இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Friday 11 December, 2015

புதிய பாப்பாப் பாட்டு

முன்குறிப்பு: என்னை மிகவும் கவர்ந்த கவிகளில் பாரதி முதன்மையானவன், அவன் வழியில் கவிதை எழுதிப்பார்ப்பது என் விருப்பங்களில் ஒன்று, அப்படி எழுதிய ஒரு பாடல் இது, 2010-இலேயே எழுதப்பட்டது, இன்னும் இங்கே இடவில்லை என்பதை இன்றுதான் உணர்ந்தேன், அந்த மகாகவியின் பிறந்தநாளில் இதை ஒருவித காணிக்கையாக இடுகிறேன்... நிறைகுறைகளை தயக்கமின்றி சுட்டலாம்...

ஓடி விளையாடு பாப்பா! – நீ
.....ஓய்ந்திருக்கல் ஆகாது பாப்பா!
ஆடிப் பாடிமகிழ் பாப்பா! – நீ
.....யாரையும் வையாதே பாப்பா!    ௧

கல்வி கற்றுச்செறி பாப்பா! – உன்
.....கருத்தை உயர்த்திவை பாப்பா!
நல்ல குறளைநிதம் படித்து – அதில்
.....நழுவாமல் வாழ்ந்திடனும் பாப்பா!    ௨

உலகம் நமக்குப்பொது பாப்பா! – இதில்
.....ஒருவரையும் ஒதுக்காதே பாப்பா!
பலதுறை அறிந்துகொள்ளு பாப்பா! – அறிவைப்
.....பகிர்ந்தும் பயன்பெறுநீ பாப்பா!    ௩

இறைவன் ஒருவனெனு பாப்பா! – அவன்
.....இருப்பது அன்பிலெனு பாப்பா!
நிறைய பொருள்தேடு பாப்பா! – அதை
.....நேர்மை வழிதேடு பாப்பா!    ௪

தாய்மொழி முதலிலறி பாப்பா! – பின்பு
.....தரணியின் மொழிகளறி பாப்பா!
ஆய்ந்து இனியசொல்லைப் பேசு – அதை
.....அனைவரும் விரும்பிடுவர் பாப்பா!    ௫

நாட்டை உயர்த்திடவே எண்ணி – பல
.....நல்லசெயல் செய்திடுவோம் பாப்பா!
வீட்டையும் உயர்த்துபவர் பெண்கள் – அவர்
.....மேன்மைக்கு உழைத்திடுவோம் பாப்பா!    ௬

பாட்டைக் கற்றுதெளி பாப்பா! – அது
.....படைத்தவன் மொழியாகும் பாப்பா!
ஓட்டை உடைசல்களை ஒழித்து – புது
.....ஒளியைக் கொண்டுவா பாப்பா!    ௭

தாயை மதித்துவாழ் பாப்பா! – நீ
.....தந்தைசொல் தட்டாதே பாப்பா!
பேய்க்குநீ அஞ்சாதே பாப்பா! – அது
.....பித்தர் சொல்லுங்கதை பாப்பா!    ௮

யாதும் ஊரென்னு பாப்பா! – நமக்கு
.....யாவரும் கேளீரே பாப்பா!
தீதும் நன்றும் நமக்கு – பிறர்
.....செய்து வருவதில்லை பாப்பா!    ௯

உடலையும் உறுதிசெய் பாப்பா! – வீணர்
.....உருட்டலுக்கு அஞ்சாதே பாப்பா!
திடத்தை இழக்காதே பாப்பா! – அதில்
.....தீயும் கருகிவிடும் பாப்பா!    ௧0

உன்திறம் நன்கறிந்து கொண்டு – இந்த
.....உலகிற்கு பயன்படு பாப்பா!
உன்னால் முடியாது என்றால் – அது
.....உலகாலும் முடியாது பாப்பா!!    ௧௧


(கா) விசயநரசிம்மன், 2010

Tuesday 13 October, 2015

பிரிவெனப்படுவது...

பழமரம் கூடும் பறவைகள் போல
நிழலென நின்றநம் நிறுவன மரத்தில்
ஒருவருக் கொருவர் அறிமுக மாகி
இருவரும் நல்ல நண்பர் களாக
இத்தனை நாள்கள் இனிதே கழித்தோம்,
முன்னவன் என்ற முறுக்கெதும் இன்றி
என்னொடு நட்பாய் இருந்தனை தோழா,
பின்னவன் என்ற பேதங்கள் இன்றி
நண்பனாய் நல்ல வழிகாட் டியுமாய்க்
கற்றுக் கொடுக்கும் குருவாய்ச் சாயப்
பற்றுக் கொடுக்கும் தோளாய் நின்றாய்,
”நேத்திரம் கெட்டவன் காலனெ”ன் றந்த
மாத்திறக் கவிஞன் வாக்கது மெய்தான்,
வாழ்நாள் முழுதும் வருமென நினைத்த
ஆழ்நட் பதனை அறுத்திடப் பார்க்கிறான்,
’மாற்றம் அதுவே மாறாத’ தென்னும்
தேற்றம் சொல்லி-நீ தேர்ந்த புதுநல்
வேலையில் வென்று மேன்மைகள் குவிக்கக்
காலைக் கதிரென எழுச்சியே காண
இறைவனை வேண்டி இக்கவி சொன்னேன்,
நிறைவெலாம் பெற்று நினைவெலாம் வென்று
இன்பமாய் என்றும் இனிதுவாழ்ந் திடுகவே,
இதய ஓரத்தில் எந்தன்
பழைய நட்பையும் பத்திரப் படுத்தியே!

‘Quora’ என்ற கேள்வி-பதில் தளத்தில் தனது ‘சீனியர்’ ஒருவர் வேறு வேலைக்குச் செல்லும் நிலையில் அவருக்குத் தர வேண்டி கேட்டதற்காய் எழுதியது... Farewell Kavidhai :-)

Tuesday 20 January, 2015

கருச்சிதைவு

ஆயிரம் ஆண்டுகள் பின்னும் நிலைக்கும்
வீரியக் கவிதை ஒன்றுளது என்னிடம்,

நாட்டின் நிலையைத் புரட்டிப் போட்டிடும்
நவீனக் கவிதை ஒன்றும் உளது,

ஏழைச் சிரிப்பினில் இறைவனை ஏற்றி
பீடை போக்கும் கவிதை ஒன்றும்

ஏற்றத் தாழ்வுகள் இலாதிவ் உலகை
மாற்றிக் காட்டிடும் கவிதை ஒன்றும்

உழைப்பின் பெருமையை உயர்வின் சிறப்பைத்
தழைக்கும் அன்பைப் போதிக்கும் ஒன்றும்

இமைப்போதும் பிரியா இன்பக் காதலை
அமரக் காதலாய்ப் பாடும் கவிதையும்

இயற்கையும் இறையும் மழலையும் மழையும்
செயற்கை அறிவின் செவிக்குச் சொல்லும்

பாட்டுத் திறத்தால் வையம் முழுதும்
நீட்டும் வானமும் நிலவும் மீனும்

ஆளும் கவிதைகள் ஆயிரம் உண்டு
மாலை வந்துநான் எழுதிமுடிப்பேன்,

காலை,

அடுத்த வேளை உணவுக்கேங்கும்
வயிற்றுப் பசியின் வழக்கொன்(று) இருக்கே!