இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Wednesday, 26 January 2011

எனது குடியரசு நாள் செய்தி

குடியரசு அல்லது மக்களாட்சி – உலகின் மிகப்பெரிய மக்களாட்சிதான் அது எப்படி அமையக் கூடாது என்பதற்கும் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது... பொய்களைச் சொல்லிக்கொண்டு போலியாய் கொண்டாடுவதைவிட உண்மைகளை ஒப்புக்கொண்டு எதிர்காலத்திலாவது தவறுகளைச் சரி செய்துகொள்வது சிறந்தது என்பது என் கருத்து!

குடியரசு அல்லது மக்களாட்சி என்றதும் நம்மில் பலருக்கு நினைவிற்கு வருவது “சுதந்திரம்” என்ற சொல்தான், குமுகாயப் (சமுதாயப்) பார்வையில் இந்தச் சொல்லின் பொருள் தவறாகவே கொள்ளப்படுகிறது... எது சுதந்திரம்? ஒரு தனிமனிதனோ அல்லது குழுவோ அல்லது நிறுவனமோ தான் நினைத்த எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதா? தன் கடமைகளை முற்றிலும் மறந்துவிட்டு உரிமைகளை மட்டும் இம்மியளவும் குறைவிலாமல் பெற விழைவதா? நிச்சயம் இல்லை!

நண்பர்களே, இந்தியர்களே, குடியரசின் உறுப்பினர்களே... உரிமைகளைக் கேட்கும் முன் கடமைகளைச் செய்து முடிப்போம், நாம் ஒரு பெரும் இயக்கத்தின் சிறு பகுதி என்பதை நினைவில் கொள்வோம், எத்துனை சிறியதானாலும் எத்துனை பெரியதானாலும் நமது பங்களிப்பு இல்லாது அந்தப் பெரிய இயக்கத்தால் சரிவர செயல்பட இயலாது என்பதை மனதில் கொள்வோம்...

வாய்வழியாக வயிற்றுக்கு அளிக்கப்படும் உணவுதான் பின் ஆற்றலாக கைக்கும் பிற உறுப்புக்களுக்கும் கிடைகிறது, வாய்க்கும் வயிற்றுக்கும் நான் ஏன் உணவைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கை நினைத்தால் இழப்பு அதற்கும்தானே? அது போலதான் ஒரு குமுகாயமும், அதன் உறுப்புகளான ஒவ்வொருவரும் அதற்கு அளிக்கும் பங்களிப்பு அவர்களுக்குத் திரும்பி வரும், நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ! நமக்கு கிடைத்த கிடைக்காத அனைத்துமே நம் பங்களிப்பின் பயன்தான் என்பதை உணர்வோம்...

உலகின் மிகப்பெரிய குடியரசு என்று மார்தட்டிக்கொள்ளும் முன் அது உலகின் மிகச் சிறந்ததூஉம் என்பதையும் உறுதி செய்து கொள்வோம்...

 இனிய குடியரசு நாள் வாழ்த்துகள்.... வெல்க குடியரசு! வாழ்க ஞாலம்!!

Saturday, 13 November 2010

தமிழ்த்தூது - பாரதி வழி

[பாரதியின் கிளிக்கண்ணியின் வடிவமைப்பில் கிளிக்குப் பதில் தமிழை விளியாகக் கொண்டவை - தமிழ்க்கண்ணிகள். காதலியிடம் தூது செல்ல தமிழை வேண்டியது!]

காதலியின் அடையாளம் மற்றும் ஊரை உரைத்தல்

எட்டியிருந் தும்மன
    ஏட்டில் நிறைபவள்
சுட்டும் சுடர்விழியாள் – தமிழே!
    தூயமென் நன்மொழியாள்!                                ௧

கன்னலின் தேனிநல்
    கனியின் இனியவள்
என்னவ ளைக்காண்பாய் – தமிழே!
    என்னிலை எடுத்துரைப்பாய்!                                ௨

பொன்னேறு மலர்களில்
    புதுமது வண்டுணும்
பொன்னேரி ஊராள் – தமிழே!
    புறப்படு நீதூதே!                                                        ௩

தண்மலர் இதழினைத்
    தானுணும் வண்டென
கண்கள வையிருக்கும் – தமிழே!
    காதலி யின்முகத்தில்!                                         ௪

திங்களின் கீற்றென
    திருநுதல் ஒளிருமே
மங்கைய வளிடமென் – தமிழே!
    வாட்டத்தை உரைத்திடுநீ!                                ௫

மென்னகைக் கணைகளை
    விடுத்துயிர் பறிப்பவள்
என்னகம் இருப்பவளே – தமிழே!
    எந்துயர் போக்கசொல்லே!                                ௬


தமிழே, உன்னை அன்றி வேறெதையும் நாடேன்...

அன்னமும் மேகமும்
    அணிமயில் தென்றலும்
என்றெதை யும்நாடேன் – தமிழே!
    இரக்கிறேன் உன்னருளே!    ௭

வள்ளியைக் குறிஞ்சியின்
    மாண்புடைக் குறத்தியைக்
கள்ளச் சிறுகுமரன் – தமிழே!
    கைக்கொள உதவினையே!                                ௮


தூது செல்ல கையூட்டு தருவேன்...

பாட்டினில் உனைவைத்துப்
    பலப்பல புகழ்மொழி
நாட்டுவேன் நன்றியோடே – தமிழே!
    நயந்துநீ செல்கதூதே!                                ௯

பிறமொழி நூல்களைப்
    பெயர்த்துநான் தருகுவன்
திறமொழி உன்னுருவில் – தமிழே!
    தெரிந்துநீ செல்கதூதே!                                ௧0


அவளும் உன்னைப் போன்றவளே, எனவே தயங்காது செல்க தூது...
[தமிழுக்கும் காதலிக்கும் இரட்டுற மொழியப்பட்டவை]

இன்மொழி படைத்ததால்
    இசையொடு இசைதலால்
உன்னைதான் நிகர்த்தவளே – தமிழே!
    உயிரெனக் கிருவருமே!                                ௧௧

மனத்துயர் துடைப்பதில்
    வந்துளம் நிறைவதில்
உனையவள் நிகர்த்தவளே – தமிழே!
    உயிரெனக் கிருவருமே!                                ௧௨

மதுரையில் வளர்ந்ததில்
    வளகவி அருள்வதில்
மதுவுனை நிகர்த்தவளே – தமிழே!
    உயிரெனக் கிருவருமே!                                ௧௩

சிலம்பதை அணிவதில்
    சிறப்புகள் அடைவதில்
நிலவுனை நிகர்த்தவளே – தமிழே!
    நீங்களெ னக்குயிரே!                                ௧௪


தமிழின் சிறப்பும் அவளின் சிறப்பும்...

[சங்கவிலக்கியம்]
கபிலரின் குறிஞ்சியில்
    கள்ளென நிறைதிநீ
அபிதநல் அமுதவளைத் – தமிழே!
    அடைந்திட தூதுசொல்லே!                          ௧௫
[அபிதம் – பருகப்படாதது]

[சங்கமருவிய கால இலக்கியம்]
சீரெழு குறளினில்
    திருவொடு திகழ்திநீ
சீரெழும் என்னவளைத் – தமிழே!
    சீக்கிரம் எனக்கருளே!                                ௧௬

சேரமான் தம்பியின்
    சிலம்பினில் வாழ்திநீ
ஈரமான் விழியினாளைத் – தமிழே!
    இக்கணம் எனக்கருளே!                                ௧௭
   
[சமய இலக்கியம்]
சம்பந்தன் துதிகளில்
    தவமெனச் சேர்திநீ
வம்புசெய் விழியினாளைத் – தமிழே!
    வந்திட தூதுசொல்லே!                                ௧௮

கம்பனின் பாட்டினில்
    கவினுற வாழ்திநீ
அம்புறை விழியினாளைத் – தமிழே!
    அடைந்திட தூதுசொல்லே!                        ௧௯

[புதுக்கவிதை]
புதுப்புதுக் கவிகளில்
    பொலிவொடு வளர்திநீ
மதுபொழி விழியினாளைத் - தமிழே!
    வந்திட தூதுசொல்லே!                                ௨0

அவளை என்னிடம் சேர்த்து விடு...

அன்னையும் தோழியும்
    ஆருயி ரும்எனக்[கு]
உன்னைப் போலவளும் – தமிழே!
    உதவிடு தூதுசென்றே!                                ௨௧

Sunday, 7 November 2010

இயற்பியலாளனும் கவிஞனும் புலவனும்...

[இயற்பியலாளனின் காதல், கவிஞனின் வெளிப்பாடுகள், புலவனின் யாப்புப்பெயர்ப்புகள்!]
உன்
இருத்தலின் ஈர்ப்புவிசையில்
என்
நொடிக்கூறும் நாட்களாகிறது
கணங்களின் கனத்தில்
கனமிழக்கிறது மனது!
[இன்னிசை வெண்பா]
உந்தன் இருத்தலின் ஈர்ப்பு விசையில்
எனது நொடிக்கூறும் நாட்களாய் ஆக
கனக்கும் கணங்களில் தானும் இழக்கிறது
தன்கனத் தைஎன் மனது.


விழியென்னும்
கருப்புக் குழி
விழுங்கி விடுகிறது
என்
பார்வை ஃபோட்டான்களை!

[குறள் வெண்பா]
விழுங்குது என்பார்வை ஃபோட்டான் களைத்தான்
விழியின் கருப்புக் குழி!


நினைவின் அழுத்தமும்
நீதரும் வெப்பமும்
நிகழ்த்திவிடுகின்றன மனதுள்
அணுக்கரு வினைகளை...
பெருகும் வினைகள்
தருகின்ற ஆற்றலில்
பிறக்கின்றது மனது
புதியதொரு விண்மீனாய்!

[இன்னிசை வெண்பா]
நினைவின் அழுத்தமும் நீதரும் வெப்பமும்
என்னுள் நிகழ்த்தும் அணுக்கரு கூட்டு
வினையால் புதியதோர் விண்மீனாய் என்மனம்
அன்பே பிறக்குது இன்று!


நீ கதிரானால் தான் கோளாய்
நீ கருவானால் தான் மின்னாய்
சுற்றிக் கொண்டே இருக்கும்
உன்னையே என் மனம்!

[இன்னிசைச் சிந்தியல் வெண்பா]
கதிரானால் கோளாய் கருவானால் மின்னாய்
எதுவானா லுமதற்(கு) ஏற்பவே தானுமென்றும்
உன்னையே சுற்றும் மனது!

நீர் ஆவியாகும்
வெப்பத்தில் என்பது
இயற்பியல்,
என்
ஆவி நீராகிறதே
உன்
பார்வை வெப்பத்தில்
இது என்ன
முரணியலா?

[இன்னிசைச் சிந்தியல் வெண்பா]
நீராவி ஆகும் நெருப்பில் இயற்பியல்
நீபார்க்க என்னாவி நீரா கிறதே
முரணியலா என்ன இது?

உன்
காந்தக் கருவிழியில்
மூழ்கும் என்
கண் கடத்திகளில்
பிறக்கிறது
காதல் மின்சாரம்!

[குறள் வெண்பா]
காந்தக் கருவிழியில் கண்கடத்தி மூழ்கிட
பாய்ந்து பரவுது மின்.

உன்னை
உயிர் என்பதா?
அதுவும் ஒருநாள்
பிரிந்திடுமே...
என்றும் பிரியாதவளே
உன்னைத்
’தமிழ்’ என்பேன் நிலைத்து!

[நேரிசை வெண்பா]
உன்னை உயிரெனவோ ஓர்நாள் அதுவும்தான்
என்னைப் பிரியும் இனியவளே – என்றென்றும்
என்னைப் பிரியா(து) இருப்பவளே இன்னமுதே
உன்னைத் தமிழென்பேன் நான்!