இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Saturday, 23 October 2010

தமிழ்த்தேனிக்கு வாழ்த்து

அண்ணா நகர் தமிழ்ப்பேரவை
சென்னை.
09-10-2010

திருக்குறள் பரப்புனர், தமிழ்த்தேனி


புலவர். சா. அந்தோணி சாமி
அவர்களுக்கு

வாழ்த்துப்பாக்கள்

    ”திருக்குறள் பரப்புனர்” என்ற அடைமொழியுடன் ஒரு மனிதரைச் சந்தித்ததில் நான் பெரிதும் மகிழ்ந்தேன். அவர் மக்கள் திரளாகக் கூடும் பேருந்து நிறுத்தம் போன்ற இடங்களுக்கு விடுமுறை நாட்களில் எல்லாம் சென்று கையில் ஒலிபெருக்கியுடன் திருக்குறளின் அருமை பெருமைகளைச் சொல்லி, ’திருக்குறளைப் படியுங்கள்!’ என்று அறிவுறுத்தும் பணியைச் செய்து வருகிறார் எனத் தெரிந்து கொள்ளும் பொழுதில் எந்த உணர்வுடைய தமிழனால்தான் அவரைப் பாராட்டாமல் இருக்க இயலும்?


    அவரைப் பாராட்டுவதோடு நின்று விடாமல், அவரது உயர்பணிக்கு நாமும் நம்மால் ஆன உதவியைச் செய்து, திருக்குறளைக் கற்று–கற்பித்து வாழ்வில் சிறப்போம் என திருவள்ளுவனாரின் பொற்பாதங்களைத் துணையாகப் பற்றி வேண்டுகிறேன். நன்றி! [திருக்குறள் பரப்புனர் புலவர். சா. அந்தோனி சாமி அவர்களின் கைப்பேசி எண் : 90432 18568]
   

இயற்கும்மி

முப்பாலில் நம்வாழ்வைச் சீராக்கவே – திரு
வள்ளுவனார் தந்தார் குறளெனவே
எப்போழ்தும் இன்னூலின் மாண்புணர்ந்தே – அதை
எல்லோரும் கற்கென கும்மியடி!           

என்றென்றும் குன்றாத சீர்கொண்டதே – குறள்
எம்மக்கள் இன்றோ அதைமறந்தார்
இன்றந்த மாயையைப் போக்கிடவே – தமிழ்த்
தேனியும் வந்ததே; கும்மியடி!           

வாழ்வுறு மேயினி வாழ்வுறுமே – குறள்
கற்றென் இனமது வாழ்வுறுமே
தாழ்விலை யேயினி தாழ்விலையே – தமிழ்த்
தாய்க்கிவ் வுலகினில்; கும்மியடி!       


சமனிலைச் சிந்து

பாரினில் உயர்மொழி தமிழே – இதைப்
    பாவமென் மக்களுணர்ந் திலரே,
சீர்மிகும் சிறப்பினுக் கெல்லை – புகழ்
    திருக்குறள் நூல்பெற்றது அன்றோ?
”யாரிதை இன்னாளில் கற்பர்?” – எனல்
    யாவர்க்கும் மடமையே என்பேன்!
வேரினை அறுத்தெறிந் திட்டே – செடி
    மண்ணில் நிலைபெறல் உண்டோ?       


இருளொடு சேர்ந்ததெம் அறிவு – அதை
    இகல்வெல்ல இருப்பதோர் நூலே,
திருக்குறள் என்பதவ் வொளியே – புவி
    திகழ்ந்திட திறம்தரும் கதிரே!
மருள்மறைந் தென்னினம் ஓங்க – புகழ்
    முழுமையும் அடைந்துயாம் வாழ
ஒருதமிழ்த் தேனியும் உண்டே – அதன்
    உயர்பணி குறள்பரப் புதலே!           


வாழ்கவத் தேனியும் வாழ்க – அதன்
    வாழ்வுயர்த் தும்பணி வாழ்க!
வாழ்கநல் குறளதும் வாழ்க – புவி
    வாழநல் புகழொடு வாழ்க!
வாழ்கநம் தாய்த்தமிழ் வாழ்க – அவள்
    மலரடி வாழ்த்திட வாழ்க!
வாழ்கவென் இனத்தவர் எல்லாம் – இனி
    வீழ்விலை உயர்வதே! வாழ்க!!           

அன்புடனும் பணிவுடனும்,
கா. விஜயநரசிம்மன்

No comments:

Post a Comment