இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Saturday, 19 June 2010

இராவணன் (அல்லது) மணிரத்ன இராமாயணம்

இராமாயணம் இந்திய மக்களிடையே மிகவும் ஊறிப்போன ஒரு கதை, அதானால்தான் அது ஏறத்தாழ எல்லா இந்திய மொழிகளிலும் வழங்கப்படுகிறது சில சமயம் ஒரே மொழியில் பல இராமாயணங்களும் இருக்கின்றன... ஒரு கம்ப இராமாயணப் பதிப்பின் முன்னுரையில்.
ஆம், நான் இராமாயணக் கதையைதான் சொல்லப் போகிறேன்என்று திரு. மணிரத்னம் தன் படத்தின் தலைப்பிலேயே ஒத்துக் கொண்டுவிட்டதால் வான்மீகியோ கம்பனோ (அல்லது அவர்கள் சார்பில் வேலைவெட்டி இல்லாத ஒருவனோ) அவர் மீது எந்த வழக்கும் போட இயலாது என்பது மகிழ்சியான விஷயம்தான்!

இராமன் தான் காக்க வேண்டிய குடிகளையே துன்புறுத்துகிறான், தன்னை எந்தத் தொந்திரவும் செய்யாத சூர்ப்பனகையை இம்சிக்கிறான், சமாதானம் பேச வரும் விபீடணனைக் கொல்கிறான்...

இராவணன் தன்னை அண்டியவர்களைக் காக்கிறான், அண்டாதவரை அழிக்கிறான், அனுமனுக்கு மதுவோடு (சாராயம்) விருந்து அளித்து பேசுகிறான் (ஆனால், கை கால்களை கட்டி வைத்துதான்), ‘இன்று போய் நாளை வாஎன்று நிராயுதபாணியான இராமனுக்கு உயிர் பிச்சை அளிக்கிறான்...

சீதை இராமனின் நிழல் நிஜத்தை உணர்கிறாள், இராவணனின் உள்ளுயிரை ஊடிக் காண்கிறாள், இராமனைவிட இராவணனின் மீது கரிசனம் கொள்கிறாள், மனப்போராட்டங்களில் ஊசல் ஆடுகிறாள்...

இராமனின் இருட்டுப் பக்கத்தையும், இராவணனின் வெள்ளைப் பக்கத்தையும், சீதையின் ஊள்ளப் போராட்டத்தையும் கையாண்ட விதம் அருமை -  இருபத்தியோராம் நூற்றாண்டில் இராமாயணம் ஒரு புதிய பரிணாமத்தை அடைந்துவிட்டது! வான்மீகியின் பாதையிலேயே ஓடி அவரை வென்ற கம்பனைப் போல், இருவருக்கும் எதிர் திசையில் ஓடி தனியாய் ஒரு வெற்றியைப் பெற்றுவிட்டார் மணிரத்னம்! ஆனால்,

இராவணன் என்று பெயர் வைத்ததோடு மூல இராமயாணத்தை மறந்திருக்கலாம் தளபதியின் கர்னன் கதையைப் போல மிக ஆழமாக உணர்த்தும் (Deep Suggestion) முறையைக் கையாண்டிருக்கலாம் அதில்லாமல் ஏறத்தாழ மூல இராமயணத்தின் அனைத்து முக்கிய பாத்திரங்களையும், நிகழ்வுகளையும் பொருத்திக்காட்ட (Imitate) முயன்றிருப்பது மணிரத்னம் போன்றோருக்கு அழகல்ல என்பது இந்த கடைரசிகனின் தாழ்மையான கருத்து (அது கதையின் போக்கை கவனிக்கவிடாது செய்வதுடன், படத்தை ஒரு இராமாயண-spoof போல ஆக்குகிறது!)

இராமன் (தேவ்/பிருத்திவி ராஜ்), சீதை (ராகிணி/ஐஸ்), இராவணன் (வீரா/விகரம்), இலக்குமனன் (ஹேமந்த்/ஜான் விஜய்), கும்பகருணன் (சிங்கராசன்/பிரபு), விபீடணன் (சக்கரை/முன்னா), சூர்ப்பனகை (வெண்ணிலா/பிரியாமணி), அனுமன் (ஞானபிரகாசம்/கார்த்திக்) என்று எல்லாரையும் உள்ளடக்கி இருப்பதும்,

ஞானப்பிரகாசம் (அனுமன்) குரங்குவேலைகள் செய்வது, வீராவின் இடத்திற்கு (அசோக வனம்?) போய் ராகினியை (சீதையை) சந்திப்பது, பின் வீராவுடன் (இராவணன்) சமாதானம் பேசுவது, அது கேட்டு சக்கரை (விபீடணன்) வீராவிற்க்கு அறிவுரை சொல்வது...

வெண்ணிலாவின் (சூர்பனகை) மூக்கைப் பிடித்துக் கொண்டு ஹேமந்த் (இலக்குமனன்) ‘அறுத்து விடுவேன்என்பது, சண்டையில் (யுத்த களம்)  ஹேமந்தை (இலக்குவனனை) ஞானபிரகாசம் (அனுமன்) காப்பாற்றுவது...

இப்படி வரிக்கு வரி இராமாயணத்தை நினைவூட்டுவது தேவைதானா? (என் திரைவிமர்சனமே இராமாயணம் இராவனன் திரைப்படம் : ஒரு ஒப்பிலக்கிய ஆய்வு என்ற அளவுக்கு போகிறது பாருங்கள்!)

மணிரத்னத்தைத் தாண்டி படத்தில் பின்னணியில் மின்னுபவர்கள் ஒளிப்பதிவாளரும் வசனகர்த்தாவும் இசையமைப்பாளரும்;  அவர்களுக்கு என் தனிப்பட்ட நன்றி - இயற்கை அழகை இன்னும் அழகாய் படம் பிடித்தமைக்கும், திருநெல்வேலித் தமிழுடன், சற்றே மலைத்தமிழ் கலந்த இயல்பான வசனங்களுக்கும், படத்தோடு ஒன்றி காதையும், கருத்தையும் தனியாய் உருத்தாத இசைக்கும்! மணிரத்னம் படத்தில் நடிகர்களின் நடுப்பிற்க்குத் தனியாய் பாராட்ட வேண்டுமா என்ன? இருந்து என்னை குறிப்பிடத் தூண்டுகிறது விக்ரமின் வசனம் பேசும் திறமை!

நெடுஞ்சாலையில் விரையும் வண்டிகளுக்கு இரையாகி நாய்களும், பசுக்களும், ஆடுகளும் சதை கூழாக, தரையோடு தரையாக் கிடப்பதை பார்க்கையில் எல்லாம் என் மனது வலிக்கும், நாம் நமக்காக போட்ட சாலைவிதிகள் அவைகளுக்கு எப்படி புரியும்? ஏன் புரிய வேண்டும்? அது புரியவில்லை என்பதற்காக இந்த கோர தண்டனையை அவைகளுக்குத் தருவது எந்த வகையில் நியாயம்? என்ற கேள்விகள் என் மனதில் சீறி எழும்... இதே நிலையில்தான், தன்னை பிறரைவிட உயர்ந்தவன், “பண்பட்டவன் என்று தானே சொல்லிக் கொண்டு, தான் இயற்றிய தனக்கான விதிகளைப் புரிந்துகொள்ளாத, பின்பற்றாத பிறரை ஒருவன் (அல்லது ஒரு சமுதாயாம்) அடக்குவதும், அழிப்பதும் மனித இனத்திலும் இருக்கின்றன அயோதிக்கு இராமன் உத்தமன் என்றால் இலங்கைக்கு இராவணந்தான் உத்தமன், கிஷ்கிந்தைக்கு வாலியே உத்தமன், இராவணனையும் வாலியையும் (படத்தில் வாலி பாத்திரத்தையும் புகுத்தாதது ஒரு சின்ன ஆறுதல், அதற்கு பதில் இராமன் வாலிக்கு செய்த துரோகத்தை இதில் விபீடணனுக்குச் செய்து விடுகிறான் முதுகில் சுட்டு!) அழிக்க இராமனுக்கு யார் அதிகாரம் தந்தார்கள்? இந்தக் கோள்வியை சீதைக்கு உணர்த்தும் வாயிலாக நமக்கும் உணர்த்த மணிரத்னம் முயன்றுள்ளார் எனின், அம்முயற்சி தோற்றது என்பதே உண்மை காரணம் ஒரு பெட்டியைவிட்டு வெளியில் வந்தால் இன்னொரு பெட்டிக்குள் சிக்கிக்கொள்ளும் மனித சிந்தனையின் பலவீனமே!

இராவணன் புரிந்தவர்களுக்கு காப்பியம், புரியாதவர்களுக்கு புதுக்கவிதை!

(விமர்சனத்தைப் பொறுமையுடன் படித்தமைக்கு நன்றி. நூற்றியிருபது உருபாய் கொடுத்து படம் பார்த்தவன் என்ற முறையிலும், சுதந்திர இந்தியக் குடிமகன் என்ற உரிமையிலும், என் மனதில் தோன்றியதை என் தனிப்பட்ட கருத்தாக மட்டுமே இங்கே வெளியிட்டுள்ளேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொண்டு, என் விமர்சனம் பிடிக்காதவர்கள் அல்லது மாற்று கருத்து உள்ளவர்கள் பொறுத்தருளுமாறும் கேட்டுக் கொண்டு, எது எப்படியாகிலும் இதைப் பற்றிய தங்களின் மேலான கருத்துக்களை இட்டுச் செல்லுமாறும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி...)

Thursday, 17 June 2010

தோழிக்குத் திருமண வாழ்த்து

மு.கு: காதல் கவிதை என்று கிறுக்கியதற்கு அடுத்த படினிலையாய் அமைந்தது இதுதான். இதை எழுத தேவைப்பட்ட துணிவைவிட எழுதியபின் பரிசாக இதையே தர நிறைய துணிவு தேவைப்பட்டது என்பதை இங்கே ஒத்துக்கொள்கிறேன். நான் அறிந்த வரையில் என் முதல் மரபு கவிதையும் இதில் உள்ள கடவுள், மொழி வாழ்த்துப் பாக்கள்தான் [விருத்தங்கள்]

கடவுள் வாழ்த்து

நம்பிக்கை யான்நலம் காக்கும் களிற்நாயகன்
தம்பிக்கும் தன்தயைக் கூர்ந்த எழின்நாயகன்
தும்பிக்கை யால்புவி காத்துப் பொலிர்நாயகன்
எம்பிறப்பும் நம்மைக் காப்பான் நல்விநாயகன்.

மொழி வாழ்த்து

பொதிகையிடை பிறந்து குறுமுனி
தாலெனும் தொட்டிலிலே தவழ்ந்தாள்
சதியொரு பாகம் பெற்றான்
மற்றவன் குமரனொடும் வளர்ந்தாள்
நதியுரும் நாவலர் நாட்டில்
நற்செங் கோலது வீச்சுவாள்
கதிதரும் தாயவள் நமக்கே
தமிழன்னை நற்றாள் போற்றி!

மணவாழ்த்து

கல்யாணப் பந்தல் புகும்
கனிவான என் தோழி,
கற்பகக் கோடியாண்டு நின்
செம் மஞ்சள் வாழி!

கன்னியெனும் ஆடை மாற்றி
கணவன் கொள்ளும் தோழி,
காலமெல்லாம் அவன் காதல்போற்ற
நின் சீற்கற்பு வாழி!

மன்னவன்தன் குலமேற்று குடியேற்று
விளக்கேற்ற  செல்லும் தோழி,
கொண்டவன்பால் கொண்ட அன்பால்
உயிரேற்றும் நின்அன்பு வாழி!

புரிதல் என்பது இருவழிப்பாதை
புரிந்துக் கொள்வாய் தோழி,
கொடுத்து வாங்கும் கொள்கை
கொண்டே சீறாய்நீ வாழி!

பெற்றார் உற்றார் சுற்றார்
வாழ்த்தப் பெறும் தோழி,
கற்றார் கடந்தார் போற்றும் நற்றாள்
நாதனும் வாழ்த்தநீ வாழி!

(படித்தமைக்கு நன்றி, மறக்காமல் தங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், அதற்கும் முன்னரே நன்றி...)

Thursday, 3 June 2010

சுத்தம் (சிறுகதை)

(முன்குறிப்பு: என் முதல் சிறுகதையைதான் இங்கே இட்டிருக்க வேண்டும், அதை இன்னும் என் அலமாறியில் தேடிக் கொண்டிருக்கிறேன், கிடைத்தவுடன் இட்டுவிடுகிறேன் - அதுவரை இது - ‘நான் விஜய்’இல் கவிதைகள் மட்டுமே இடம்பெறுவதில்லை எனச் சொல்லும்!)

"ரைட்! ரைட்!" - இந்த நிறுத்தத்திலும் பயனிகள் யாரும் ஏறாத ஏமாற்றத்தினால் சற்று கடுமையுடனே சொல்லிவிட்டு தனக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டான் நடத்துனர் ஜீவா.

ஜீவாவின் குரலில் இருந்த கடுமையை உணர்ந்து புன்னகைத்தவாறே வண்டியை முதல் கியருக்கு மாற்றி நகர்த்தினார் ஓட்டுனர் செல்வம், ஜீவா வேலைக்கு புதுசு, வந்து ஒரு மாதமேயான சுறுசுறுப்பு இன்னும் குறையவில்லை அவனிடம், அதனால்தான் தினமும் கூட்டம் முட்டிநெறிக்கும் வண்டியில் இன்று பேருக்கு ஏழெட்டு ஆள் அமர்ந்திருப்பது அவனுக்கு எரிச்சலை தருகிறது என்பதை செல்வம் நன்கு புரிந்து கொண்டிருந்தார். கூட்டத்தின் குறைவு அவருக்கு உண்டுபண்ணும் நிம்மதியை ஜீவாவும் அனுபவிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று சிந்தித்தவாறே அடுத்தடுத்த கியர்களுக்கு மாற்றி வேகமெடுத்தார்.

இதுவரை தந்த பயனசீட்டுகளை சரிபார்த்து 'ஸ்டேஜ் கிளியர்' செய்து வைத்துக் கொண்டு அடுத்த நிறுத்தத்தை எதிர்பார்த்து அமர்ந்திருந்தான் ஜீவா. வந்த நிறுத்தத்தில் இருவர் வண்டியில் ஏறினர், அழுக்கு துணி, பரட்டைத் தலை, பலநாள் தாடி சகிதம் ஒருவன் ('பிச்சைக்காரன்' என்பது ஜீவாவின் கணிப்பு, அவனும் அதற்கு இலக்கணம் போலதானே இருக்கிறான்!) பின்வாயிலிலும், கோதுமையின் செழுமையால் பளிங்கு சிற்பம் போல, கண்ணையும் மனதையும் கவரும் பகட்டான உடையில் காட்சியளித்த இளந்தாய் ஒருத்தி தன் கைக்குழந்தையுடன் முன்வாயிலிலும் ஏறினர்.

இப்படியும் ஒருவன், அப்படியும் ஒருத்தி, எப்படியெல்லாம் வேறுபட்ட மக்கள் ஒரே இடத்தில் வாழ்கின்றனர் என்று வியந்தவாரே, அந்தப்பெண் ஏறி வசதியாய் அமர்ந்துவிட்டாள் என்பதை உறுதி செய்துகொண்டபின் "ரைட்! ரைட்!" தந்தான் ஜீவா. வண்டி மீண்டும் கிளம்பி கியர் மாறி வேகமெடுத்தது, ஜீவாவின் அனுமானங்களும், எரிச்சலும் தான்!

ஏறி அமர்ந்த இருவரும் ஜீவாவை நோக்கினர், கையில் காசுடன். அந்த 'பிச்சைகாரன்'-ஐ கண்ட ஜீவாவிற்கு எரிச்சல் அதிகமாகியது, 'இவனுக்கு நான் எழுந்து போய் டிக்கெட் தரனுமா? ஏன் துரை அவரே வந்து வாங்க மாட்டாராமா?' என்று மனதிற்குள் - தன் 'அரசாங்க உத்தியோக'த்தையும் சேர்த்து - திட்டிக்கொண்டான். அந்த 'நாகரீக இளந்தாய்'க்கு சீட்டு தர வேண்டியிருந்ததால் தன் இருக்கையை விட்டு எழுந்தான் ஜீவா. 'பிச்சைக்கார'னின் அருகில் போகவே பிடிக்கவில்லை அவனுக்கு அவன் ஏறியதால் தனது பேருந்து அசுத்தப்பட்டுவிட்டதாய் எண்ணினான்!

'அந்தப் பொண்ணையும் பாரு இவனையும் பாரு! அவ எத்தன 'டீசென்ட்டா' இருக்கா? இவனுக்கு அந்த வார்த்தைக்கு அர்த்தமாவது தெரியுமா? தலையெழுத்து... இவனுக்கெல்லாம் வேலை செய்ய வேண்டியிருக்கு...என்று நொந்தவாறே அவனருகில் சென்றான், 'ஸ்ஸ்டெர்லிங்ங் ரொடூ' என்றவாறே ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை நீட்டினான் அந்த 'பிச்சைக்காரன்', பட்டும்படாமலுமாய் அதை வாங்கிக்கொண்ட ஜீவா சீட்டை அளித்தான். அதை வாங்கிக்கொண்டு தன் கையில் இருந்த வாழை பழத்தை தோலுரிக்கத் துவங்கினான் அவன், 'பழத்த சாப்ட்டுட்டு தோல வண்டிக்குள்ளயே போடுவான்' என நினைத்த ஜீவா, அவன் அப்படி செய்தால் தன் மொத்த எரிச்சலையும் அவன்மேல் காட்டி அவனை  திட்டிதீர்த்துவிட தயாரானான். ஆனால் அவனோ தோலை மிக சகஜமாக தன் அழுக்கு சட்டையின் அழுக்குப் பைக்குள்ளேயே போட்டுக்கொண்டான், 'ஐயைய...என அருவருப்புடன் அங்கிருந்து நகர்ந்தான் ஜீவா, அந்த இளந்தாய்க்கு சீட்டு தர.

அவள் அந்தப் பேருந்தில் ஏறியது அதற்கும் தனக்கும் கிடைத்த பெறிய மரியாதை என்பதைப் போல அவளிடம் போய் நின்றான் ஜீவா. தன் குழந்தையின் 'டைஃபர்ஸ்'ஐ கழட்டி ஜன்னல் வழியே  வீசிவிட்டு, அதன் மூக்கையும் சிந்திவிட்டு கையை வெளியில் உதறிவிட்டு, பின் தன்கையை முன்னிருக்கையில் துடைத்துக்கொண்டு, மற்றொரு கையால் ஒரு ஐம்பது ரூபாய் தாளை நீட்டி, "பெஸன்ட் நகர், ப்ளீஸ்" என்றாள். தன் எண்ணங்களின் மணல் மேட்டில் சறுக்கியவாறே அவளுக்கு சீட்டை தந்துவிட்டு தன் இருக்கைக்கு வந்தான் ஜீவா. வருகையில் அந்த 'பிச்சைக்காரரை' பார்த்தான், அவன் சட்டைப் பையை குப்பையாக்கிய அந்த பழத்தோல் பேருந்தை சுத்தமாக வைத்திருந்தது!