இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Friday, 24 August 2018

நகர்வலம் (மகாபாரதக் காட்சி)

[அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்]

[விளம் மா மா - அரையடி வாய்ப்பாடு]

அத்தினா புரியில் ஓர்நாள்
.....அழகிய காலை பொழுது,
சத்தமாய்ப் பறவை இனங்கள்
.....சங்கதி கூட்டிப் பாடும்,
புத்துணர் வோடு மக்கள்
.....புகுந்தனர் சாலை களிலே
தத்தமக் கான வேலை
.....தமைச்செய ஊக்கம் பொங்க; (1)

இளவர சான தருமன்
.....ஏகினன் தானும் நகரை
வலம்வர, நாட்டு மக்கள்
.....வாழ்வதைக் கண்டு கற்க;
களவுடை சிரிப்ப மர்ந்த
.....கண்ணனாய்க் கண்ணன் நின்று
கிளம்பிய தெங்கே தருமா?
.....கேட்டனன் அவனை மறித்தே. (2)

வந்தனம் கண்ணா! நகரை
.....வலம்வரக் கிளம்பி னேன்நான்,
சிந்தையில் உனைத்தான் கொண்டேன் 
.....சிரிப்புடன் நேரில் வந்தாய்!
நந்தகோ பால மைந்தா,
.....நகர்வலம் உடன்வா ராயோ?’
சந்தமாய்க் கேட்டான் தருமன்
.....சக்கரத் தாரி சொல்வான்: (3)

’இன்றெனக் கலுவல் உளதால்
.....இன்பமாய் நகரைச் சுற்றல்
என்றனுக் காகா தன்பா!
.....எனினும்நீ எனக்காய் ஒன்றைக்
குன்றிடல் இன்றிச் செய்க
.....குந்தியின் மைந்தா!’ என்ன,
‘நன்றிவண் வினவ லேனோ?
.....நவில்கவுன் சொல்லென் ஆணை!’(4)

எனவுதிட் டிரனும் பணிய
.....இயம்பினான் யசோதை மைந்தன்
‘இனியவென் தருமா கேள்நீ,
.....இன்றைய நகர்வ லத்தில்
மனத்திலே மாசு கொண்ட
.....மனிதரைப் பார்த்தாய் என்றால்
உனக்குளே குறித்துக் கொள்க,
.....ஊர்வலம் முடிந்த பின்பு (5)

மாலையில் என்னைக் கண்டு
.....மனத்திலே கொண்ட கணக்கை
ஓலையில் எழுதிக் கொடுத்தால்
.....ஒருபெரும் நன்றி சொல்வேன்!’
’காலையே கண்ணன் ஏதோ
.....கள்ளந்தான் செய்கின் றானோ?
சாலையில் வசமாய்ச் சிக்கித்
.....தவிக்கிறான் தருமன்!’ என்று (6)

கிழக்கினில் ஏறும் பகலோன்
.....கிரணங்கள் நீட்டி நகைத்தான்!
’வழக்கென வந்தால் கண்ணன்
.....மலையெனப் பக்கல் நிற்பான்
சழக்கிலை எனக்’கென் றெண்ணித்
.....தருமனும் நடக்க லானான்,
மழைவண மாயோன் தானும்
.....மாலையை நோக்கி நின்றான். (7)

பகலவன் மேலைக் கடலில்
.....படுகையில் தருமன் தானும்
நகர்வலம் முடித்து வந்து
.....நாடினான் நாரா யணனை,
சிகரமோ தோளோ என்று
.....சிந்தையில் ஐயம் தோன்றத்
தகும்வணம் நின்ற துரியோ
.....தனனுடன் நின்றான் கண்ணன். (8)

’வந்தனம் கண்ணா! தம்பி*,
.....வாழ்கநீ!’ என்று சொல்லால்
சந்தனம் தெளிக்கப் பேசித்
.....தருமனும் அருகில் வந்தான்,
வெந்தனல் வீழ்ந்த தைப்போல்
.....வியர்த்தனன் துரியோ தனனும்
நந்தகோ பாலன் இருப்பால்
.....நயத்துடன் வலிந்து சிரித்தான்! (9)

[*தம்பி - துரியோதனன். தருமன் தனக்கு இளையவன் என்பதால் ‘தம்பி’ என அழைத்தான்!]

’இருவரும் உற்றீர் அதனால்
.....எளிதினி என்றன் வேலை,
தருமகேள், நேற்று துரியோ
.....தனனுமிந் நகரைச் சுற்ற
விருப்புடன் சென்றான், அவன்றன்
.....விழியினில் நல்லோர் பட்டால்
ஒருகுறி பெடுக்கச் சொன்னேன்
.....ஒருவரும் இல்லை என்றான்! (10)

பாண்டுவின் முதற்கு மார!
.....பரந்தவிந் நகரை இன்று
தாண்டிநீ வந்தாய் இங்கு,
.....தகைவிலா மாந்தர் தம்மைக்
காண்டலும் பெற்றா யோநீ?
.....கணக்கெமக் கறைக!’ என்று
பூண்டுழாய்க் கண்ணி யானும்
.....பொழிந்தனன் அவனை நோக்கி. (11)

[பூண்டுழாய் - பூண்+துழாய்; துழாய் = துளசி; கண்ணி - தலைமாலை]

மாதவன் ஆட்டும் கூத்தை
.....மனமுணர்ந் தவனாய்த் தருமன்
யாதவ! எங்கும் கீழ்மை
.....யாளரைக் காணேன்’ என்றான்
தோதுடன் கைகள் கூப்பித்,
.....துரியனோ சினந்தான் சொல்வான்
‘பாதகக் கண்ணா உன்றன்
.....பார்வையில் பொம்மை நானோ? (12)

என்னிட மேவுன் லீலை
.....ஏற்றிவிட் டனையே!’ என்றான்
புன்னகை யோடு கண்ணன்
.....புகன்றனன் அவனை நோக்கி
‘இன்றுநாம் எல்லோ ருந்தான்
.....இனியதோர் பாடம் கற்றோம்,
நன்றதும் தீமை யஃதும்
.....நம்மனப் பாங்கின் தோற்றம், (13)

’பிறரிடம் காணும் குணத்தின்
.....பிறப்பிடம் நம்முள் மனமே,
சிறப்பெனில் சிறப்பே தெரியும்
.....சீயெனில் கீழ்மை தானே?
மறந்திடா திதனை உளத்தில்
.....வரிக்கநீர்! நாளை நாட்டை
அறத்துடன் ஆள இதுவே
.....அடிப்படை ஆகும்’ என்றே! (14)

கண்ணனன் றிருவ ரோடும்
.....காட்டிய நாட கத்தில்
நுண்ணிய உண்மை ஒன்றை
.....நுவன்றனன்: என்றும் இந்த
மண்ணிலே வாழும் மக்கள்
.....மனமதன் பாங்கைப் பொறுத்தே
உண்டொரு நன்மை தீமை,
.....உணர்ந்திவண் வாழ்வோம் நன்றே! (15)

(C) விசயநரசிம்மன், 2018

No comments:

Post a Comment