இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Saturday, 29 May 2010

மதுரையை மீட்ட சுந்தர ”பல்லவன்”

முன்குறிப்பு : என் காதலி பாண்டிய நாட்டவள் (மதுரை), நான் தொண்டை நாட்டவன் (சென்னை) - அவள் தன் ஊருக்கு போயிருந்த சமயம், வந்த பாடல் இது! மழைத்துளிகளைச் சேகரிக்கும் சிறுவன் போல எங்கிருந்தோ பொழிந்த சொற்களை பேனா மூலம் ஒரு வெள்ளைத் தாளில் சேகரித்த பணி மட்டுமே என்னுடையது!

    "Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquility”

 -என்று வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் சொன்னதன் உண்மையை புரிந்த நொடி அது!


மதுரைக்குச் சென்றாயே பெண்ணே

மதுவிறைக்கும் நின்தாமரைக் கண்ணே!

தொண்டைநாடன் எனைவிட்டாய் தனியே

பாண்டி-

கெண்டைவிழி என்றுகாண்பேன் இனியே?


மீனாட்சி கோவுறையும் பதியில்

மீன்ஆட்சிக் கோலுறைந்த கதியில்

தானாட்சி புரிந்திடுமோ கண்கள்

என்னை-

ஏனாட்சி செய்கிறதுன் பெண்-கள்!


சேமறையும் வேளைவரும் கூடல்நிலா

தாமரையும் தானும்சேர்ந்து போகுமுலா

மல்லிகைதன் மணம்பரவும் மாநகரில்

உந்தன்-

அல்லிகைபற்றி அலையும்சுகம் நிகரில்!


பாவையுன் விழிபார்த்து நாணும்

பாண்டியன்தன் கொடிவாழும் மீனும்!

சொல்லாத சுகமெல்லாம் ஈணும்

நிந்தன்-

சொல்லாலே சொக்கிநின்றேன் நானும்!


சொக்கனுக்கு சொந்தமான வானும்

சொர்க்கமுன்மேல் மழைதூவ வேணும்,

கூடல்நகர் கூடிநின்று காணும்

இந்தக்-

கூரழகை கைக்கொள்வேன் நானும்!


முத்தெடுத்த பாண்டியமா கோவும்

நின்பல்லழகை பார்த்ததில்லை பாவம்!

கல்வடித்த பல்லவன்நான் மேவும்

உற்ற-

நல்லழகே மனமுன்பால் தாவும்!


முப்படையால் உலகம்கொண்டான் சோழன்

முத்தமிடும் இதழ்படைக்கு நானே தோழன்,

வில்கொண்டான் படைகொடியில் சேரன்

அவன்-

கல்லாத கலையிடையில் கற்பேன் பாரேன்!


தமிழென்பாள் நான்கொண்ட அன்னை

தவறாமலெனக் கருள்வாள் அவள் உன்னை

நீயின்றி நானில்லை என்னை?

எந்தன்-

உயிரே நீ ஏற்பாயோ என்னை!


(பாடலின் யாப்பைப் பற்றிய விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்! நன்றி! )

Wednesday, 24 March 2010

பாரதி வழியில் - புதிய தமிழனுக்கு!

(”ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா” மெட்டைச் சுட்டு அதில் போட்ட பாடல். பாரதியிடமிருந்து சுடுவது பெருமையே எனக்கு!)

தமிழனென்னத்      தயங்குவாய்     போ! போ! போ!
தன்பெருமை          அறிந்திலாய்     போ! போ! போ!
தாழ்மையை           விரும்புவாய்    போ! போ! போ!
தாய்மொழி              கற்கிலாய்          போ! போ! போ!
மானமென்ப           தறிகிலாய்          போ! போ! போ!
ஈனச்செயல்கள்    புரிகுவாய்           போ! போ! போ!
மேற்கைக்கண்டு  மயங்குவாய்     போ! போ! போ!
மேன்மைமீட்க      முயன்றிலாய்   போ! போ! போ!

தமிழினை                  விரும்புவாய்        வா! வா! வா!
திராவிடம்                  உயர்த்துவாய்      வா! வா! வா!
இலக்கியங்கள்        போற்றுவாய்       வா! வா! வா!
இலக்கணங்கள்       தேறினாய்             வா! வா! வா!
வள்ளுவத்தின்         நெறிகளை -          நன்  றா   க
கற்றுநின்று               வாழ்குவாய்          வா! வா! வா!
கம்பன்சேரன்            யாத்தளித்த -        மா  நூல் கள்
கலக்கமின்றி            கற்றுநீ                    வா! வா! வா!
உள்ளவுயர்                வனைத்தையும் - தா ழா   து
உலகெலாம்              சாற்றிட                  வா! வா! வா!
உயிரும்வாழ்வும்    தமிழென்றே         வா! வா! வா!
ஒன்றுகூடி                 உயருவோம்        வா! வா! வா!

வாழ்க தமிழ்...
வளர்க ஞாலம்...

Friday, 12 February 2010

என் முதல் கவிதைகள்...

என்ன இருந்தாலும் “முதல்” முதல்தானே...
என் முதல் கவிதைகளும் அப்படித்தான் எனக்கு - வாழ்க்கை முதல் வார்த்தைவரை வேறு கோணத்தில் பார்க்க வைத்த என் முதல் காதலை நினைவுபடுத்தும் கால ஆடிகள் என் முதல் கவிதைகள்!

கி.பி.2001-இல் ஒரு விடலைப் பையனின் ஹார்மோன் குளறுபடிகள் உருவாக்கிய கிறுக்கல் கோலங்களைக் காணத் தயாரா?... இதோ...

பெண்ணே,
துப்பட்டா சிறகு விரித்த
உன்னைப் பார்த்துப்
பட்டாம்பூச்சிகள் பொறாமைப்படலாம்...
தேவதைகள் கூடவா?!

நீ உச்சரித்தப் பிறகுதான்
என் பெயரே எனக்குப் பிடித்தது,
நீ உச்சரிக்காமலே
உன் பெயர் பிடிக்கிறதே, எப்படி?!

நான் எவ்வளவுதான் காத்திருப்பது?
இறக்கைகளை மட்டும் அசைக்கின்றன
ஆனால்
பறக்கவே மாட்டேன்கிறதே
உன் விழிப்பட்டாம்பூச்சிகள்!

நான் எவ்வளவுதான் முயன்றாலும்
என் கவிதைகளுக்கு
உன் பெயரைத் தவிர வேறு நல்ல
‘தலைப்பு’க் கிடைக்கவில்லை!

 யார் வரைந்த ஓவியமோ
என
நான் கண்ணிமைக்காமல்
உனைப் பார்த்துக்கொண்டிருக்கையில்
நீ கண்ணிமைத்து
உணர்த்திவிட்டாய் நீ ஓவியமல்ல என்று!

நான்
இயற்பியல் மாணவனாக இருந்தும்,
உன்னைப்
பார்க்கும்பொழுது என்னுள்
வேதியல் மாற்றங்கள்,
நீ என் உயிரியல் என்பதாலா?!

தாய் மடியில் குழந்தையாய்
தூங்கிக் கொண்டிருக்கும்
என் கவிதைகளில்
உன் காதல்...

அன்புடன்,
விஜய், SSLC :-)