இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Friday, 19 August 2022

கண்ணன் எம் குழந்தை


 

பாலை வனத்தினிலே - மிகப்
    பசித்து வேட்கையுற்றே
மேலை திரிந்திருந்தார் - ஒரு
    மீட்சி தரவல்லபூஞ்
சோலை கண்டதைப் போல் - எங்கள்
    சோர்வைத் தணித்திடவே
ஆலிலை பள்ளிவிட்டு - எங்கள்
    அகத்தினுள் வந்தவனே...

வாய்க்குள் விரலைவிட்டே - என்றன்
    மடியில் உறங்குமுன்றன்
வாயின் கடையொழுகும் - எச்சில்
    வாழ்வை நனைக்குதடா!
சாய்ந்தென் தோளுறங்கும் - போதுன்
    தாள்கள் மார்புதைத்தால்
பாயும் காவிரியாய் - உயிரில்
    பாசம் பெருகுதடா!

உண்ண மறுத்தலையும் - உன்பின்னால்
    ஓடிக் களைப்பதிலும்,
மண்ணை எடுத்துண்ணும் - உன்வாயை
    வழித்துத் துடைப்பதிலும்,
கண்முன் உனைநிறுத்தி - வீட்டுக்
    காரியஞ் செய்வதிலும்
எண்ணும் உவகையுண்டு - அதனை
    எடுத்துச் சொல்வதில்லை!

வீதிச் சிறுவருடன் - நிதம்நீ
    விளையாடச் செல்கையிலே
வாது வழக்குபல - உன்மேல்   
    வந்துவந் துரைத்திடுவார்!
ஏதெனக் கேட்கையிலே - கள்ளம்
    ஏதுமில் லாதவன்போல்
கோதில் நகைபுரிவாய் - உள்ளம்
    குழைந்துள் உருகுமடா!

பாட சாலைசெல்லும் - உனைநான்
    பரிந்து பார்த்திருப்பேன்,
ஏடும் ஆணிகளும் - ஒருகை
    ஏந்த, மறுகையிலே
சீடை முறுக்குவெல்லம் - பெரிய
    செம்பு நிறையவெண்ணெய்
ஆடை மீதுசிந்த - மகிழ்வாய்
    ஆடி நடந்திடுவாய்...

உதித்த நாளுனைநான் - எனது
    உள்ளங் கைகளுக்குள்
மெதுவாய் ஏந்திநின்ற - நினைவே
    விரியும் மனத்தினுக்கே
வதுவை தேடுமொரு - நெடிய
    வாலிபனாய் வளர்ந்த
விதங்கள் புரிவதில்லை - உனையே
    வியந்து பார்த்திருப்பேன்...

விதைத்த மரநிழலில் - விதைத்தோர்
    மெச்சி உறங்குதல்போல்
மதலை உன்னணைப்பில் - மிகவே
    மனத்தில் அமைதிகொள்வோம்...
பதையா தெங்களுள்ளம் - காலன்
    பாசக் கயிறிடினும்,
இதமாய் விடைபெறுவோம் - கண்ணன்
    எங்கள் அமுதமன்றோ?!

***

உரைத்த பெருங்கனவைக் - கண்ணா!
    உண்மை ஆக்கிடவா!
நுரையின் சிற்பமெனத் - தினமும்
    நொறுங்கும் வாழ்வினிலே
கரையும் மனமுனக்காய்! - கண்ணா!
    காலம் நீளவிடாய்!
இரைகின்றேன் உனக்காய்! - கண்ணா!
    இனிமை நிரைத்திடவா!

-வெண்கொற்றன்

(C) Vijayanarasimhan, 2022.

Sunday, 21 March 2021

தவமா? தரிசனமா?

நேரிசைக் கலிவெண்பா


சொற்கள் தமையடுக்கிச் சொன்ன தளைகட்டி

நிற்பர் கவிதை நிரப்புவர் - சிற்பி


சிலைதன்னை ஊன்றிச் செதுக்குதல் போலே

பலகாலம் நோற்றேபா யாப்பர் - உலகோரும்


நன்றென்னும் அந்த நறுஞ்சொல்லைக் கேட்கவே

என்றென்றும் நெஞ்சத்தில் ஏங்குவர் - ஒன்றே


தொழிலென்று கொண்டே தொழில்படுவர் பாட்டில்

எழில்கொண்டு வந்திடவே எண்ணிப் - பொழில்தேடிச்


சோலை வனந்தேடிச் சொல்லா இடந்தேடிக்

காலை இரவென்று பாராமல் - மூளையும்


தொந்திரவில் லாமல் தொழில்பட வேண்டியே

தந்திரங்கள் செய்யத் தலைப்படுவர் - மந்திரம்போல்


இத்தனை செய்தும் இரங்காத இன்கவி

சித்தெனத் தோன்றும் சிறுநொடியில் - அத்தனையும்


சாலமோ மாயமோவெண் தாமரை யாள்தந்த

சீலமோவென் றெண்ணிச் சிலிர்க்கையிலே - நாளும்


இருந்த தவத்திற் கிரங்காதே இன்றோர்

அரிய நொடியில் அருளேன்? - புரிய


முடியாத மாய முழுமுதலோ? ஊன்றிப்

படியாத எந்தன் பவமோ? - அடியார்தம்


அன்பிற் கிளகுமவ் ஆண்டவன்போல் பாட்டும்நம்

என்பில் உருகி எழுவதோ? - என்றால்


அவனியிலே வெண்பா அடுக்குபவ ரெல்லாம்

தவமிருந்து பெற்ற தரமோ? - நவநவமாய்ச்


சாற்றுகின்ற பாக்கள் தனிவரமோ? ஓர்நொடியில்

ஊற்றெடுக்கும் உண்மைத் தரிசனமோ? - மாற்றுரைக்க


யாரும் இருக்காத ஏகாந்த வேளையிலே

ஊறும் இதற்கோர் உரை!


-வெண்கொற்றன் @ விசயநரசிம்மன்


(C)2017, Vijayanarasimhan.

All rights reserved. If you share the post please keep this credit intact. Thank you.


Wednesday, 1 January 2020

மார்கழி வெண்பா - 16 - சதுரபந்தம்

#மார்கழி 16

வாரணத் தேறியே தேறிட வந்தேற்ற
மாரனத்த னீய வகுதே வணங்கத்தாள்
சத்து வரகவி யின்தபாதே யாற்றிடுவான்
பத்துநீ வாசகத்தேன் பா!

(இருவிகற்ப இன்னிசை வெண்பா; சதுரபந்தம்)

பதம் பிரித்து:
வாரணத்து ஏறியே தேறிட வந்து ஏற்றம்
மாரன் அத்தன் ஈய வகு தே வணங்கு; அத்தாள்
சத்து வரகவியின் த(ப்)பாதே ஆற்றிடுவான்
பத்து நீ வாசகத் தேன் பா (வாசு அக தேன் பா).

பொருள்:
மன்மதனின் (மாரன்) தந்தையான திருமால் (அத்தன் = தந்தை) யானை (வாரணம்) மீது வந்து (ஏறியே வந்து) தான் ஆறுதல் கொள்ளும்படி (தேறிட) உயர்வு (ஏற்றம்) தரும்படி (ஈய) விதிசெய்துகொண்ட (வகு) தெய்வத்தை (தே; = ஆண்டாள்) வணங்கிச் சேர (வணங்கு) [அவள் அருளிய இனிய பாக்களான திருமொழியைப் பற்று = பத்து வாசு அக தேன் பா]
உண்மையாகிய (சத்து) இறைவனின் திருவடிளில் (அத்தாள்) நம்மைப் பிழையாது (தப்பாது) உய்யச் செய்பவரை (ஆற்றிடுவான் = மாணிக்கவாசகர்) சேர்ந்திட (பத்து) மனமே (நீ) திருவாசகம் என்னும் (வாசக) இனிய பாவை (தேன் பா) பிடித்துக்கொள் (பத்து).


விளக்கம்:
’வாசகத் தேன்பா’ என்பது நேர் பொருளின் திருவாசகத்தையும்,
‘வாசு அக தேன் பா’ என்று பிரிந்து நின்று (திருமாலின் உளத்திற்கு இனிதான பா) என்று ஆண்டாளின் திருமொழியையும் குறிக்கும்.
மாரனத்தன் = திருமால் மன்மதனின் தந்தை என்று சில புராணங்களில் உள்ளது (மன்மதனின் தந்தை என்று பிரம்மாவும் சொல்லப்படுகிறார். பிரம்மாவின் தந்தை திருமால், எனவே ‘அத்தன்’ என்பதை அவ்வகையிலும் பொருள்கொள்ளலாம்!)

சதுரபந்தம்:
ஏழுக்கேழு கட்டம் கொண்ட சதுரத்தில் இப்பா அடங்கும். சதுரத்தின் இடமேல் மூலையில் தொடங்கி நேரெதிர் மூலை (வலக்கீழ் மூலை) வரைச் சென்று, பின் சிற்சிறு சதுரமாக (படிக்கட்டைப் போல்) ஏறியிறங்கி இடக்கீழ் மூலைக்கு வந்து நேரெதிராய் வலமேல் மூலைக்குச் செல்ல இவ்வெண்பா சரியாகும். இது படத்தில் காட்டப்பட்டுள்ளது!

இனிய காலை வணக்கம்...

நன்றி!

(C)2019, Vennkotran.