இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Sunday, 19 February 2017

ஹைக்குறள் #39 இறைமாட்சி

பொருட்பால் / அதிகாரம் 39 / இறைமாட்சி

#haiKUral

உறுப்புகள் ஆறும்*
இருக்குமோர் அரசனே
சிறப்பான் சிங்கமென. (381)

அச்சமின்னை, கொடை,
அறிவு, ஊக்கம்
கொச்சைப்படாமை அரசர் குணம்.  (382)

தளராமை, கல்வி,
முடிவெடுக்கும் உறுதி
நிலனாள்பவர்க்கு நிலை. (383)

அறத்தினைக் காத்தலும்
அல்லாதவை நீக்கலும்
மறத்தைப் பேணலும் அரசர் மானம். (384)

பொருளைப் பொறுப்போடு
நால்வகையும் ஆள்பவரே
நல்ல அரசர். (385)

நெருங்க எளியவன்
பழக இனியவன் என்றால்
பெருகும் அம்மன்னன் புகழ்! (386)

இனிக்கப் பேசி
ஈகை செய்யும் அரசன்
நினைத்தபடி நிற்கும் உலகம். (387)

கடமை அறிந்து
காப்பாற்றும் மன்னவன்
கடவுள் எனப்படுவான்! (388)

கசப்பான சொல்லுக்கும்
காதுகொடுக்கும் வேந்தன்
வசப்பட்டிருக்கும் உலகம். (389)

அன்போடு அருளோடும்
அறத்தோடும் ஆள்பவன்
மன்னருக்கே ஒரு விளக்கு! (390)





*ஆறு உறுப்புகள் (அங்கம்): படை, குடி (மக்கள்), கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகியன. இவற்றிற்கெல்லாம் தனித்தனி அதிகாரங்களே அமைத்துள்ளார் திருவள்ளுவர்.

முந்தைய ஐந்தைவிட பிந்தைய ஐந்தும் ஹைக்கூவிற்கு கொஞ்சம் அருகில் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது... உங்கள் கருத்துகளையும் உரைக்கவும்... நன்றி!

ஹைக்குறள் #109 தகையணங்குறுத்தல்

காமத்துப்பால் / அதிகாரம் 109 / தகையணங்குறுத்தல்

#haiKural

தேவதையோ? மயிலோ?
பெண்தானோ? மயங்குகிறது
பாவம் என் நெஞ்சு! (1081)

பாவையவள் பார்க்கும்
பார்வைக்கெதிர் பார்வை
தேவதை செய்யும் போர்! (1082)

எமன் என்பதை
இன்றுதான் அறிந்தேன்,
இமைக்கும் அகல விழி! (1083)

அறியாப் பெண்ணென்று
அறியாமல் பார்ப்பவரின்
உயிர் உண்ண உள்ளன கண்! (1084)

எமனா? மானா?
விழிதானா? இவட்குச்
சமமாய் மூன்றுமே அது! (1085)

புருவக் கேடயத்தால்
இவள் விழி அம்புகள்
உருவவில்லை என் உயிரை! (1086)

முட்டும் யானையின்
முகப்படாம் போலிவள்
கட்டுக்கடங்காததின் கச்சு! (1087)

வெற்றியே சுவைத்தவென்
வீரமும் தோற்றது
நெற்றியின் ஒளி கண்டு! (1088)

மான் விழியும்
நாண் நகையும் மீறி
வீண் அணிகள் ஏன்? (1089)

பார்த்தவுடன் போதைதரும்
காதல்போல் வருமா?
நீர்த்துவிடும் மது! (1090)

Friday, 17 February 2017

ஹைக்கூ குறள் - ஒரு முயற்சி #1

மு.கு.: முன்குறிப்பு நீண்டதால் பின்குறிப்பாகத் தரப்படுகிறது. நன்றி :)

ஹைக்கூ குறள்

திருக்குறள் / அறம் / கடவுள் வாழ்த்து

எழுத்துகளின் முதல் அகரம்
உலகின் முதல்
இறைவன் (1)

தூய அறிவுடையோன்
தாள் தொழாமல்
ஆவதென்ன கற்று? (2)

மலர்மேல் நடந்தவனை
மனத்தில் பதித்தவர்
நிலமேல் நீடிப்பர்! (3)

தேவை தேவையின்மைகள்
தேவைப்படாதவனைத்
தேர்ந்தவர்க்கு இல்லை துன்பம்! (4)

தூயவன் புகழை
வாயுரைப்பார்க்குப்
பாழ்வினைப் பாடுகள் இல்லை! (5)

புலனை வென்றவன்
நிலையில் நின்றவர்
நிலைபெறுவார் உலகில்! (6)

ஒப்புமை இல்லானைச்
சிக்கெனப் பிடித்தால்
எக்கவலை வரும்? (7)

அறத்தின் கடலாம்
அந்தணன் சேர்ந்தார்
பிறவி அறுப்பர். (8)

எட்டு குணத்தானை
ஏற்காதார் தலை
கட்டை, வெறும் கட்டை! (9)

பிறவிக் கடல் நீந்த
உறவுப் படகொன்றே -
இறைவன் அடி! (10)

பி.கு. ஆகிய மு.கு.: 
”திருக்குறளுக்கு ஹைக்கூ உரை இருக்கா?”

என்று என்னை ஒருத்தி கேட்டாள்...

எனக்குத் தெரிந்தவரை இல்லை என்றேன்.

எழுத்தாளர் சுஜாதா எழுதிய உரை அவருக்கே உரிய பாணியில் சுருக்காமானதாக இருக்கும். பழைய உரைகளில் மணக்குடவர் உரையும் சுருக்கமானது.
ஆனால், ஹைக்கூ? ம்ஹூம்!

சரி நாமே ஏன் முயலக் கூடாது?

கடல் குடிக்க விரும்பிய கம்பப் பூனை போல...

இரண்டு சிக்கல்கள்:
1. எல்லாத் திருக்குறளும் ஹைக்கூவிற்கானவை அல்ல! (காமத்துப்பால் குறள்கள் அழகாக பொருந்தும் என்று தோன்றுகிறது! பொ.இ.பார்ப்போம்!)

2. ஹைக்கூ என்பது நம்ம ஊர் கவிஞர்களால் சரியாக புரிந்துகொள்ளப் படாத ஒன்று (என் கருத்தில், ஆங்கிலம் மூலம் நமக்கு அறிமுகமானதால் இச்சிக்கல்!)

ஹைக்கூ எதையும் சொல்லாது, எதையும் குறிப்பிடாது... அது ஒரு காலமற்ற காட்சியின் சொற்பிடிப்பு, அவ்வளவே (சமுதாயச் சாடல்கள், ‘அடடே ஆச்சரியக்குறி’க்கள் எல்லாம் சென்றியூ எனப்பட வேண்டும்!)

இதையெல்லாம் புரிந்துகொண்டுதான் நான் இதில் கால் வைக்கிறேன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...

ஒரு முதலடியாக மூன்று அடிகளில், சொற்சுருக்கங்களில் திருக்குறள்களைச் சொல்லிப் பார்ப்போம்... ஆங்... முக்கியமாய் எளிமையாய்! பத, பொழிப்பு, விளக்க உரைகள் தேவைப்படா வண்ணம்!

1330-இல் ஒரு நூறாவது நல்ல ஹைக்கூவாக (அல்லது சென்றியூவாகத்) தேறும் என்பது என் நம்பிக்கை (சிக்கல் வள்ளுவரில் அல்ல, என்னிடமே!)

இதை இப்படிப் போட்டால் இன்னும் நல்லாருக்குமே’ வரவேற்கப்படுகின்றன...

Friday, 13 January 2017

பொங்கலோப் பொங்கல்...

கண்டுகொள்ள ஆளின்றி கதியிழந்து நிற்கின்றான்
பண்டு உலகளந்த பாவப்பட்ட தமிழன்,
வாழ வந்தார்க்கு வாழை இலைபோட்டான்
பாழும் தமிழனுக்குப் பசியாற்ற வழியில்லை!

அடுத்தடுத்து இங்கே அணுவுலைகள் கட்ட,
நடுவயலில் எண்ணெய் நகர்குழாய்கள் போட
நடுவண் அரசிடமே ‘நல்லதிட்டம்’ பலவுண்டு,
படுபாவித் தமிழன் படிந்திட மறுக்கின்றான்!
தண்ணீரும் கல்வியும் தானா முக்கியம்?
விவசாயம் செய்து வீணாகப் போவதேன்?

நேற்று வந்ததெலாம் ‘நேஷனல் லாங்குவேஜ்’ஆம்
தோற்றமுதல் உள்ளதமிழ் தொய்ந்திட்ட பொய்யாம்!

தரணியில் முதல்மாந்தன் தமிழனென்றே சாற்ற
வருகின்ற ஆய்வெல்லாம் மறைக்கப்படு வதுமேன்?

என்னத்தான் செய்துவிட்டான் ஏமாளித் தமிழன்?
முன்வந்து பண்பட்ட முழுக்குற்றம் ஒன்றே!
கறுப்பன் தந்ததே கலாச்சாரம் என்றால்
வெறுப்பு வருகிறதோ வெள்ளைத் தோலர்க்கு?

தமிழனுக்குக் காவிரியைத் தரச்சொன்ன தீர்ப்பை
மதியாமல் ஆங்கவர் அணைமூடிக் கொண்டார்
அதுகேட்க ஆளில்லை ஆனால் தமிழனுக்கு
எதிரான தீர்ப்பென்றால் எப்படியும் நிறைவேறும்
நாட்டுக் காளைகளை நாசமாக்க விழையும்
பீட்டாக்கே வளையுதுநம் பீனல் கோடுகளும்!

நம்கையைக் கொண்டே நம்கண்ணை குத்தும்
தந்திரங்கள் கற்று தரணி அடக்குகின்றார்...

பொங்கள் வாழ்த்தொன்று புனையத்தான் எண்ணம்
பொங்கி எரிமனத்தில் பூப்பூப்பது எங்ஙனம்?
தெறித்து எரிமனத்தில் தேன்வந்தா ஊறும்?
போகட்டும் போகியொடு பொல்லாப்பு எல்லாம்
ஆகட்டும் விடியல் அமைந்ததொரு தைமுதலாய்...