என்று இருவரையும் ஒன்றாகப் பாடிவிட்டேன் இன்று!]

மார்கழி வெண்பா - 2 - யமகம்

#மார்கழி 2

தாரணி உய்யத் தவத்தோனம் மாற்கியாத்த
தாரணி வாளே சரண்வேம்புத் - தாரணிவான்
ஓரமைச்சாய் ஒட்டார் உமைப்பாகர் பாதமே
ஓரமைந்தர் பாதம் ஒழுகு!



[தாரணி (உலகம்) உய்ய, தவத்தோன் (பெரியாழ்வார்) மால்கு (திருமாலுக்கென) யாத்த (கட்டிய) தார் (மாலையை) அணிவாளே (தான் அணிந்துகொள்பவளாகிய ஆண்டாளே) சரண் (நமக்குப் பற்றுக்கோடு);
வேம்புத் தார் அணிவான் (வேப்பம்பூ அடையாள மாலை சூடும் பாண்டிய மன்னின்) ஓர் அமைச்சாய் (ஒப்பற்ற மந்திரியாக இருந்து) ஒட்டார் (ஆனால் அப்பதவியில் மனஞ்செல்லாது) உமைப்பாகர் (உமையை இடப்பாகத்தில் உடைய சிவபெருமானின்) பாதமே (தாள்களையே) ஓர் (எப்போதும் எண்ணுகின்ற) அம் மைந்தர் (அந்த உறுதியுடையவரான மாணிக்கவாசகரின்) பாதம் (தாள்களை) ஒழுகு (பற்றாகக் கொண்டு வாழ்!)

மால்+கு+யாத்த = மாற்கியாத்த; ஓர்+அம்+மைந்தர் = ஓரமைந்தர்; மைந்து = உறுதி.

'தாரணி', 'ஓரமை' என்பன வெவ்வேறு அடிகளில் வெவ்வேறு வகையில் நின்று வெவ்வேறு பொருள் தர அமைந்தது 'யமகம்' என்னும் அணி!]

மார்கழி வெண்பா - 1 - வாழ்த்து

#மார்கழி 1

ஆதியந்தம் இல்லா அருட்சோதி பாடிய
வாதவூ ரானை வணங்கிடுவோம் - வேதத்தின்
நாதனைப் பாடிய நங்கைதன் தாள்பணிவோம்
போதமார்க ழித்திங்கள் போழ்து!


(வாதவூரார் - மாணிக்கவாசகர்; நங்கை - கோதை நாச்சியார்; போதம் - ஞானம்)

(ஒருவிகற்ப நேரிசை வெண்பா