இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Saturday 19 June, 2010

இராவணன் (அல்லது) மணிரத்ன இராமாயணம்

இராமாயணம் இந்திய மக்களிடையே மிகவும் ஊறிப்போன ஒரு கதை, அதானால்தான் அது ஏறத்தாழ எல்லா இந்திய மொழிகளிலும் வழங்கப்படுகிறது சில சமயம் ஒரே மொழியில் பல இராமாயணங்களும் இருக்கின்றன... ஒரு கம்ப இராமாயணப் பதிப்பின் முன்னுரையில்.
ஆம், நான் இராமாயணக் கதையைதான் சொல்லப் போகிறேன்என்று திரு. மணிரத்னம் தன் படத்தின் தலைப்பிலேயே ஒத்துக் கொண்டுவிட்டதால் வான்மீகியோ கம்பனோ (அல்லது அவர்கள் சார்பில் வேலைவெட்டி இல்லாத ஒருவனோ) அவர் மீது எந்த வழக்கும் போட இயலாது என்பது மகிழ்சியான விஷயம்தான்!

இராமன் தான் காக்க வேண்டிய குடிகளையே துன்புறுத்துகிறான், தன்னை எந்தத் தொந்திரவும் செய்யாத சூர்ப்பனகையை இம்சிக்கிறான், சமாதானம் பேச வரும் விபீடணனைக் கொல்கிறான்...

இராவணன் தன்னை அண்டியவர்களைக் காக்கிறான், அண்டாதவரை அழிக்கிறான், அனுமனுக்கு மதுவோடு (சாராயம்) விருந்து அளித்து பேசுகிறான் (ஆனால், கை கால்களை கட்டி வைத்துதான்), ‘இன்று போய் நாளை வாஎன்று நிராயுதபாணியான இராமனுக்கு உயிர் பிச்சை அளிக்கிறான்...

சீதை இராமனின் நிழல் நிஜத்தை உணர்கிறாள், இராவணனின் உள்ளுயிரை ஊடிக் காண்கிறாள், இராமனைவிட இராவணனின் மீது கரிசனம் கொள்கிறாள், மனப்போராட்டங்களில் ஊசல் ஆடுகிறாள்...

இராமனின் இருட்டுப் பக்கத்தையும், இராவணனின் வெள்ளைப் பக்கத்தையும், சீதையின் ஊள்ளப் போராட்டத்தையும் கையாண்ட விதம் அருமை -  இருபத்தியோராம் நூற்றாண்டில் இராமாயணம் ஒரு புதிய பரிணாமத்தை அடைந்துவிட்டது! வான்மீகியின் பாதையிலேயே ஓடி அவரை வென்ற கம்பனைப் போல், இருவருக்கும் எதிர் திசையில் ஓடி தனியாய் ஒரு வெற்றியைப் பெற்றுவிட்டார் மணிரத்னம்! ஆனால்,

இராவணன் என்று பெயர் வைத்ததோடு மூல இராமயாணத்தை மறந்திருக்கலாம் தளபதியின் கர்னன் கதையைப் போல மிக ஆழமாக உணர்த்தும் (Deep Suggestion) முறையைக் கையாண்டிருக்கலாம் அதில்லாமல் ஏறத்தாழ மூல இராமயணத்தின் அனைத்து முக்கிய பாத்திரங்களையும், நிகழ்வுகளையும் பொருத்திக்காட்ட (Imitate) முயன்றிருப்பது மணிரத்னம் போன்றோருக்கு அழகல்ல என்பது இந்த கடைரசிகனின் தாழ்மையான கருத்து (அது கதையின் போக்கை கவனிக்கவிடாது செய்வதுடன், படத்தை ஒரு இராமாயண-spoof போல ஆக்குகிறது!)

இராமன் (தேவ்/பிருத்திவி ராஜ்), சீதை (ராகிணி/ஐஸ்), இராவணன் (வீரா/விகரம்), இலக்குமனன் (ஹேமந்த்/ஜான் விஜய்), கும்பகருணன் (சிங்கராசன்/பிரபு), விபீடணன் (சக்கரை/முன்னா), சூர்ப்பனகை (வெண்ணிலா/பிரியாமணி), அனுமன் (ஞானபிரகாசம்/கார்த்திக்) என்று எல்லாரையும் உள்ளடக்கி இருப்பதும்,

ஞானப்பிரகாசம் (அனுமன்) குரங்குவேலைகள் செய்வது, வீராவின் இடத்திற்கு (அசோக வனம்?) போய் ராகினியை (சீதையை) சந்திப்பது, பின் வீராவுடன் (இராவணன்) சமாதானம் பேசுவது, அது கேட்டு சக்கரை (விபீடணன்) வீராவிற்க்கு அறிவுரை சொல்வது...

வெண்ணிலாவின் (சூர்பனகை) மூக்கைப் பிடித்துக் கொண்டு ஹேமந்த் (இலக்குமனன்) ‘அறுத்து விடுவேன்என்பது, சண்டையில் (யுத்த களம்)  ஹேமந்தை (இலக்குவனனை) ஞானபிரகாசம் (அனுமன்) காப்பாற்றுவது...

இப்படி வரிக்கு வரி இராமாயணத்தை நினைவூட்டுவது தேவைதானா? (என் திரைவிமர்சனமே இராமாயணம் இராவனன் திரைப்படம் : ஒரு ஒப்பிலக்கிய ஆய்வு என்ற அளவுக்கு போகிறது பாருங்கள்!)

மணிரத்னத்தைத் தாண்டி படத்தில் பின்னணியில் மின்னுபவர்கள் ஒளிப்பதிவாளரும் வசனகர்த்தாவும் இசையமைப்பாளரும்;  அவர்களுக்கு என் தனிப்பட்ட நன்றி - இயற்கை அழகை இன்னும் அழகாய் படம் பிடித்தமைக்கும், திருநெல்வேலித் தமிழுடன், சற்றே மலைத்தமிழ் கலந்த இயல்பான வசனங்களுக்கும், படத்தோடு ஒன்றி காதையும், கருத்தையும் தனியாய் உருத்தாத இசைக்கும்! மணிரத்னம் படத்தில் நடிகர்களின் நடுப்பிற்க்குத் தனியாய் பாராட்ட வேண்டுமா என்ன? இருந்து என்னை குறிப்பிடத் தூண்டுகிறது விக்ரமின் வசனம் பேசும் திறமை!

நெடுஞ்சாலையில் விரையும் வண்டிகளுக்கு இரையாகி நாய்களும், பசுக்களும், ஆடுகளும் சதை கூழாக, தரையோடு தரையாக் கிடப்பதை பார்க்கையில் எல்லாம் என் மனது வலிக்கும், நாம் நமக்காக போட்ட சாலைவிதிகள் அவைகளுக்கு எப்படி புரியும்? ஏன் புரிய வேண்டும்? அது புரியவில்லை என்பதற்காக இந்த கோர தண்டனையை அவைகளுக்குத் தருவது எந்த வகையில் நியாயம்? என்ற கேள்விகள் என் மனதில் சீறி எழும்... இதே நிலையில்தான், தன்னை பிறரைவிட உயர்ந்தவன், “பண்பட்டவன் என்று தானே சொல்லிக் கொண்டு, தான் இயற்றிய தனக்கான விதிகளைப் புரிந்துகொள்ளாத, பின்பற்றாத பிறரை ஒருவன் (அல்லது ஒரு சமுதாயாம்) அடக்குவதும், அழிப்பதும் மனித இனத்திலும் இருக்கின்றன அயோதிக்கு இராமன் உத்தமன் என்றால் இலங்கைக்கு இராவணந்தான் உத்தமன், கிஷ்கிந்தைக்கு வாலியே உத்தமன், இராவணனையும் வாலியையும் (படத்தில் வாலி பாத்திரத்தையும் புகுத்தாதது ஒரு சின்ன ஆறுதல், அதற்கு பதில் இராமன் வாலிக்கு செய்த துரோகத்தை இதில் விபீடணனுக்குச் செய்து விடுகிறான் முதுகில் சுட்டு!) அழிக்க இராமனுக்கு யார் அதிகாரம் தந்தார்கள்? இந்தக் கோள்வியை சீதைக்கு உணர்த்தும் வாயிலாக நமக்கும் உணர்த்த மணிரத்னம் முயன்றுள்ளார் எனின், அம்முயற்சி தோற்றது என்பதே உண்மை காரணம் ஒரு பெட்டியைவிட்டு வெளியில் வந்தால் இன்னொரு பெட்டிக்குள் சிக்கிக்கொள்ளும் மனித சிந்தனையின் பலவீனமே!

இராவணன் புரிந்தவர்களுக்கு காப்பியம், புரியாதவர்களுக்கு புதுக்கவிதை!

(விமர்சனத்தைப் பொறுமையுடன் படித்தமைக்கு நன்றி. நூற்றியிருபது உருபாய் கொடுத்து படம் பார்த்தவன் என்ற முறையிலும், சுதந்திர இந்தியக் குடிமகன் என்ற உரிமையிலும், என் மனதில் தோன்றியதை என் தனிப்பட்ட கருத்தாக மட்டுமே இங்கே வெளியிட்டுள்ளேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொண்டு, என் விமர்சனம் பிடிக்காதவர்கள் அல்லது மாற்று கருத்து உள்ளவர்கள் பொறுத்தருளுமாறும் கேட்டுக் கொண்டு, எது எப்படியாகிலும் இதைப் பற்றிய தங்களின் மேலான கருத்துக்களை இட்டுச் செல்லுமாறும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி...)

No comments:

Post a Comment