இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Sunday 12 September, 2010

செந்தமிழில் ஷேக்சுபியர் - 1

என் மொழிபெயர்ப்பு பணிகளைப் பார்த்து ஆங்கிலப்பாக்களைத் தமிழுக்குத் தரவேண்டுமென சில நண்பர்கள் கேட்டுக் கொண்டனர், அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் துவங்கப்பெற்றதே இம்முயற்சி... ஷேக்சுபியரின் சானட்டுகளைத் (Sonnets) தமிழில் கலிப்பாக்காளாக மொழிபெயர்க்கத் துவங்கியுள்ளேன், இதோ முதலாவது பா தங்களின் விமர்சனத்திற்காக.

(மூலப்பாக்களை மேலே தரப்பட்டுள்ள இணைப்பில் கண்டு பொருள் அறிந்து கொள்ளவும். மொழிபெயர்பிற்கு பொருள் அறிய அருஞ்சொற்பொருள் அளித்துள்ளேன், மூலபாடலின் பொருள் தெரிந்திருப்பின் இதற்கு பொருள் கொள்வது எளிதாகும், எனினும் ஐயமிருப்பின் என்னைத் தொடர்புகொள்ளவும்.)

தன் நண்பனான அழகிய இளைஞனை அவனது அழகை சிதையவிடாது சந்ததிகளுக்கு அளிக்குமாறு அறிவுறுத்துவதாய் இந்தப்பாடல் அமைந்துள்ளது.


[பாடலின் யாப்பு : பிரிந்திசைச்துள்ளலோசையான் வந்த பதினான்கடி வெண்கலிப்பா]
உயர்ந்த உயிரினின்றும் உயர்வதேநம் விருப்பமன்றோ
அழகின் மலரென்றும் அழியா திருந்திடவே
எனினும் பழுத்தவன்தான் இறப்பனே காலஞ்செல்ல
இனிதாய் அவநினைவை இளையவர் ஏந்துவரே

நீயோ பிறழ்கின்றாய் நின்னொண்கண் இயல்பதற்கே
தீயோ வளர்கிறது தன்னையே தாந்தின்று
வளமை மிகுந்திருக்க வளர்க்கிறாயே வறுமையைநீ
இளமைக்குக் கொடிதாய் எதிரானாய் உனக்கேநீ

அவனியின் புத்தம்புது அணியாவாய் நீயின்று
உவர்வேனில் வருகைதனை உரைப்பவனும் நீயேதான்
புதைக்கிறாய் உன்சொந்த முகைக்குள்ளே உன்னழகைச்
சிதைக்கிறாய் இளவெழிலைச் சிறுகஞ்சத் தனமதிலே

இரங்குநீ இவ்வுலகிற்கு இல்லையிப் பசிகொள்ளும்
உன்னையும் மரணத்தில் உண்டு.
(மூலத்தின் அடிஎண்ணிக்கையை மொழிபெயர்ப்பிலும் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியால் இறுதியில் சொல்லுக்குச்சொல் என்ற வகையில் அன்றி பொருள் முடிபை மட்டுமே தர இயன்றது. மற்றபடி அடிக்கு அடி பொருள் முடிபைத் தர முயன்றுள்ளேன், அஃதாவது மூல பாடலின் அமைப்பையும் மொழிபெயர்ப்பில் தர முயன்றுள்ளேன். இனி என் முயற்சியின் வெற்றி தோல்விகள் தங்கள் விமர்சனத்தில் முடிவாகும்)

மறவாமல் கருத்துரை இட்டுச் செல்லுங்கள்... நன்றி!

3 comments:

  1. பாடலுக்கான அருஞ்சொற்பொருள்

    பழுத்தவன் – முதிர்ந்தவன், வயதானவன்;
    பிறழ்கின்றாய் – மாறுபடுகின்றாய்;
    ஒண்கண் – ஒளிமிக்க கண்;
    அவனி – உலகம்;
    அணி – நகை, அழகு;
    உவர் – உவர்ப்பு (இனிய சுவையில்லாதது);
    வேனில் – கோடைக் காலம்;
    முகை – மொட்டு;
    எழில் – அழகு;
    கஞ்சத்தனம் – கருமித்தனம்;
    இரங்கு – இரக்கப்படு.

    ReplyDelete
  2. Shakespearan Sonnets are noted for their simplicity. Erudition in English language is not called for. Anyone with some proficiency in the language can enjoy reading it.

    The enjoyment one gets reading his plays is diferent from that one gets reading the Sonnet sequence. Play reading require some guidance. Not so with the sequence. It is not bad to say that the sequence will always be read with enjoyment whereas the plays may perhaps become passe. Many Amercian universities have taken the plays out of detailed studies for their students majoring in English literature.

    It is a pity you have intimidated Tamilians with this hard - to - understand translation. Shakespeare, as a poet, is a novelty to Tamilians, as all of them instantly understand him only as a playwright.

    Simplify. Or else, your translations will be your soliloquies.

    ReplyDelete
  3. அன்பிற்குரிய பிள்ளையார்,

    பாடலைப் படித்து தங்களின் (காரமான) கருத்தை இட்டமைக்கு முதற்கண் நன்றி... தாங்கள் சொன்னதைப் போல் ஷேக்சுபியரின் சானட்டுகள் எளிமையானவைதான், அதே போல என் மொழிபெயர்ப்பும் எளிமையானது என்றே நான் கருதுகிறேன்...

    புதுக்கவிதை என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் மடித்து மடித்து எழுதிவிட்டு கவிதை என்று சொல்வதை நான் ஷேக்சுபியருக்குத் தகுந்த மரியாதையாய் இருக்கும் என்று கருதவில்லை, அதனாலேயே மரபுக்கவிதை வடிவைத் தேர்ந்து கொண்டேன், அந்த வடிவமே தங்களைக் கடினம் என்று நினைக்க வைத்து விட்டதோ எனத் தோன்றுகிறது...

    வடிவத்தை விட்டு, சீர்களைப் பிரித்துச் சேர்த்து பார்த்தால் எளிமையாகவே இருக்கும் என்பது என் கருத்து...

    ஆங்கிலத்தைக் கரைத்துக் குடித்துவிட்டு, தமிழில் எழுத்துக்கூட்டிப் படிக்கும் ”தமிழர்களுக்கு” என் பாடல் கடினமாய் இருந்தால் அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை...

    எனினும், முடிந்தவரை நிறைய தமிழர்களைச் சென்றடைய வேண்டும் என்பதே என் அவா, தாங்கள் இறுதியில் குறிப்பிட்டதைப் போல என் மொழிபெயர்ப்புகள் எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் தன்வசனமாக (Soliloquies) ஆகிவிடின், அது தோல்விதானே...

    பாடல் எந்த வகையில், எந்தெந்த இடத்தில், எதனால் கடினமாக இருக்கிறது என்பதைத் தாங்கள் எனக்கு விளக்கமாக அளிக்க இயலுமானால், நானும் அவற்றைப் பரிசீலித்து தகுந்த மாற்றங்களைச் செய்ய முயல்வேன்... என்ற முகவரிக்கு அனுப்புங்கள் (அனுப்புவதானால்!)

    காலம் தாழ்ந்து பதிலிறுப்பதற்கு மன்னிக்கவும், வேலை பளுவினால் இத்தாமதம்!

    நன்றிகள்...

    ReplyDelete