இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Wednesday 29 June, 2011

நீ நிரந்தரமானவன்... அழிவதில்லை!

[அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்]

எழுத்தெனும் மக்கள் கூட்டம் ஏறுசொல் வீரர் கூட்டம்
பழுதறு பாட்டின் படைகள் படுபொருள் ஆன சுற்றம்
இழையுநல் அணிகள் பெண்டிர் இகல்கடி அறநூல் அமைச்சர்
கெழுமிய செங்கோல் கொண்டு செந்தமிழ் கவியாள் வேந்தே!

உரமிகு தானை கொண்டு உலகினை முழுதாய் ஆள
அரசரும் விழைந்த துண்டு அதுஅவர்க் கான தில்லை
தரமிகு தமிழின் பாவால் தரணியை முழுதாய் ஆளும்
வரமதைப் பெற்றாய் நீயே! வரகவிக் கொற்றன் நீயே!

சூழலைச் சொன்ன நொடியில் சுவைபடப் பாடல் தருவாய்க்
கூழைமை கொள்ளாய் யார்க்கும் குனிந்துநீ பணிந்து நில்லாய்
ஏழைக்கும் புரியும் இனிய எளியபல் பாக்கள் கொண்ட
பேழைநீ! கவியே உந்தன் பெருமைக்கும் அளவொன் றுண்டே?

திரைப்பட உலகில் மற்றும் சிறப்புறு கவிதை உலகில்
துருவநன் மீனாய் ஒளிரும் சுடர்கவி கண்ண தாச!
இருந்தவர் இருப்போர் வருவோர் இதயங்கள் தானாள் வதனால்
நிரந்தரம் ஆனாய் நீயே! நித்தியக் கவியால் நீயே!



[எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய சந்த விருத்தம்]

தேனொழுகும் பாக்கள்பல ஈன்றவனும் நீயே!
    சேருதிரைப் பேருலகில் ஓர்துருவன் நீயே!
வானொழுகுங் கூறுபுகழ் சேர்த்தவனும் நீயே!
    மாபொருள்கள் நேர்பலநூல் யாத்தவனும் நீயே!
தானொழுகும் தீக்குணத்தை மீறியவன் நீயே!
    தாய்த்தமிழ்க்காய்ப் பாய்ரயிலின் கீழ்படுத்தாய் நீயே!
ஊனொழுகும் உடல்நீப்பின் உனக்குண்டோ மரணம்?
    உள்ளங்களில் நிரந்தரமாய் உறைபவனும் நீயே!

[’தான்’ ஒழுகும் தீக்குணம் – ’ஆணவம்’]

குறிப்பு: 12/06/2011 அன்று சென்னை அண்ணா சாலை மைய நூலகச் சிற்றரங்கில் கவியரசர் கண்ணதாசரின் பிறந்தநாளை ஒட்டி ”கவிஓவியா” இதழும் “கண்ணதாசன் கலை இலக்கிய மன்றமும்” இணைந்து நடத்திய கவியரங்கில் முதல் பரிசைப் பெற்ற கவிதை. அவ்விழாவை ஏற்பாடு செய்தவர்களுக்கும் எம் கவிதையைப் பரிசுக்குத் தேர்வு செய்தவர்களுக்கும் இவண் இன் நன்றிகளைப் பதிக்கிறேன்.

1 comment:

  1. வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete