இணைப்புகள்

குறிசொற்கள்

கவிதை (39) மரபுக்கவிதை (25) வெண்பா (17) ஆண்டாள் (16) மாணிக்கவாசகர் (16) மார்கழி (16) வாழ்க்கை (14) காதல் (12) தமிழ் (12) காலம் (6) விருத்தம் (5) ஹைக்கூக்கள் (5) நட்பு (4) பாரதியார் (4) சிந்து (3) திருக்குறள் (3) பண்டிகை (3) மிறைகவி (3) வாழ்த்து (3) ஆசிரியப்பா (2) கதைப்பாடல் (2) சிறுகதை (2) திரைப்படம் (2) பாசம் (2) விமர்சனம் (2) Farewell Poem (1) Friendship Poem (1) அரசியல் (1) இடையினப்பா (1) இரங்கற்பா (1) இரதபந்தம் (1) கண்ணதாசன் (1) கண்ணன் (1) கலிவெண்பா (1) கவியரங்கம் (1) கிராமம் (1) கிருஷ்ண (1) கூடசதுர்த்தம் (1) சதுரபந்தம் (1) சிலேடை (1) ஜெயலலிதா (1) தமிழ்ப் படம் (1) திரை விமர்சனம் (1) நாகபந்தம் (1) நான்காரைச் சக்கரபந்தம் (1) நாற்கூற்றிருக்கை (1) நிரோட்டகம் (1) நூல் (1) பின்பி (1) பொங்கல் (1) மகாபாரதம் (1) மடக்கணி (1) மழை (1) மாலைமாற்று (1) மெல்லினப்பா (1) மொழிபெயர்ப்பு (1) யமகம் (1) வஞ்சி விருத்த (1) வல்லினப்பா (1) வினாவுத்திரம் (1) ஷேக்சுபியர் (1)

(கா) விஜயநரசிம்மன் 2007-2021

இந்தத் தளத்தில் உள்ள கவிதைகள் அனைத்தும் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின் கீழ் எனக்கு (மட்டுமே) உரிமையானவை, இவற்றை பிறர் தங்கள் பெயரில் வெளியிடவோ, கையாளவோ வேண்டாவென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

vijay10.n@gmail.com / +91 99412 46681 (Please SMS/WA/Telegram/Signal before you call, thank you!)

Saturday, 6 January 2024

நரிக்கதை (நுண்காப்பியம்)

நரிக்கதை (நுண்காப்பியம்)


(திரு. இலங்கை செயராசு ஐயா தன் சொற்பொழிவில் கூறிய ஒரு குறுங்கதையைப் பாக்களில் அமைத்துள்ளேன்.)


வஞ்சி விருத்தங்கள்
{வாய்ப்பாடு: விளம் மா மா}


காட்டிலோர் குள்ள நரிதன்
பாட்டிலே சென்ற போழ்து
வேட்டையில் திரியும் சிங்கக்
கோட்டையுள் நுழைந்த தாமே... 1

பசியிலே கிடந்த சிங்கம்
விசுக்கெனத் தலைசி லுப்பி
ருசிகர விருந்து நன்கு
பசிகெடக் கிடைத்த(து) என்று... 2

மெத்தென அடியெ டுத்துச்
சத்தமெ ழுப்பி டாதே
மித்திரர் வஞ்சம் என்னும்
கத்திபோல் நரியின் பக்கல்... 3

{மித்திரர் - நண்பர்}

நெருங்கிட, மூக்கும் காதும்
நரிக்குடன் துடிக்க, வேட்டை
அரியது அருகில் என்று
புரிந்திடப் புரிந்த(து) ஓட்டம்... 4

{அரி - அரிமா - சிங்கம்}

நாலுகால் பாய்ச்ச லாக
வால்குழைத் தோடும் நரியைக்
காலனாய்த் துரத்திச் சிங்கம்
மேலும்வி ரைந்த(து) ஆங்கே! 5

நிலையிலா இளமை செல்வம்
குலையுமோர் நொடியில் என்ப,
உலைவிலா(து) இருந்த நரியின்
தலைக்கவண் உற்ற(து) இன்னல்! 6

{உலைவிலாது - துன்பம் இல்லாமல்}

கால்களில் உயிர்மு ழுக்கக்
கோலியே நரியும் ஓடச்,
சாலதன் உடலே நச்சு
வேலென அரிபின் பாய... 7

{கோலி - நிறுத்தி}

கானகம் கொண்டி ருந்த
மோனமும் கலையப் - புள்ளும்
வானரம் மானும் ஆவும்
ஏனைய உயிரும் அஞ்ச... 8

{மோனம் - அமைதி, புள் - பறவைகள், வானரம் - குரங்கு, ஆ - ஆமா - காட்டுப்பசு}

நீண்டதவ் வேட்டை, நரியும்
தாண்டிய(து) அனேக காதம்,
தாண்டிய(து) அரிமா தானும்
தீண்டிட இரையை நன்கு! 9

{அனேக காதம் - பல காதங்கள் தொலைவு, இரை - உணவு, நரியைக் குறிக்கும்}

அடுக்கிய மரங்கள் ஊடும்
தடுக்கிடும் கற்கள் மீதும்
மடக்கிய துணிபோல் ஓடைப்
படுக்கைகள் கடந்தும் ஓடி... 10

{மடக்கிய துணி - வளைந்து நெளிந்து ஓடும் ஓடைக்கு உவமை}

அரியிடம் அகப்ப டாமல்
நரியது விரைந்த வேளை
தெரிந்ததோர் குகையின் வாயில்
விரிந்தது உயிர்கோர் காவல்! 11

நரியுடல் நுழையும் ஆனால்
அரியுடல் நுழையா தென்னும்
சரியள வந்த வாயில்
இருந்ததே நரியின் பேற்றால்! 12

{பேறு - நல்வினை/அதிருஷ்டம்}

நொடியிலே பாதை மாறி
இடுக்கினுள் நரியும் ஓட,
மடங்கலும் நுழைய முந்த
தடுத்தது சிறிய வாயில்! 13

{மடங்கல் - சிங்கம்}

பலபடி முயன்றும் உள்ளே
சிலவடி கூட செல்ல
முடிந்திடா நிலையால் கோபம்
அடர்ந்தது அரிமா ஆங்கு! 14

மடங்கலை தடுத்து விட்ட
இடுக்கினை எண்ணிப் போற்றிப்
படுத்தது நரியும், மூச்சு
விடுத்தது அமைதி யாக! 15

குகைக்குளே நெடிதி ருக்க
வகையிலை, வெளியில் வந்தே
அகப்படும் நரியென்(று) எண்ணி
முகத்திலே* முகத்தை^ வைத்து... 16

{முகம் - [குகையின்] வாசல், முகம் - சிங்கத்தின் முகம்}

மடங்கலும் காத்தி ருக்கத்
தொடங்கிய(து), உள்ளே நரியும்
நடந்ததை எண்ணிப் பார்த்துக்
கடந்தனம் இன்னல் என்று... 17

{இன்னல் - துன்பம்}

சிலிர்த்தது, தன்னை இந்த
நிலையிலி ருந்து காத்த
தலைவிதி தன்னை மெச்சி
சிலநொடி மகிழ்ந்து, பின்னர்... 18

”அனுதினம் பேணும் இந்தத்
தனுவினால் ஆன தென்ன?
வனத்திலே நேர்ந்த இன்னற்
கணத்திலே செய்த தென்ன?” 19

{தனு - உடம்பு}

குறுக்கிய குகைக்குள் நரிதன்
உறுப்புகள் ஒவ்வொன் றாக
வெறுப்புடன் வினவ, மாற்றம்
இறுத்தன அவையும் நன்கு: 20

{மாற்றம் - பதில், இறுத்தல் - சொல்லுதல்}

"அரிவரும் காலின் ஓசை
தெரிந்தவன் நானே!" என்று
விரித்தது செவியும், மூக்கும்
"தெரிந்தனேன் வாசம்!" என்ன, 21

{விரித்தல் - சொல்லுதல்}

"மடங்கலைக் கண்டும், ஓடும்
தடத்திலே தடைகள் கண்டும்,
இடுக்கினைக் கண்டும் காவல்
படுத்தனேம்!" என்ற கண்கள்! 22

"அடுக்கிய தடைகள் மீறிப்
பிடிபடா வண்ணம் ஓடி
இடுக்கிலே நுழைத்துக் காத்தோம்
அடிகளோம்!" என்ற கால்கள்! 23

{அடிகளோம் - தொண்டு செய்வோர், கால்கள்}

இவணுறுப்(பு) அளித்த மாற்றம்
உவந்தவந் நரிதன் வாலில்
கவனமும் செல்ல "மோனத்
தவமென? உரையுன் தொண்டை?" 24

என்றிட வாலும் "அடியேன்
துன்றினேன் கால்கள் ஊடே,
பின்றினால் பிடிபட் டிருப்போம்!
நன்றிவன் குழைந்த னேன்நான்!" 25

{துன்றுதல் - பொருந்துதல், பின்றுதல் - பின்னால் நீளுதல், வேகம் குறைதல்}

எனச்சொல, நரிசி னந்தே
"எனக்குநீ பயன்த ராமல்
எனைப்பயன் கொண்டாய், வீணோர்
கனம்”எனச் செற்ற தாங்கே! 26

{கனம் - பாரம்}

"பயனிலா வாலே உன்னை
நயந்திலேன், சிங்கம் தின்ன
வழங்கினேன்!" என்று வாலை
நுழைத்தது வாயிற் கப்பால்... 27

{நயந்திலேன் - விரும்பினேன் அல்லேன்}

வெளியிலே இருந்த சிங்கம்
துளிக்கணம் தாழ்த்த லின்றி
வளைத்தது வாலைப் பற்றி;
துளிர்த்தது நரிக்கு ஞானம்! 28

{கணம் - நொடிப்பொழுது}

சிக்கிய வாலோ(டு) உடலும்
சிக்கிய(து) அரிமா வாயில்!
திக்கது நழுவ ஊளை
திக்கிய(து) அரற்றி நரியே!  29

{திக்கு - திசை, திக்கியது - விட்டுவிட்டு ஊளையிட்டது, அரற்றி - [வேதனையில்] அலறி}

'வளைத்திடு ஙப்போல்'* என்று
திளைத்தமிழ் ஔவை சொன்ன
தெளிவுரை உணர்வார் வாழ்வில்
இளைத்திடார், இதனால் அறிக! 30

{திளைத்தமிழ் - துய்க்க (அனுபவிக்க) இனிதான தமிழ்}

*’ஙப்போல் வளை’ என்பது ஆத்திச்சூடி, சுற்றத்தாரின் பயன் வெளிப்படையாகத் தெரியாவிடினும் அவர்களை விடாது நம்மோடே கொள்ள வேண்டும், ஙகரந் தவிர ஙாகார, ஙிகர, ஙீகாரங்கள் முதலிய பிற தமிழெழுத்தில் பயன்படாத போதும், ஙகரத்தின் இருப்பினால் அவையும் இருத்தலைப் போல! 

-வெண்கொற்றன்

Friday, 19 August 2022

கண்ணன் எம் குழந்தை


 

பாலை வனத்தினிலே - மிகப்
    பசித்து வேட்கையுற்றே
மேலை திரிந்திருந்தார் - ஒரு
    மீட்சி தரவல்லபூஞ்
சோலை கண்டதைப் போல் - எங்கள்
    சோர்வைத் தணித்திடவே
ஆலிலை பள்ளிவிட்டு - எங்கள்
    அகத்தினுள் வந்தவனே...

வாய்க்குள் விரலைவிட்டே - என்றன்
    மடியில் உறங்குமுன்றன்
வாயின் கடையொழுகும் - எச்சில்
    வாழ்வை நனைக்குதடா!
சாய்ந்தென் தோளுறங்கும் - போதுன்
    தாள்கள் மார்புதைத்தால்
பாயும் காவிரியாய் - உயிரில்
    பாசம் பெருகுதடா!

உண்ண மறுத்தலையும் - உன்பின்னால்
    ஓடிக் களைப்பதிலும்,
மண்ணை எடுத்துண்ணும் - உன்வாயை
    வழித்துத் துடைப்பதிலும்,
கண்முன் உனைநிறுத்தி - வீட்டுக்
    காரியஞ் செய்வதிலும்
எண்ணும் உவகையுண்டு - அதனை
    எடுத்துச் சொல்வதில்லை!

வீதிச் சிறுவருடன் - நிதம்நீ
    விளையாடச் செல்கையிலே
வாது வழக்குபல - உன்மேல்   
    வந்துவந் துரைத்திடுவார்!
ஏதெனக் கேட்கையிலே - கள்ளம்
    ஏதுமில் லாதவன்போல்
கோதில் நகைபுரிவாய் - உள்ளம்
    குழைந்துள் உருகுமடா!

பாட சாலைசெல்லும் - உனைநான்
    பரிந்து பார்த்திருப்பேன்,
ஏடும் ஆணிகளும் - ஒருகை
    ஏந்த, மறுகையிலே
சீடை முறுக்குவெல்லம் - பெரிய
    செம்பு நிறையவெண்ணெய்
ஆடை மீதுசிந்த - மகிழ்வாய்
    ஆடி நடந்திடுவாய்...

உதித்த நாளுனைநான் - எனது
    உள்ளங் கைகளுக்குள்
மெதுவாய் ஏந்திநின்ற - நினைவே
    விரியும் மனத்தினுக்கே
வதுவை தேடுமொரு - நெடிய
    வாலிபனாய் வளர்ந்த
விதங்கள் புரிவதில்லை - உனையே
    வியந்து பார்த்திருப்பேன்...

விதைத்த மரநிழலில் - விதைத்தோர்
    மெச்சி உறங்குதல்போல்
மதலை உன்னணைப்பில் - மிகவே
    மனத்தில் அமைதிகொள்வோம்...
பதையா தெங்களுள்ளம் - காலன்
    பாசக் கயிறிடினும்,
இதமாய் விடைபெறுவோம் - கண்ணன்
    எங்கள் அமுதமன்றோ?!

***

உரைத்த பெருங்கனவைக் - கண்ணா!
    உண்மை ஆக்கிடவா!
நுரையின் சிற்பமெனத் - தினமும்
    நொறுங்கும் வாழ்வினிலே
கரையும் மனமுனக்காய்! - கண்ணா!
    காலம் நீளவிடாய்!
இரைகின்றேன் உனக்காய்! - கண்ணா!
    இனிமை நிரைத்திடவா!

-வெண்கொற்றன்

(C) Vijayanarasimhan, 2022.

Sunday, 21 March 2021

தவமா? தரிசனமா?

நேரிசைக் கலிவெண்பா


சொற்கள் தமையடுக்கிச் சொன்ன தளைகட்டி

நிற்பர் கவிதை நிரப்புவர் - சிற்பி


சிலைதன்னை ஊன்றிச் செதுக்குதல் போலே

பலகாலம் நோற்றேபா யாப்பர் - உலகோரும்


நன்றென்னும் அந்த நறுஞ்சொல்லைக் கேட்கவே

என்றென்றும் நெஞ்சத்தில் ஏங்குவர் - ஒன்றே


தொழிலென்று கொண்டே தொழில்படுவர் பாட்டில்

எழில்கொண்டு வந்திடவே எண்ணிப் - பொழில்தேடிச்


சோலை வனந்தேடிச் சொல்லா இடந்தேடிக்

காலை இரவென்று பாராமல் - மூளையும்


தொந்திரவில் லாமல் தொழில்பட வேண்டியே

தந்திரங்கள் செய்யத் தலைப்படுவர் - மந்திரம்போல்


இத்தனை செய்தும் இரங்காத இன்கவி

சித்தெனத் தோன்றும் சிறுநொடியில் - அத்தனையும்


சாலமோ மாயமோவெண் தாமரை யாள்தந்த

சீலமோவென் றெண்ணிச் சிலிர்க்கையிலே - நாளும்


இருந்த தவத்திற் கிரங்காதே இன்றோர்

அரிய நொடியில் அருளேன்? - புரிய


முடியாத மாய முழுமுதலோ? ஊன்றிப்

படியாத எந்தன் பவமோ? - அடியார்தம்


அன்பிற் கிளகுமவ் ஆண்டவன்போல் பாட்டும்நம்

என்பில் உருகி எழுவதோ? - என்றால்


அவனியிலே வெண்பா அடுக்குபவ ரெல்லாம்

தவமிருந்து பெற்ற தரமோ? - நவநவமாய்ச்


சாற்றுகின்ற பாக்கள் தனிவரமோ? ஓர்நொடியில்

ஊற்றெடுக்கும் உண்மைத் தரிசனமோ? - மாற்றுரைக்க


யாரும் இருக்காத ஏகாந்த வேளையிலே

ஊறும் இதற்கோர் உரை!


-வெண்கொற்றன் @ விசயநரசிம்மன்


(C)2017, Vijayanarasimhan.

All rights reserved. If you share the post please keep this credit intact. Thank you.