இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Thursday 3 June, 2010

சுத்தம் (சிறுகதை)

(முன்குறிப்பு: என் முதல் சிறுகதையைதான் இங்கே இட்டிருக்க வேண்டும், அதை இன்னும் என் அலமாறியில் தேடிக் கொண்டிருக்கிறேன், கிடைத்தவுடன் இட்டுவிடுகிறேன் - அதுவரை இது - ‘நான் விஜய்’இல் கவிதைகள் மட்டுமே இடம்பெறுவதில்லை எனச் சொல்லும்!)

"ரைட்! ரைட்!" - இந்த நிறுத்தத்திலும் பயனிகள் யாரும் ஏறாத ஏமாற்றத்தினால் சற்று கடுமையுடனே சொல்லிவிட்டு தனக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டான் நடத்துனர் ஜீவா.

ஜீவாவின் குரலில் இருந்த கடுமையை உணர்ந்து புன்னகைத்தவாறே வண்டியை முதல் கியருக்கு மாற்றி நகர்த்தினார் ஓட்டுனர் செல்வம், ஜீவா வேலைக்கு புதுசு, வந்து ஒரு மாதமேயான சுறுசுறுப்பு இன்னும் குறையவில்லை அவனிடம், அதனால்தான் தினமும் கூட்டம் முட்டிநெறிக்கும் வண்டியில் இன்று பேருக்கு ஏழெட்டு ஆள் அமர்ந்திருப்பது அவனுக்கு எரிச்சலை தருகிறது என்பதை செல்வம் நன்கு புரிந்து கொண்டிருந்தார். கூட்டத்தின் குறைவு அவருக்கு உண்டுபண்ணும் நிம்மதியை ஜீவாவும் அனுபவிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று சிந்தித்தவாறே அடுத்தடுத்த கியர்களுக்கு மாற்றி வேகமெடுத்தார்.

இதுவரை தந்த பயனசீட்டுகளை சரிபார்த்து 'ஸ்டேஜ் கிளியர்' செய்து வைத்துக் கொண்டு அடுத்த நிறுத்தத்தை எதிர்பார்த்து அமர்ந்திருந்தான் ஜீவா. வந்த நிறுத்தத்தில் இருவர் வண்டியில் ஏறினர், அழுக்கு துணி, பரட்டைத் தலை, பலநாள் தாடி சகிதம் ஒருவன் ('பிச்சைக்காரன்' என்பது ஜீவாவின் கணிப்பு, அவனும் அதற்கு இலக்கணம் போலதானே இருக்கிறான்!) பின்வாயிலிலும், கோதுமையின் செழுமையால் பளிங்கு சிற்பம் போல, கண்ணையும் மனதையும் கவரும் பகட்டான உடையில் காட்சியளித்த இளந்தாய் ஒருத்தி தன் கைக்குழந்தையுடன் முன்வாயிலிலும் ஏறினர்.

இப்படியும் ஒருவன், அப்படியும் ஒருத்தி, எப்படியெல்லாம் வேறுபட்ட மக்கள் ஒரே இடத்தில் வாழ்கின்றனர் என்று வியந்தவாரே, அந்தப்பெண் ஏறி வசதியாய் அமர்ந்துவிட்டாள் என்பதை உறுதி செய்துகொண்டபின் "ரைட்! ரைட்!" தந்தான் ஜீவா. வண்டி மீண்டும் கிளம்பி கியர் மாறி வேகமெடுத்தது, ஜீவாவின் அனுமானங்களும், எரிச்சலும் தான்!

ஏறி அமர்ந்த இருவரும் ஜீவாவை நோக்கினர், கையில் காசுடன். அந்த 'பிச்சைகாரன்'-ஐ கண்ட ஜீவாவிற்கு எரிச்சல் அதிகமாகியது, 'இவனுக்கு நான் எழுந்து போய் டிக்கெட் தரனுமா? ஏன் துரை அவரே வந்து வாங்க மாட்டாராமா?' என்று மனதிற்குள் - தன் 'அரசாங்க உத்தியோக'த்தையும் சேர்த்து - திட்டிக்கொண்டான். அந்த 'நாகரீக இளந்தாய்'க்கு சீட்டு தர வேண்டியிருந்ததால் தன் இருக்கையை விட்டு எழுந்தான் ஜீவா. 'பிச்சைக்கார'னின் அருகில் போகவே பிடிக்கவில்லை அவனுக்கு அவன் ஏறியதால் தனது பேருந்து அசுத்தப்பட்டுவிட்டதாய் எண்ணினான்!

'அந்தப் பொண்ணையும் பாரு இவனையும் பாரு! அவ எத்தன 'டீசென்ட்டா' இருக்கா? இவனுக்கு அந்த வார்த்தைக்கு அர்த்தமாவது தெரியுமா? தலையெழுத்து... இவனுக்கெல்லாம் வேலை செய்ய வேண்டியிருக்கு...என்று நொந்தவாறே அவனருகில் சென்றான், 'ஸ்ஸ்டெர்லிங்ங் ரொடூ' என்றவாறே ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை நீட்டினான் அந்த 'பிச்சைக்காரன்', பட்டும்படாமலுமாய் அதை வாங்கிக்கொண்ட ஜீவா சீட்டை அளித்தான். அதை வாங்கிக்கொண்டு தன் கையில் இருந்த வாழை பழத்தை தோலுரிக்கத் துவங்கினான் அவன், 'பழத்த சாப்ட்டுட்டு தோல வண்டிக்குள்ளயே போடுவான்' என நினைத்த ஜீவா, அவன் அப்படி செய்தால் தன் மொத்த எரிச்சலையும் அவன்மேல் காட்டி அவனை  திட்டிதீர்த்துவிட தயாரானான். ஆனால் அவனோ தோலை மிக சகஜமாக தன் அழுக்கு சட்டையின் அழுக்குப் பைக்குள்ளேயே போட்டுக்கொண்டான், 'ஐயைய...என அருவருப்புடன் அங்கிருந்து நகர்ந்தான் ஜீவா, அந்த இளந்தாய்க்கு சீட்டு தர.

அவள் அந்தப் பேருந்தில் ஏறியது அதற்கும் தனக்கும் கிடைத்த பெறிய மரியாதை என்பதைப் போல அவளிடம் போய் நின்றான் ஜீவா. தன் குழந்தையின் 'டைஃபர்ஸ்'ஐ கழட்டி ஜன்னல் வழியே  வீசிவிட்டு, அதன் மூக்கையும் சிந்திவிட்டு கையை வெளியில் உதறிவிட்டு, பின் தன்கையை முன்னிருக்கையில் துடைத்துக்கொண்டு, மற்றொரு கையால் ஒரு ஐம்பது ரூபாய் தாளை நீட்டி, "பெஸன்ட் நகர், ப்ளீஸ்" என்றாள். தன் எண்ணங்களின் மணல் மேட்டில் சறுக்கியவாறே அவளுக்கு சீட்டை தந்துவிட்டு தன் இருக்கைக்கு வந்தான் ஜீவா. வருகையில் அந்த 'பிச்சைக்காரரை' பார்த்தான், அவன் சட்டைப் பையை குப்பையாக்கிய அந்த பழத்தோல் பேருந்தை சுத்தமாக வைத்திருந்தது!

No comments:

Post a Comment